Published:Updated:

கேப்ச்சர் சூப்பரா?

போட்டி - ரெனோ டஸ்ட்டர் VS ஹூண்டாய் க்ரெட்டா VS ரெனோ கேப்ச்சர்தொகுப்பு: தமிழ்

பிரீமியம் ஸ்டோரி

சிவாஜியும் நான்தான்; எம்ஜிஆரும் நான்தான்’ என்று ரஜினி சொல்வதுபோல், ‘எஸ்யூவியும் நான்தான்; க்ராஸ்ஓவரும் நான்தான்’ என்கிறது புதிதாக வந்திருக்கும் கேப்ச்சர். இந்த ஆண்டின் பெஸ்ட் க்ராஸ்ஓவர் விருது வாங்கும் கேப்ச்சரை, ‘ஸ்டைலிஷ் எஸ்யூவி’ என்று சொல்கிறது ரெனோ. அதே ரெனோ - டஸ்ட்டரை ‘உண்மையான எஸ்யூவி’ என்கிறது. ஹூண்டாய் மட்டும் தொக்கா? தனது க்ரெட்டாவை ‘பெர்ஃபெக்ட் எஸ்யூவி’ என்று விளம்பரம் செய்கிறது.   

கேப்ச்சர் சூப்பரா?

கரடு முரடு + ஹைவே என்று இரண்டிலும் மூன்றையும் தாறுமாறாக போட்டிப் போட விட்டால்தான் இதற்கான விடை தெரியும்! டஃப் டிரைவின் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ!

பல்க் லுக்கிங்!

டஸ்ட்டர்: ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டுக் கூவு கூவினாலும், சில கார்களை எஸ்யூவி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காகத்தான் பல்க் டிசைனில் கவனம் செலுத்துகின்றன கார் நிறுவனங்கள். டஸ்ட்டருக்கு இதில் பேஸ்மென்ட் முதல் பில்டிங் வரை எல்லாமே ஸ்ட்ராங்தான். ரெனோவின் ‘MO’ பிளாட்ஃபார்மில், 1,421 கிலோ எடையில் தயாராவதுதான் இதற்குக் காரணம். 2012-லிருந்து டஸ்ட்டர் மனதில் நிற்பதற்கும், இதன் அழகான பல்க் டிசைன்தான் காரணம். இதை மட்டுமே வைத்துக் காலம் தள்ள முடியாதல்லவா? நடுநடுவே ஃபேஸ்லிஃப்ட்டுகள், ஸ்பெஷல் எடிஷன் என்று வருவதெல்லாம் ஓகே! புரொஜெக்டர் LED ஹெட்லைட்ஸ், DRL என்று காலத்துக்கேற்ப தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டாமா?

க்ரெட்டா: டிசைனில் கொஞ்சம் ரிச் லுக் கிடைப்பதுதான் க்ரெட்டாவின் பலம். இதில் டூயல் டோன் பெயின்ட் ஸ்கீம் வேறு SX + வேரியன்ட்டில்  கிடைக்கிறது. ஹெட்லைட்டில் ஆரம்பித்து ஸ்டைலான அலாய் வீல், ஷார்ப்பான கோடுகள்... என பம்பர் டு பம்பர் அத்தனை ஸ்டைல். திடீரென உங்கள் காரின் ரியர்வியூ மிரரில் ஏதோ ஒரு பிரீமியம் ஹூண்டாய் கார் வருவதைக் கவனித்தீர்கள் என்றால், அது க்ரெட்டாவாக இருக்கலாம். நீங்கள் ஒரு தடவை ஹூண்டாய் வாங்கிவிட்டால், வேறு கார் பக்கம் போக விடாமல் வைத்திருப்பதுதான் ஹூண்டாயின் பலம். க்ரெட்டாவும் அதில் கில்லி. எஸ்யூவி என்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கலாம். 190 மிமீ ஓகேவா?

கேப்ச்சர் சூப்பரா?

கேப்ச்சர்: டஸ்ட்டரின் பிளாட்ஃபார்மில் ரெடியாகும் கார் என்பதற்காகவே, கேப்ச்சரை எஸ்யூவி என்றும் சொல்லலாம். கார் ஸ்டைலிஷாக இருப்பதுடன், மற்ற இரண்டையும்விட இதன் நீளம் அதிகம். க்ரெட்டாவைவிட வீல்பேஸும் அதிகம். 2673 மிமீ. 17 இன்ச் அலாய் வீல்கள், கேப்ச்சரின் பெரிய வீல் ஆர்ச்களுக்குப் பக்காவாகப் பொருந்துகின்றன. ‘C’ ஷேப் DRL, ரிப்பிள் எஃபெக்ட் LED டெய்ல் லைட்ஸ். அப்புறம் பெரிய லைக் -  இந்த செக்மென்ட்டில் LED ஹெட்லைட் கொண்ட முதல் கார், கேப்ச்சர்தான். இண்டிகேட்டர்கூட ஆடியின் ஸ்டைலிங்கை நினைவுப்படுத்தியது. கறுப்பு நிற ரூஃப், ஸ்டைல்தான். ஆனால், ரூஃப் ரெயில் எங்கே ரெனோ?

கேபினுக்குள்ளே...

டஸ்ட்டர்: ‘அப்போ சொன்ன அதே மரமா’ என்று ‘தெய்வத் திருமகள்’ படத்தில் ஒரு டயலாக் வரும். அதேபோல், 2012-ல் இருந்த அதே கேபினா என்றால், கிட்டத்தட்ட ‘ஆம்’ என்று சொல்லலாம். டச் ஸ்கிரீனை இவ்வளவு கீழே வைத்ததால், எர்கானமிக்ஸ் செம அடி வாங்குகிறது. குனிந்தா பயன்படுத்த முடியும்? முன் பக்க சீட்களின் சப்போர்ட், டிரைவர் சீட் அட்ஜஸ்ட் ஓகே! ஆனால், லெதர் சீட்டுகள் இல்லை. இங்கே டஸ்ட்டரில் மட்டும்தான் இந்தக் குறை. மொத்தத்தில், டேஷ்போர்டு டிசைனில் இன்னும் தீயா வேலை செய்யணும் ரெனோ! மெட்டீரியல் தரமும் சுமார்தான்.   

கேப்ச்சர் சூப்பரா?

க்ரெட்டா: வெளியேயும் பிரீமியம்; உள்ளேயும் பிரீமியம். இதுதான் க்ரெட்டாவின் ஸ்பெஷல். இதன் டூயல் டோன் டேஷ்போர்டு டிசைன், அத்தனை நீட் அண்டு க்ளீன். பிராக்டிக்கலாகப் பயன்படுத்தவும் அம்சமாக இருக்கிறது. ஸ்டோரேஜுக்கு எவ்வளவு இடவசதி? எர்கானமிக்ஸும் சரியாக இருக்கிறது. அதாவது, சாலையிலிருந்து பார்வையை எடுக்காமலே, எல்லாவற்றையும் ஆப்ரேட் செய்ய வசதியாக இருக்கிறது க்ரெட்டாவில். டச் ஸ்கிரீனும் அருமை. சுருக்கமாகச் சொன்னால், யூஸர் ஃப்ரெண்ட்லி. அதது இருக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக இருப்பதில் க்ரெட்டாவுக்குக் கைத்தட்டல். டாப் எண்டில் லெதர் சீட்டுகள், சாஃப்ட் குஷனிங் என்பதால், லாங் டிரைவுக்கு சூப்பராக இருக்கலாம்.  

கேப்ச்சர் சூப்பரா?

கேப்ச்சர்: உள்ளே நுழைந்ததும் என்னைக் கவர்ந்த முதல் அம்சம் - இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். உள்ளே டிஜிட்டல் ஸ்பீடோ. ஸ்டீயரிங்குக்கு உள்ளே ஏதோ வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருப்பது போலவே இருந்தது. க்ளாப்ஸ் கேப்ச்சர். நடுவே டிஜிட்டலில் ஸ்பீடோ மீட்டர் அருமை. கதவுகளுக்கு ‘பியர்ல் ஃபினிஷ்’ வித்தியாசம். சிங்கிள் பீஸ் சென்டர் கன்ஸோல்கூட சூப்பர். சீட்களுக்கு மட்டுமில்லை; ஸ்டீயரிங் வீலுக்கும் லெதர் ஃபினிஷ். அங்கங்கே மாடர்ன் வசதிகள். ஆனால், அதற்கப்புறம் பிளாஸ்டிக்குகளில் ஆரம்பித்து டெட் பெடல் வரை எல்லாமே ஸாரி. அனைத்தையும் டஸ்ட்டரிலிருந்து கேப்ச்சர் செய்ததால், கொஞ்ச நேரத்தில் கேப்ச்சர் போரடித்துவிட்டது. ஆர்ம் ரெஸ்ட், ஹேண்ட் பிரேக்கில் இடிக்கிறது. டெட் பெடல் இல்லாததால் கிளட்ச்சுக்குப் பக்கத்தில் கால் இடிக்கிறது. உயரம் குறைவானவர்கள் முன் சீட்டில் உட்கார்ந்தால், பார்வை இடிக்கிறது. எத்தனை இடிகள்... என்னாச்சு கேப்ச்சர்?

பட்ஜெட் கேட்ஜெட்ஸ்!

டஸ்ட்டர்: வெளியே விறைப்பாக இருந்தாலும், உள்ளே பம்முகிறது டஸ்ட்டர். அதாவது, கேட்ஜெட் மற்றும் வசதிகளைப் பொறுத்தவரை டஸ்ட்டர் கொஞ்சம் வீக். LED ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், கீலெஸ் என்ட்ரி, லெதர் சீட்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு, பின் பக்க ஏ.சி வென்ட்... இத்தனையையுமா காலி செய்வது ரெனோ? நல்லவேளை - டச் ஸ்க்ரீனில் ரிவர்ஸ் கேமராவாவது இருக்கிறது.

க்ரெட்டா: காற்றுப் பைகள் விஷயத்தில் க்ரெட்டாவுக்குப் பெரிய கட்டிப்பிடி. SX (O) வேரியன்ட்டில் 6 காற்றுப் பைகள். க்ரூஸ் கன்ட்ரோல், LED ஹெட்லைட், ஆட்டோ ஹெட்லைட் மற்றும் வைப்பர் - இவற்றை க்ரெட்டாவில் எதிர்பார்க்க முடியாது. பரவாயில்லை... கீலெஸ் என்ட்ரி, லெதர் சீட், பெரிய 7 இன்ச் டச் ஸ்கிரீன், அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார் ப்ளே, ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏ.சி வென்ட் என்று தேவையான வசதிகள் எல்லாமே இருக்கின்றன.

கேப்ச்சர்: இந்த மூன்றில் சில விஷயங்களில் கேப்ச்சர், தனி ஒருவன். குழந்தைகளுக்கான ISOFIX சீட் மவுன்ட், LED ஹெட்லைட் கேப்ச்சரில் மட்டும்தான் உண்டு. Platine வேரியன்ட்டில் பக்கவாட்டுக் காற்றுப்பைகள் உண்டு.

அப்படியென்றால், மொத்தம் 4 காற்றுப்பை. டச் ஸ்கிரீன் டஸ்ட்டரில் இருந்து எடுத்ததுதான். ஆனால், இது சூப்பர். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளேவைத் தவிர, எல்லா வசதிகளையும் கொடுத்ததற்காகவே ரெனோவுக்குத் தனியாக ஒரு விருது கொடுக்கலாம்.

எஸ்யூவி-க்கு, பாதுகாப்புதான் முக்கியமான அம்சம். அதனால், ஸ்டாண்டர்டாக வரும் ஏபிஎஸ், 2 காற்றுப் பைகள் என்று சில விஷயங்களில் மூன்றுக்குமே ஸ்மைலிஸ்.

வ்வ்ர்ர்ர்ரூம்...

டஸ்ட்டர்: டஸ்ட்டரின் 1.5 லிட்டர் டீசல், 110 bhp பவர் கொண்ட டீசல் இன்ஜின் பற்றி ஊருக்கே தெரியும். 24.5 kgm டார்க், 1,750 rpm-ல் வெளிப்படும். அதேபோல், இந்த டர்போ டீசல் இன்ஜினின் டர்போ லேக்கும் உலகறிந்ததே! இதுக்கு மாற்று வழி ஏதும் இல்லையா ரெனோ? ஆனால், நெடுஞ்சாலை என்று வந்துவிட்டால், இந்த இன்ஜினின் பன்ச் இருக்கிறதே... ஃபியட் இன்ஜின்களுக்குச் சவால் விடும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் ஷார்ட் கியரிங், சிட்டி டிராஃபிக்கில்கூட எடுபடும்படி அமைத்திருக்கிறார்கள். ஆஃப் ரோடு என்று வரும்போது, இந்த ஷார்ட் கியரிங்குக்குக் கைகூப்ப வேண்டும்போல் தோன்றுகிறது. ஒவ்வொரு கியரிலும் க்ரெட்டா, கேப்ச்சரை விட எத்தனை வேகம்? ஆனால், அதிக ஆர்பிஎம்களில் அதிக சத்தம் போடுவது,  ஏனோ மஹிந்திரா கார்களை நினைவுபடுத்துகிறது. இன்ஜின் சத்தத்துக்கு ஒரு சொல்யூஷன் ப்ளீஸ் ரெனோ! 

கேப்ச்சர் சூப்பரா?

க்ரெட்டா: இங்கிருப்பதிலேயே க்ரெட்டாவுக்குத்தான் எல்லாமே அதிகம். அதிக பவர் - 128 bhp. அதிக டார்க் - 26 kgm. சிசியும் அதிகம் - 1.6 லிட்டர். ஆனால், லைட் வெயிட்டாக இருக்கிறது. எனவே ஆக்ஸிலரேஷனும் அதிகமாகத்தானே இருக்க வேண்டும்? ஆம், 0-100 கி.மீ-யை வெறும் 10.81 விநாடிகளில் கடக்கிறது க்ரெட்டா. 5,000 rpm வரை ஈஸியாக ரெவ் செய்ய முடிகிறது க்ரெட்டாவில். சிட்டிக்குள் க்ரெட்டாவின் டிரைவிங் செம ஜாலி. லைட் கிளட்ச்சும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸும்தான் இதன் ஹைலைட்!

கேப்ச்சர்: டஸ்ட்டரின் பிளாட்ஃபார்ம் மட்டுமில்லை; டஸ்ட்டரின் அதே இன்ஜினும்தான். 1.5 லிட்டர் டீசல், 110 bhp பவர், டார்க் மட்டும் 0.5 kgm குறைவு. அப்படியென்றால், பர்ஃபாமென்ஸும் கிட்டத்தட்ட டஸ்ட்டரைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஸாரி. அதற்கு கியரும் கிளட்ச்சும் ஒத்துழைக்க வேண்டும். கியரில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஹெவி கிளட்ச்சுடன் கிடந்து போராடினேன். 1,700 rpm வரைதான் இந்தப் போராட்டம். டர்போ லேக்குக்கு இதிலும் விடையில்லை. 2,000 rpm தாண்டிவிட்டால்.. அட! 4,800 rpm வரைகூட ஸ்ட்ராங்காக ரெவ் ஆகிறது. அப்படியென்றால், மிட் ரேஞ்ச்சில்தான் கேப்ச்சர் சூப்பர். எனவே, ஓவர்டேக்கிங்கில் சூப்பர் ஃபன் கிடைக்கிறது. ஹைவேஸில் அசத்தலான க்ரூஸர் - கேப்ச்சர். NVH லெவலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹேண்ட்லிங் அண்டு ஆஃப் ரோடிங்

டஸ்ட்டர்: ரைடிங் அண்டு ஆஃப் ரோடிங் என்று வந்துவிட்டால், ‘என்னத்தைக் குறை சொல்ல’ என்றுதான் டஸ்ட்டரின் முன்பு கைகட்டி நிற்க முடியும். கடினமான சாலைகளை ஈஸியாகச் சமாளிப்பதுதான் இதன் பிறவிக்குணமே! இதற்குக் காரணம், லைட் வெயிட் ஸ்டீயரிங். ஆல் வீல் டிரைவில் சொல்லவே வேண்டாம். ஹைவேஸிலும் நல்ல ஸ்டெபிலிட்டி. இதுதான் டஸ்ட்டரின் ப்ளஸ். ஹைவேஸிலும் ஆஃப் ரோட்டிலும் அவ்வளவாக அலுங்கல் குலுங்கல் தெரியாத அளவு சஸ்பென்ஷனை வடிவமைத்திருக் கிறார்கள். கிரவுண்ட் கிளியரன்ஸ் வேறு - 205 மிமீ. சந்தேகமே வேண்டாம் - எப்படிப்பட்ட கரடுமுரடான காட்டுக்கும் டஸ்ட்டரை நம்பிப் போகலாம். இதன் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில், இதற்கான ட்ரிக் இருக்கிறது.

க்ரெட்டா: ஓட்டும்போது நன்றாகவே தெரிகிறது. இது நிச்சயம் நகர்ப்புறத்துக்கான எஸ்யூவி. டஸ்ட்டரின் ஸ்டீயரிங் லைட் வெயிட்டாக இருக்கிறதே என்று நினைத்தால், க்ரெட்டா அதைவிட ஈஸியாக இருக்கிறது. குறைந்த வேகங்களில் ரெனோ கார்களைவிட ஈஸியாகக் கையாள முடிகிறது. டஸ்ட்டரிலும் கேப்ச்சரிலும் ஹைவேஸில் பறந்துவிட்டு க்ரெட்டாவில் அமர்ந்து ஓட்டும்போது, லேசான பய உணர்வு தெரிந்தது. பாடி ரோல்தான் இதற்குக் காரணம். 100 கி.மீ-க்கு மேல் போகும்போது இதனால்தான் பயமானது. கி.கிளியரன்ஸ் 190 மிமீதான். மைல்டான ஆஃப் ரோடிங்குக்குத்தான் நான் க்ரெட்டாவை பரிந்துரை செய்வேன்.

கேப்ச்சர்: டஸ்ட்டர் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. கேப்ச்சரில் அப்படியே டஸ்ட்டரைப் பார்க்க முடிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸும் 5மிமீ அதிகம்! நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ப சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப்பாக இருந்தாலும், கஷ்டமான சாலைகளை ஈஸியாக கேப்ச்சர் செய்து கிளம்புகிறது கேப்ச்சர். ஐரோப்பிய கார்களின் கையாளுமைக்கு நிகராக இது இருப்பதாக எனக்குத் தோன்றியது. குறையே இருக்காதோ என்று நினைத்தேன். ‘இதோ வந்துட்டேன்’ என்கிறது இதன் எலெக்ட்ரோ-ஹைட்ராலிக் ஸ்டீயரிங். குறைந்த வேகங்களில் திருப்புவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். இதுவே நெடுஞ்சாலைகளிலும், சில ட்விஸ்ட் திருப்பங்களிலும் சாலையோடு ஸ்டீயரிங் கனெக்ட் ஆகியிருப்பது நன்றாக ஃபீல் ஆனது. கடுமையான குன்றுப் பாதைகளிலும்கூட கேப்ச்சர் அசத்தியது. கையாளுமையில் பெஞ்ச்மார்க்கை ஏற்படுத்திவிடும் போல கேப்ச்சர்.

கேப்ச்சர் சூப்பரா?

ற்கெனவே சொன்னபடி, பிரீமியம் லுக்தான் க்ரெட்டாவின் ப்ளஸ். இதன் கேபின் தரமும், வசதிகளும் ‘க்ரெட்டாஆவ்!’ ஸ்டோரேஜ் இடவசதியிலும் க்ரெட்டாவில் மனநிறைவு. இங்கிருப்பதிலேயே சீட் வசதியில் பாஸ் மார்க் இல்லை; ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பதும் க்ரெட்டாதான். மைல்டாக ஆஃப் ரோடிங்கூட கேரன்டிதான். எப்போதுமே 100-ல் பறக்கப்போவதில்லை; பாடி ரோல்கூட விட்டுத் தள்ளுங்கள். ஆனால், இந்த ஒரே ஓர் இடத்தில் க்ரெட்டா சறுக்குகிறது. விலை! ஆண்டுகள் ஆக ஆக வீட்டு உரிமையாளர் வாடகையைக் கூட்டுவதுபோல், ஒவ்வொரு தடவையும் விலையைக் கூட்டிக்கொண்டேவா போவது ஹூண்டாய்? ரூ.14 லட்சத்தில் இருந்த ஒரு 5 சீட்டர் கார், இப்போது 18 லட்ச ரூபாய் வரை விலையேறி நிற்பது நியாயமல்ல.

‘அடிக்கடி ஆஃப் ரோடு செய்வேன்; ஒரு செமையான 4 வீல் டிரைவ் கார் வேணும். கம்மியான விலையில்’ - இப்படி நினைத்து முடிக்கும்போதே நம் முன்னால் வந்து நிற்கும் டஸ்ட்டர் AWD டிரைவ். இந்த செக்மென்ட்டின் பெஸ்ட் ரைடிங் கார், டஸ்ட்டர்தான் என்றால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. சில நேரங்களில், ‘இந்த ரோட்டுல கார் போகுமா’ என்கிற சந்தேகத்தையெல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது டஸ்ட்டர். ஆனால், வசதிகள்... ப்ச்! 4WD என்கிற ஒரே அஸ்திரத்தை வைத்துக்கொண்டு, மற்ற விஷயங்களைக் காலி செய்தால் எப்படி? ஸாரி ரெனோ!

ஒருவேளை - கேப்ச்சர் வருவதற்கு முன்னால் ஒரு போட்டி வைத்திருந்தால், நிச்சயம் டஸ்ட்டர்தான் அதில் ஜெயித்திருக்கும். டஸ்ட்டர் செய்யும் எல்லா வேலைகளையும் செய்கிறது கேப்ச்சர். டஸ்ட்டரின் ஆஃப் ரோடிங் பாராவைப் படியுங்கள். அது அப்படியே கேப்ச்சருக்கும் பொருந்தும். காரணம், டஸ்ட்டரிடம் இருந்துதான் முக்கியமானவற்றையெல்லாம் கேப்ச்சர் செய்திருக்கிறது கேப்ச்சர். கேப்ச்சரின் கேபின் தரம் சுமார்தான்; இடவசதிகூட அவ்வளவாக இம்ப்ரஸ் பண்ணவில்லைதான். ஆனால் டஸ்ட்டர், க்ரெட்டாவுடன் போட்டி போட முடியாத இடம் - வசதிகள் மட்டும்தான். கேப்ச்சர், இங்கேதான் டஸ்ட்டரைத் தாண்டி ஒரு படி மேலே ஏறுகிறது. அதற்கு நாம் கொடுக்கும் சரியான விலை - எல்லாமே கேப்ச்சரில் பெர்ஃபெக்ட். ரெனோ சொல்வதுபோல், இதில் ஸ்டைலும் சேர்ந்து கொண்டதில் வின்னராகிறது கேப்ச்சர்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு