Published:Updated:

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?
“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

போட்டி - மஹிந்திரா தார் VS ஃபோர்ஸ் கூர்க்காதொகுப்பு: தமிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

நெடுஞ்சாலையில் பறக்கும்போது தெரியாது; சாலையே இல்லாத கரடுமுரடான பாதைகளில் சிக்கும்போதுதான் யோசிப்போம்: ‘ச்சே... இந்த நேரத்துல ஜீப் இருந்தா எப்படி இருக்கும்?’ சாலை முடிவடையும்போதுதான், ஜீப்களின் பயணம் தொடங்கும் என்பது மிகச் சரி. இதற்காகவே தேடித் தேடிப் பழைய ஜீப்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள் ஆஃப் ரோடு பிரியர்கள். 2010-ல் இந்தக் குறையை ‘தார்’ ஜீப் மூலம் தீர்த்துவைத்தது மஹிந்திரா. 

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

சொல்லப்போனால், ‘தார்’ வந்ததுக்குப் பிறகே ஏகப்பட்ட ஆஃப் ரோடு கிளப்கள் உருவாயின. தார் ஜீப்பின் வெற்றி எப்படிப்பட்டது என்றால், தனக்கு முன்பே 2008-ல் வந்துவிட்ட ஃபோர்ஸ் மோட்டார்ஸின் கூர்க்காவை மக்கள் நினைவுக்கே கொண்டு வராத அளவுக்கு வெற்றிக்கொடி நாட்டியது. இதற்கு ஃபோர்ஸ் மோட்டார்ஸும் ஒரு காரணம். 2013-ல்தான் இதை சீரியஸ் மேக்-ஓவர் செய்து கொண்டுவந்தது ஃபோர்ஸ்.

ரஜினிக்குப் போட்டி கமல் என்பதுபோல், இந்த நேரத்தில் தார்-க்குப் போட்டி வேறு யாராக இருக்க முடியும்? தாரையும் கூர்க்காவையும் தாறுமாறான சாலைகளில் ஓட்டிக் கடுமையான போட்டி வைத்தோம்.

கார் டிசைனா... ஜீப் டிசைனா?

பழைய கிளாஸிக் ஜீப் லுக்கில் ஜம்மென்று இருப்பதுதான் தார்-க்கு அழகே! முன் பக்க பானெட் இதற்கு சாட்சி. இதில் இருப்பது ‘சாஃப்ட் டாப்’ ரூஃப்தான். கூர்க்காவின் டிசைன் வேற லெவல். கார்கள்போல ஷார்ப்பான க்ரீஸ் கோடுகள், ஃப்ளாட்டான பேனல்கள் என்று மெர்சிடீஸ் G-Wagon ஜீப் சாயல் அடிக்கிறது. ‘GTA’ எனும் கம்ப்யூட்டர் கேமில் அந்த பென்ஸ் ஜீப் மிகவும் பிரபலம். தாரைவிடத் தோற்றத்தில் பெரிதாக இருக்கிறது. பயணம் போகும்போது பொருள்களைக் கட்டி எடுத்துப்போக ரூஃபில் வசதி உண்டு. இதன் ஹார்டு டாப் பில்டு குவாலிட்டியும் அருமை. ‘Built for War’ எனும் அந்த லோகோவே சூடேற்றுகிறது.

ஆஃப்ரோடில் எது டஃப்?

தாரில் இரண்டு மாடல்கள் இருக்கின்றன. CRDe மற்றும் DI. 2.5 DI இன்ஜினில் பவர் மிகவும் குறைவு (63 bhp.) நாம் கிளப்பியது 2.5 CRDe, 107 bhp இன்ஜின். எல்லாமே மாஸ். டார்க் 24.7 kgm. இதுவே கூர்க்காவில் 2.6 லிட்டர் இன்ஜின். தாரைவிட 100 சிசி அதிகம் என்றாலும் பவரிலும் டார்க்கிலும் குறைவுதான். 85 bhp, 23 kgm. இரண்டிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். இத்தனைக்கும் தார்-ஐவிட (1,750 கிலோ) கூர்க்காவின் எடை 300 கிலோ அதிகம். (2,050 கிலோ)  

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

கூர்க்காவில் முன்/பின் என இரண்டுக்கும் மேனுவல் டிஃப்ரன்ஷியல் லாக் வசதி உண்டு. தார்-ல் ரியர் ஆக்ஸிலை மட்டும்தான் லாக் பண்ண முடியும். 2015-ல்தான் இந்த வசதியே வந்தது. டிஃப்ரன்ஷியல் லாக் என்பது ஒரு ஆஃப் ரோடு வாகனத்துக்கு ரொம்ப முக்கியமான அம்சம். ஆக்ஸில் மூலம் வீல்களை லாக் செய்வதுதான் இதன் வேலை. தேவையான வீல்களுக்கு மட்டும் இதன் மூலம் ட்ராக்‌ஷனைச் செலுத்த முடியும்.

உதாரணத்துக்கு, பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார் மேலெழும்ப ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போது, எல்லா வீல்களுக்கும் கன்னாபின்னாவென ட்ராக்‌ஷன் கிடைத்து, எதிரே இருக்கும் பாறையில் கார் மோதி ஸ்டக் ஆவது சாதாரண மெக்கானிக் டிஃப்ரன்ஷியல் லாக்குகளில் நடக்கும். தார்-ல் கவனமாக இருக்க வேண்டும். கூர்க்கா இதில் அடுத்த லெவலுக்குப் போய்விட்டது. கூர்க்காவில் Diff Lock-ஐ என்கேஜ் செய்தால், செம கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆனால், லாக்குகளை Engage -DisEngage செய்வதற்குப் போராட வேண்டியிருக்கிறது. பாறையில் மோதி காரை ரிப்பேர் செய்து போராடுவதற்கு, லாக்கை என்கேஜ் பண்ணுவதற்குப் போராடுவதே பெஸ்ட். தார் ஜீப்பில் ஐடிலிங் அதிகமாக இருக்கிறது. இதனால், தவ்விச் செல்வதற்குப் பதில் பள்ளத்தில் இருந்து பறக்கிறது தார். இது ஒரு வகையில் ஜாலி -ஆபத்து இரண்டும் கலந்த கலவை. 

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

தார்-ல் 200 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ். இதைவிட கூர்க்காவில் 10 மி.மீ அதிகம். (210 மி.மீ). மேடு பள்ளங்களை எல்லாம் போகிற போக்கில் டீல் பண்ணலாம். ஆஃப் ரோடிங்குக்கு மூன்று ஆங்கிள்கள் ரொம்ப முக்கியம். அப்ரோச் ஆங்கிள் (டயருக்கும் தரைக்கும் முன் பக்க பம்பருக்கும் உள்ள ஸ்டார்ட்டிங் பாயின்ட்) டிப்பார்ச்சர் ஆங்கிள் (தரைக்கும் பின் பக்க வீலுக்கும் பின் பக்க பம்பருக்கும் உள்ள எண்டிங் பாயின்ட்), ரேம்ப்-ஓவர் ஆங்கிள் (முன் பக்க ஆக்ஸில், காரின் நடுப்பகுதி, ரியர் ஆக்ஸில் மூன்றுக்கும் உள்ள தூரம்). இந்த எல்லா ஆங்கிள்களுமே இரண்டிலும் வேறுபடுகின்றன. தாரின் அளவுகள் (44:27:15)... இதுவே கூர்க்காவில் (39:27:24). முன் பக்கம் பெரிய அடி எதுவும் வாங்காமல் தாரில் தைரியமாக ஏறி இறங்கலாம் என்றால், பின் பக்கம் கூர்க்காதான் பெஸ்ட்.   

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

கூர்க்காவுக்கு இன்னொரு பெரிய கைகுலுக்கல். ‘ஸ்நாக்கிள்’ (Snorkel) எனும் தண்ணீருக்குள் புகுந்து செல்லும் வசதி கொண்ட டியூப். கூர்க்காவில் இந்த ஸ்நாக்கிள், ஃபேக்டரி ஃபிட்டட் வசதியாக வருகிறது. கிட்டத்தட்ட இன்ஜின் வரை தண்ணீர் புகுந்தாலும் கூர்க்காவில் நோ ப்ராப்ளம்!

ஆனால், ஸ்நாக்கிள் விஷயத்தில் மஹிந்திராவும் மனது வைத்திருக்கலாம். எல்லா நேரங்களிலும் தண்ணீர்ப் பயணம் இருக்காது என்று நினைத்து சாய்ஸில் விட்டுவிட்டதோ?

 மேடுகளில் ஏறும்போது தாரின் பவர், கூர்க்காவைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. இறக்கங்களில் தாரின் லோ ப்ரஷர் கொண்ட டயர்கள் ‘சர்’ரென கீழே இறங்காமல், மெதுமெதுவாக இறங்க உதவி புரிகின்றன.

ஆஃப் ரோடு என்று வரும்போது மஹிந்திராவை ‘தளபதி’ என்று சொன்னால், கூர்க்காவை ‘தல’ என்று சொல்லலாம். இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. இருந்தாலும், ஒருநாள் முழுக்க கூர்க்காவையும் தாரையும் படுத்தி எடுத்ததில், கூர்க்கா சளைக்கவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

சாஃப்ட் ரோடில் எது சாஃப்ட்?

சாஃப்ட் ரோடு என்று வரும்போது, தார் ஈஸியாக இருக்கிறது. கியரும் கிளட்ச்சும் லைட் வெயிட். கிளட்ச் மிதித்து தாரில் கால் வலிக்கவே இல்லை. கூர்க்கா, அதைவிட கம்ஃபர்ட். இண்டிபெண்டன்ட் மற்றும் மல்ட்டி லிங்க் செட் அப், இதன் ஓட்டுதலை எளிதாக்குகிறது. இதன் ஹார்டு டாப் ஹைவேஸில் போகும்போது, கார் ஸ்டெபிலிட்டியாக இருப்பதுபோல் இருக்கிறது. இதுவே தாரில் சாஃப்ட் டாப் என்பதால், நெடுஞ்சாலைகளில் பறக்கும்போது படபடப்புச் சத்தம் பயமுறுத்துகிறது. தார்-ல் ஹார்டு டாப் வசதி எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் இருக்கிறது. இதற்குத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.  

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

கூர்க்காவின் கேபின் 1980-களின் கிளாஸிக் ஸ்டைலில் இருக்கிறது. தார்-ஐவிட எர்கானமிக்ஸிலும் கச்சிதம். சுவிட்ச்களை ஈஸியாகப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, மஹிந்திராவில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனை செலெக்ட் செய்ய டேஷ்போர்டுக்கு அடியில் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யவேண்டும். கூர்க்காவில் இந்தப் பிரச்னை இல்லை. பழைய ஸ்டைலில் இருந்தாலும், பிரீமியம் லுக்கிங் டேஷ்போர்டுபோல் தெரிகிறது. ஆனால், இரண்டிலுமே ஃபிட் அண்டு ஃபினிஷ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏ.சி மற்றும் பவர் ஸ்டீயரிங்தான் இரண்டின் மிகப் பெரிய சொகுசான வசதிகள். இரண்டிலும் 2020 வாக்கில் காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் வரலாம் என்கிறார்கள்.

“நாம இப்போ அடர்ந்த காட்டைத் தாண்டணும்!” - தாரா? கூர்க்காவா?

‘ரொம்ப நாளா ஜீப் வாங்கணும்னு ஆசை’ என்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு தாரை வாங்கலாம். காரணம், இதன் சர்வீஸ் நெட்வொர்க்... அதிலும் திருப்தி இல்லையென்றால், பிரித்து மாட்ட ஏகப்பட்ட மெக்கானிக்குகள் உண்டு. நிம்மதியான டிரைவிங்குக்கு தார் பெஸ்ட்.

இதுவே ஆஃப் ரோடு, ஆன் ரோடு என்று வரும்போது தாரைவிட கூர்க்கா கொஞ்சம் எகிறி அடிக்கிறது. ‘நாம இப்போ இந்த அடர்ந்த காட்டையும் ஓடையையும் தாண்டியாகணும்’ என்று ‘Man Vs Wild’ பியர் கிரில்ஸ் ரேஞ்ஜுக்கு ஃபீல் பண்ணுவீர்கள் என்றால், கூர்க்காதான் பக்காவான ஆப்ஷன். அதேநேரம், கூர்க்கா வாங்கிவிட்டு சர்வீஸ் சென்டர்களைத் தேடி அலைய வேண்டும்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு