பிரீமியம் ஸ்டோரி

ப்பானைச் சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்ட், லெக்ஸஸ். கடந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு வந்தது லெக்ஸஸ், சென்ற ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட LS 500H என்ற விலை உயர்ந்த காரை, இப்போது விற்பனைக்கும் கொண்டுவந்துள்ளது லெக்ஸஸ்.   

லெக்ஸஸ் - சக்சஸ்!

 ஹைப்ரிட் கார்களுக்கு 43 சதவிகித ஜி.எஸ்.டி வரிக்குப் பிறகு, கார் நிறுவனங்கள் ஹைப்ரிட் வகை கார்களைக் கொண்டுவருவதற்குத் தயக்கம் காட்டும்  இந்தச் சமயத்தில், டொயோட்டா துணிச்சலான முயற்சியை எடுத்திருக்கிறது. ஹைப்ரிட் செடான் காரான இது லக்ஸுரி, அல்ட்ரா லக்ஸுரி, டிஸ்டின்க்ட் என மூன்று வேரியன்டில் கிடைக்கிறது. இதன் விலை முறையே 1.77 கோடி, 1.82 கோடி, 1.93 கோடி ரூபாய்.

LS 500H காரில் லெக்ஸஸின் ட்ரேட்மார்க் அம்சங்களான தனி பம்பர் இல்லாத முன்பக்க ஸ்பின்டில் க்ரில், ஷார்ப்பான பாடி லைன்ஸ், 20 இன்ச் அலாய் வீல்கள், LED ஹெட் லைட் என காருக்கு பிரீமியம் லுக் தரும் அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. காரின் முன் பக்கத்தில் உள்ள க்ரோம் வேலைப்பாடுகள் இந்த காரின் ஸ்டைல் அம்சங்களைத் தனித்துக் காட்டுகின்றன. மேலும், பாடி லைன்களை ஷார்ப்பாகக் காட்டவும் இவை உதவுகின்றன. இந்த கார் லெக்ஸஸின் புதிய GA-L பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளதால், இதன் எடையும் உயரமும் குறைவாக உள்ளன. தற்போது சந்தையில் கிடைக்கும் LS காரைவிட புதிய LS500H, 15 மி.மீ உயரம் குறைவானதாக உள்ளது. இந்த செக்மென்டில் நீளமான காராகவும் உள்ளது LS. இதனால், இந்த காரில் லெக் ரூமும் தேவையான அளவு இருக்கிறது. காரின் உட்புறம் முழுவதும் ஜப்பானின் Takumi எனப்படும் டிசைன் கோட்பாட்டின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. Takumi என்றால் ஜப்பானிய மொழியில் சிற்பி என்று பொருள். இந்த காரின் இன்டீரியர் முழுக்கக் கைகளால் வடிவமைக்கப்பட்டது என்பதால், இந்தப் பெயர் என்று சொல்கிறது லெக்ஸஸ். மேலும், ஜப்பானின் ஓரிகாமி டிசைன் எனப்படும் பாரம்பர்ய டிசைன் கோட்பாடும் இதில் கலந்திருப்பதாகச் சொல்கிறது லெக்ஸஸ். 

லெக்ஸஸ் - சக்சஸ்!

புதிய லெக்ஸஸில் 3.5 லிட்டர் V-6 பெட்ரோல் இன்ஜின் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டாருடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் காரில் இருக்கும் எடை குறைவான 310.8kV லித்தியம் அயான் பேட்டரியில் இருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த காரில் கியர்பாக்ஸுக்குப் பதிலாக மல்ட்டி ஸ்டேஜ் ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் 10-ஸ்பீடு ஷிஃப்ட் கன்ட்ரோலர் எலெக்ட்ரிக் மோட்டாரையும், இன்ஜினையும் ஒருங்கிணைத்துக் கிடைக்கும் பவரை, அதிக டார்க்காக மாற்றி 24 சதவிகிதம் டிரைவ் ஃபோர்ஸை அதிகரித்துத் தருவதாக லெக்ஸஸ் பொறியாளர்கள் கூறுகின்றனர். 50 கி.மீ வேகத்துக்கு மேல் போகும்போது இன்ஜின் ஹைப்ரிட் மோடுக்கு மாறிவிடும் இதனால் 6,000 முதல் 6,600 rpm-ல் முழு சக்தியும் வெளிப்பட்டுவிடுகிறது. 354bhp திறனை வெளிப்படுத்தும் இந்த கார் லிட்டருக்கு 15.38 கி.மீ மைலேஜ் தரும் என்று லெக்ஸஸ் கூறியுள்ளது. குறைந்த எடை மற்றும் குறைவான இன்ஜின் rpm-மில் அதிக டார்க் கிடைத்துவிடுவதால் LS 500H கார் 100 கி.மீ வேகத்தை 5.4 விநாடிகளில் அடைந்துவிடும் என்கிறார்கள்.  

லெக்ஸஸ் - சக்சஸ்!

அதிக சௌகரியத்துக்காக இந்த காரில் மல்ட்டி லிங்க் ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் பலவிதமான ஆங்கில் மற்றும் உயரம் என 28 வகையில் முன்பக்க சீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். மேலும், காரில் heated massage சீட்டுகள் இருக்கின்றன. 12.3 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 23 ஸ்பீக்கர்கள் கொண்ட Mark Levinson சவுண்ட் சிஸ்டம் மற்றும் active noise cancellation எனப் பல விலை உயர்ந்த அம்சங்களும் இதில் உண்டு.

LS காரில் முக்கியப் பகுதிகளான ராக்கர், பில்லர் மற்றும் ரூஃப் High Tensile ஸ்டீல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. காரின் மற்ற பகுதிகளில் குறைந்த சென்டர் ஆஃப் கிராவிட்டிக்காக அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரில் கூடுதலாக VDIM மற்றும் LDH ஸ்டீயரிங் தொழில்நுட்பம் இருப்பதால், காரின் ஸ்டீயரிங், இன்ஜின் வேகம், பிரேக், கியர் பொசிஷன் போன்றவற்றை வைத்துத் தேவையான அளவு ஸ்டீயரிங் ஆங்கிலை முடிவு செய்யும். இதனால் அனைத்து ஸ்பீடிலும் கார் ஸ்திரமாக இருக்கும்.  

லெக்ஸஸ் - சக்சஸ்!

காரில் உள்ள பட்டன்களைக் குறைத்துவிட்டு ஏ.சி, க்ரூஸ் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களின் கன்ட்ரோல்களை டச் ஸ்கிரீனில் கொண்டுவந்துள்ளது லெக்ஸஸ். காரின் சீட்டில் உள்ளவர்களுக்காக 11.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளன.

காரின் பாதுகாப்பு வசதிகளாக LED cornering லைட், 8 காற்றுப் பைகள், காரின் மீது யாராவது வந்து மோதும் பட்சத்தில் காரின் பேனட் திறந்துகொள்ளும் Pop Up Hood எனும் அம்சம், விண்ட் ஷீல்டில் வேகம் மற்றும் காரின் வேகத்தைக் காட்டும் head-up display, காரின் உள்ளிருந்தே காரைச் சுற்றி இருப்பதைப் பார்க்கக்கூடிய Panoramic View Monitor ஆகிய வசதிகளும் உள்ளன.

தற்போது வரை லெக்ஸஸ் பிராண்டில் ஹைப்ரிட் கார்களை மட்டுமே லெக்ஸஸ் களமிறக்கிக்கொண்டிருந்தது. இப்போது புதிதாக லெக்ஸஸ் LS 500H  வந்திருப்பதால் அதற்கு மெர்ஸிடீஸ் S-க்ளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி A8. ஜாகுவார் XJL போன்ற கார்கள் போட்டியாளர்களாகக் வந்திருக்கிறார்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு