பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

கடந்த சில ஆண்டுகளைப்போல, இந்த ஆண்டும் சிறந்த கார் மற்றும் பைக் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமானதாக இல்லை. இந்த ஆண்டின் சிறந்த பைக் என்ற கிரீடத்தை வெற்றிகொள்வதற்கு, முப்பதுக்கும் மேற்பட்ட பைக்குகள் களத்தில் இருந்தன. அதேபோல, இந்த ஆண்டின் சிறந்த கார் என்ற மகுடத்தை வெற்றிகொள்ள, ஐம்பதுக்கு மேற்பட்ட கார்கள் போட்டிப் போட்டன.

பொருளுக்கு ஏற்ற விலை, பாதுகாப்பு அம்சங்கள், பர்ஃபாமென்ஸ், இடவசதி, டிசைன், ஓட்டுதல் அனுபவம், புதிய தொழில்நுட்பம்... போன்ற பல அளவுகோல்களை வைத்துக்கொண்டு, ‘இந்த ஆண்டின் சிறந்த கார் எது?' என்ற தேடலைத் துவங்கினோம். சிறப்பு அம்சங்களில், வெர்னா அதிக மதிப்பெண்கள் பெற்றது; டிசைனில், டாடா நெக்ஸான் மதிப்பெண்களைக் குவித்தது. ஆனால், மேலே சொன்ன அளவுகோல்கள் பலவற்றிலும் ஜீப் காம்பஸ் கணிசமான மதிப்பெண்களைப் பெற்று, முதல் இடத்தை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், விடாப்பிடியாக நின்று ஜெயித்தது. புத்தம் புதிய ஃப்ரெஷ்ஷான வடிவமைப்பும், ஆஃப் ரோடிங் திறனும் வெற்றிக் கோப்பையை ஜீப்பிடம் கொண்டுசேர்த்தன.

அதேபோல, 'இந்த ஆண்டின் சிறந்த பைக் எது?' என்பதைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வில் பஜாஜ் டொமினார், யமஹா FZ25, கேடிஎம் டியூக் 390 ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. எண்ணிக் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்பு என்று பார்த்ததில், டொமினார் முதல் இடத்தில் இருந்தாலும், ஈஸியாக ஓட்டுவதற்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் பைக் என்ற அளவுகோலில், FZ25 முன்னணியில் இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் பர்ஃபாமென்ஸ் ஆகிய ஏரியாக்களில் கேடிஎம் டியூக் 390, மற்ற பைக்குகளைக் காட்டிலும் பல படிகள் முன்னேறி வெற்றிக்கோப்பையை ஜெயித்திருக்கிறது.

வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வழக்கம்போல இந்த ஆண்டும் நீங்கள் கடிதம் மூலமாகவும், எங்கள் இணையதளத்துக்கு விஜயம் செய்தும், உங்கள் வாக்குகளைச் செலுத்தி வழிக்காட்டியமைக்கு, நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கார்களின் மீது மோகம் கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமோ, அதே அளவுக்கு கார் டிசைன் மீது மோகம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம். கார் டிசைனர்களை இவர்கள் எந்த அளவுக்குக் கொண்டாடுகிறார்கள் என்பதே, இந்தக் கலை மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்புக்கு சாட்சி. இத்தகைய வாசகர்களுக்காக டிசைனில் இருக்கும் நுட்பங்கள் பற்றி நம்மிடம் பேச, அசோக் லேலாண்டில் டிசைன் பிரிவில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த சத்தியசீலன் முன்வந்திருக்கிறார். அதேபோல, பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் லாஜிஸ்டிக்ஸ் குறித்து, இந்தத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் நம்மிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு