பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், கார் மற்றும் பைக் பிரியர்கள், OEM தயாரிப்பாளர்கள், இவர்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் சிறு குறு மற்றும் பெரு தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என்று அத்தனை பேரும் சங்கமிக்கும் இடம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாபெரும் கண்காட்சி கடந்த முறையைப் போலவே டெல்லியை அடுத்திருக்கும் கிரேட்டர் நொய்டாவில் பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி 14-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் 24 புதிய கார் மற்றும் பைக்குகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. அதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட புதிய அறிமுகங்கள் இருக்கும்.

இந்த எக்ஸ்போவுக்காக மாருதி சுஸூகி நிறைய திட்டங்களை வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது -  ஸ்விஃப்ட். டாடாவில் இருந்து X451 ஹேட்ச்பேக், H5 எஸ்யூவிதான் ஹாட் கார்ஸ். ஹோண்டாவில் சிவிக்கின் ஆல் நியூ வெர்ஷனில் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வருகிறது. மஹிந்திராவின் மற்றும் ஹூண்டாயில் இருந்தும் ஏகப்பட்ட ட்ரீட் காத்திருக்கின்றன.

பைக் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த எக்ஸ்போவில் ட்ரையம்ப், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீல்டு, ஹார்லி டேவிட்சன் ஆகியவை கலந்துகொள்ளவில்லை. ஆனால், ஹீரோ, பிஎம்டபிள்யூ, யமஹா, டிவிஎஸ், சுஸூகி, கவாஸாகி என்று ஏராளமான நிறுவனங்கள் கடை விரிக்கவிருக்கின்றன. ஹீரோவில் இருந்து முதன்முறையாக 125 சிசி ஸ்கூட்டரை எதிர்பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூதான் பைக் ஏரியாவிலும் மாஸ் காட்ட உள்ளது. F850 GS, G310 GS, F750 GS என்று சில கெத்தான அட்வென்ச்சர் பைக்குகள் வரவிருக்கின்றன. கவாஸாகி - Z900RS, ZX-10R SE என்று சில காஸ்ட்லி பைக்குகளுடன், நின்ஜா 400 பைக்கையும் ஷோகேஸுக்கு வைக்கிறது. சுஸூகியில் இரண்டு செல்லங்கள். பர்க்மேன் எனும் 125-150 சிசி ஸ்கூட்டர் மற்றும் GSX S750 ஸ்போர்ட்ஸ் பைக். டிவிஎஸ் நிறுவனம், அக்யூலா மாடலை அடிப்படையாகக்கொண்ட நேக்கட் கான்செப்ட் பைக்கைக் காட்சிக்கு வைக்கிறது.

இப்படி மேலும் மேலும் ஆச்சர்யங்கள் பலவற்றை அடைகாத்து வைத்திருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் நம் மோட்டார் விகடனும் பங்கேற்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் சந்திப்போம்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு