பைக்ஸ்
Published:Updated:

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL
பிரீமியம் ஸ்டோரி
News
சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL

தொடர் - 3 - லாஜிஸ்டிக்ஸ்ஜோ டி குரூஸ்

1996 என நினைக்கிறேன். மும்பையிலிருந்து சென்னைக்கு பணி மாற்றம் பெற்று வந்திருந்தேன். அலுவலக வேலையிலிருக்கும்போது ஒருநாள், தூத்துக்குடியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. பேசியவர், அந்தக் காலத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமாயிருந்த ஒரு கப்பல் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர். பரஸ்பர நல விசாரிப்புக்குப் பிறகு, அவர் கேட்டார், ‘‘தம்பி, இந்த லாஜிஸ்டிக்ஸ்ன்னா என்னப்பா?’’

‘‘எதுக்காக கேக்குறீங்க?’’

‘‘அமெரிக்காவுல படிப்ப முடிச்சிட்டு வந்திருக்க என்னோட மகன், எங்க கம்பெனி பெயர லாஜிஸ்டிக்ஸுன்னு மாத்தச் சொல்லுறான். அந்தக் காலத்துல மெர்வின் கம்பெனியின்னு இருந்த பெயர, மெர்வின் சன்னுன்னு மாத்துனோம். பிறகு நானே அத மெர்வின் சிப்பிங்ன்னு மாத்துனேன்.’’

‘‘நீங்க கப்பல் ஏஜென்சியா மட்டுமே இருந்தீங்களா இல்ல…’’

‘‘எங்க அய்யா காலத்துல கப்பல் ஏஜென்சி மட்டுந்தான் இருந்தது. பிறகு கிளியரன்ஸும் பண்ணுனோம். இப்ப பத்து கண்டெய்னர் லாரிகளும் இருக்கு.’’

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL

‘‘ஓ… அப்படியா!’’

‘‘அமெரிக்காவுல இருந்து ஒரு கம்பெனியோட ‘பிஎல்’ கொண்டந்திருக்காம். கப்பலே இல்லாத அந்தக் கம்பெனிக்கி நம்மதாம் ஏஜென்ட்ன்னு சொல்லுறாம். கப்பக்்காரன் ‘பிஎல்’ வச்சிப் பாத்திருக்கோம். ஆனா, இது புதுசா இருக்கே. ஒண்ணுமே புரியல்ல, அதுனால உங்ககிட்ட கேக்குலாமேன்னு…’’

‘‘நீங்க எதுக்காக மெர்வின் சன்னுன்னு இருந்த கம்பெனி பெயர, மெர்வின் சிப்பிங்ன்னு மாத்துனீங்களோ, அதே காரணத்துக்காகத்தான் உங்க மகன்; இப்ப சிப்பிங்ன்னு இருக்கிறத லாஜிஸ்டிக்ஸுன்னு மாத்தச் சொல்றார்னு நினைக்கிறேன். தப்பு ஒண்ணுமில்ல, அடுத்த கட்டத்துக்குப் போறீங்க, நல்லதுதாம்.’’

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தேன் என்றில்லாமல், அடுத்த தலைமுறையை கடல் கடந்து படிக்க அனுப்பியதன் பலன், காலகாலமாகச் செய்யும் குடும்பத் தொழிலில் அடுத்தகட்ட முன்னேற்றம். இதுதான் போக்குவரத்துத் துறையில் உணர்வோடு ஈடுபட்டிருந்த பாரம்பர்யமான நிறுவன முதலாளிகளின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம். இதே கப்பல் ஏஜென்சி தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்களின் தலைமுறைகளில் பலர், இன்று சாப்பாட்டுக்கே வழியில்லாமலும் இருக்கிறார்கள். காரணம், மாற்றத்தை அவர்கள் உணரவே இல்லை.

ஒரு காலத்தில் டிரான்ஸ்போர்ட் (லாரிக்காரன்) சேவை ப்ளு காலர் வேலையாக பார்க்கப்பட்டு, சிப்பிங் (கப்பக்காரன்) ஒயிட் காலர் சேவையாக மதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர்களாக இருந்து டிரான்ஸ்போர்ட் நிறுவனமெனப் பெயர் வைத்தவர்களுக்கு மத்தியில், கப்பல் உரிமையாளர்களின் முகவர்களும், ஏன் கப்பலையே பார்க்காதவர்களும்கூட சிப்பிங் கம்பெனி எனப் பெயர் வைத்த காலம் இருந்தது. பின்னர், அதுவே சிப்பிங்கும் ஒரு ப்ளு காலர் வேலை; லாஜிஸ்டிக்ஸ்தான் ஒயிட் காலர் வேலை என்ற மனநிலைக்கு உலகம் மாறிவிட்டது.

இது ஒரு வகையான மாயத் தோற்றம். காரணம், பெயர்ச்சிமையில் (Logistics) என்னென்ன மாற்றங்கள் இன்னும் நிகழக் காத்திருக்கிறதோ, லாரிகளுக்கும், விமானத்துக்கும், ரயிலுக்கும், கப்பலுக்கும் ஏன் சரக்குப் பெட்டகங்களுக்கும் சம்பந்தமே இல்லாத யார் யாரெல்லாம் இந்தத் தொழில் வாய்ப்பால் பயன்பெறக் காத்திருக்கிறார்களோ..! நொடிப் பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், பெயர்ச்சிமை இன்னும் எந்தெந்த உயரங்களை எட்ட இருக்கிறதோ..! காலம் பதில் சொல்லக் காத்திருக்கும் இந்த வியாபார உத்தியும் அதன் ஆளுமையும் படு சுவாரஸ்யமானது.

1970-களில்தான் 3PL வியாபார உத்தி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பிறகு, அதுவே படிப்படியாக பல துறைகளில் ஊடுருவி, சேவைக்கான தேவையை உணர்த்தி, உலகெங்கும் உள்ள வியாபார வர்க்கத்தால் 1990-களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சரி, 3PL திடீரென வந்துவிடுமா! அப்படியானால் அதற்கு முன்னால் உள்ள 1PL, 2PL என்றால் என்ன? படிப்பவர்களின் மனதில் இந்த கேள்வி எழுவது ஞாயம்தானே! பெயர்ச்சியியல் தத்துவத்தில் 3PL பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னால் 1PL, 2PL பற்றி தெரிந்துகொள்வது மிக மிக அவசியம்.

சரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 3PL

தனது உற்பத்தியைத் தானே தலைச் சுமையாகவோ அல்லது வாகனங்களிலோ எடுத்துச் சென்று நுகர்வோரிடம் சேர்ப்பது என்பது முதல் நபர் பெயர்ச்சிமை; அதாவது 1PL (First Party Logistics). நீங்கள் தேரிக் காட்டு விடலியில் கருப்புக்கட்டி உற்பத்தி செய்வதை மட்டும் செய்யுங்கள்; அதைப் பக்கத்து ஊர்களுக்கு வண்டிமாடு வைத்து நான் கொண்டுபோய் கொடுக்கிறேன் என்று நண்பர் வந்து சொன்னார் பார்த்தீர்களா? அங்குதான் இரண்டாம் நபர் பெயர்ச்சிமை (Second Party Logistics – 2PL) உருக்கொள்கிறது. கால ஓட்டத்தில் மக்கள்தொகை பெருகி, தேவையும் அதிகரித்து, அறிவியல் வளர்ச்சியும் துணைவந்துவிட்ட நிலையில் உற்பத்தியாளர்களையும், அந்த உற்பத்தியைச் சுமந்து செல்லும் வாகனங்களை இயக்குபவர்களையும் தனது அனுபவ அறிவால், தொடர்பால் இணைத்து, புதிய வியாபார வழியை உலகுக்குக் கொடுத்ததுதான், இந்த மூன்றாம் நபர் பெயர்ச்சிமை (Third Party Logistics – 3PL).

வியாபாரத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், உற்பத்தியில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி விதவிதமாகத் தயாரிப்பது மட்டும் போதாது; அதைக் கொண்டு சேர்க்கும் சுமைகூலியிலும் அதன் முறையான ஆளுமையிலும் கவனம் செலுத்த வேண்டுமென ஆதாரத்தோடு நிரூபித்தார்கள், இந்த மூன்றாம் நபர் பெயர்ச்சிமையாளர்கள். உற்பத்திக்கான கச்சாப் பொருள் வருவித்தலிலும், அதன் தயார் இருப்பிலும் வீணாகப் பணம் முடங்கிக் கிடந்ததை உற்பத்தியாளர்களுக்குப் புரிய வைத்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான, வேகமான, செலவு குறைந்த உள்நாட்டு, பன்னாட்டு பாதைகளையும், அதில் சேவை புரிவோரையும் கண்டறிந்து, பெயர்ச்சிமையின் செலவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என உணர்த்தினார்கள். நுகர்வோரின் தேவை உணர்ந்த பொதிமானங்களால் வியாபாரத்தை விருத்தி செய்ய முடியும் என நிரூபித்தார்கள்.

பன்னாட்டுப் பெயர்ச்சிமையில் (International Logistics), புதிதாக நடைமுறைக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டன. அவ்வப்போதைய பெயர்ச்சி (Just in Time), பெயர்ச்சியில் இணைதல் (Merge in Transit), ஏற்றுமதியில் இணைப்பு (Export Consolidation), இறக்குமதியில் ஒருங்கிணைப்பு (Import Groupage) எனப் புதிய சேவைகளும் அதன் மூலம் வியாபார வாய்ப்புகளும் பெருகின.

ஒரு கட்டத்தில், நாங்கள் உற்பத்தியாளர்களல்ல... வாகன உரிமையாளர்களுமல்ல... ஆனால், உலக வியாபாரத்தையே எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று விளம்பரம் செய்யுமளவுக்குப் போய்விட்டார்கள், இந்த மூன்றாம் நபர் பெயர்ச்சிமையாளர்கள் (3PL). கையிலிருக்கும் ஒரு பில் ஆஃப் லேடிங்கை (B/L) வைத்துக் கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கப்பல் உரிமையாளர்களும், சரக்குப் பெட்டக லைனர்களும் இவர்களை நம்பியே தொழில் செய்யும் நிர்பந்தம் வந்துவிட்டது. அதற்கான காரணமும் சூழலும் என்ன?

- தொடர்ந்து கற்போம்