Published:Updated:

நாடோடி நின்ஜன்!

நாடோடி நின்ஜன்!

 >>தா.லின் மேன்சன்

 ##~##

'பைக்கில் ஊர் சுற்றி வந்தால், ஒரு புதிய பைக்கே பரிசாகக் கிடைக்கும்!’ - இப்படி ஒரு போட்டி வைத்தால் எப்படி இருக்கும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரபல ரெடிமேட் ஆடை விற்பனை நிறுவனம்’ நடத்திய 'ட்ரூ வாண்டரர்ஸ்’ எனும் இந்தப் போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டார் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான பிரவீன் செல்வம். அந்த அனுபவத்தை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

'' 'ட்ரூ வாண்டரர்ஸ்’ போட்டி ஏழு நாட்கள் நடந்தது. இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் இந்தப் பயணம் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் வலைப்பூவில் 'அப்டேட்’ செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த வலைப்பூவுக்கு விழும் வோட்டுகளின் அடிப்படையில்தான் வெற்றி நிர்ணயிக்கப்படும். நான் ஏற்கெனவே 'த்ரில் டு டிராவல்’ என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வந்ததால், இது எனக்குக் கடினமாகத் தெரியவில்லை. மேலும், புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ஏற்கெனவே இருந்த ஆர்வமும், பயிற்சியும் இதற்குக் கை கொடுத்தது.  என்னுடைய கவாஸாகி நின்ஜா பைக், லேப் டாப், கேமரா, ஜி.பி.எஸ் டிராக்கர், டென்ட் ஆகியவைதான் என் பயணத்துக்கு வழித்துணையாக துவக்கத்தில் இருந்து கடைசி வரை வந்தது.

நாடோடி நின்ஜன்!

முதல் நாள், சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்குச் சென்றேன். இந்த இடம் எனக்குப் பிடித்தமான இடம் என்பதுடன், பழக்கமான இடமும்கூட! இங்கு காட்டில் ட்ரெக்கிங் சென்று விட்டு, அங்கேயே டென்ட் அடித்து இரவு தங்கினேன். பயணத்தின் இரண்டாவது நாள் என்னுடைய பிறந்த நாள். மிகவும் சந்தோஷமான நாளாக அது அமைந்தது. ஏலகிரியில் இருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் வழியாக அவலாஞ்சி சென்றேன். இதமான சாரல் மழையில், பசுமையான மலைச் சாலையில் பயணிப்பது மிக மிக சுகமான அனுபவமாக இருந்தது.

நாடோடி நின்ஜன்!

மூன்றாவது நாள் காரமடை வழியாக கோவையை அடைந்து, அங்கு தங்கினேன். அடுத்த நாள் பொள்ளாச்சி வழியாக மூணார் செல்வதுதான் திட்டம். மூணாரை அடைவதற்குள் மழையின் சீற்றம் என் பயணத்தைத் தொய்வடையச் செய்தது. ஆனாலும் விடாமல் இலக்கை எட்டிவிட்டேன். ஐந்தாம் நாள் மூணாரில் இருந்து தேனி, திண்டுக்கல் வழியாக ஒக்கேனக்கல் சென்றேன். அங்குதான் காவிரி ஆற்றைக் கடக்க என்னுடைய 200 கிலோ நின்ஜாவை பரிசலில் ஏற்றி கடந்தேன். கனவில்கூட இப்படியான ஒரு அனுபவத்தை நினைத்துப் பார்த்ததில்லை. அன்றைய இரவை காவிரிக் கரையில் கழித்தேன். அந்த ரம்மியமான இரவுச் சூழல் ஐந்து நாள் பயணத்தின் உடல் வலியை மறக்கச் செய்தது.

நாடோடி நின்ஜன்!
நாடோடி நின்ஜன்!

அடுத்த நாள், அங்கிருந்து செஞ்சிக் கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன். செஞ்சிக் கோட்டையை ரசித்துவிட்டு புதுச்சேரிக்குச் சென்றேன். அங்கு இரவு தங்கி விட்டு, அடுத்த நாள் சென்னையை நோக்கிப் புறப்பட்டேன். ஏழாவது நாள் வீட்டை அடையும் நேரத்தில் கால்களிலும் கண்களிலும் - காடுகள், மலைகள், கடற்கரைகள் நிழலாடிக் கொண்டே இருந்தன. இந்த ஏழு நாட்களில் மொத்தம் 3,000 கிமீ தூரம் பயணம் செய்திருந்தேன்.

இந்தப் போட்டியில் பங்கு பெற்ற பத்து நபர்களில் நான் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வர்ணிக்க முடியவில்லை. எம் டிவியின் 'ரோடீஸ்’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரான்விஜய்யிடம் இருந்து 678.2 சிசி ஹாய்சங் எஸ்டி-7 பைக்கைப் பரிசாக பெற்ற தருணத்தை என் வாழ்வில் மறக்க முடியாது!'' என்று உணர்ச்சிவசப்பட்டவரிடம், ''பைக்கில் ஊர் சுற்றும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டோம்.

''நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். ஆனால், பைக்கில் தொடர்ந்து ஊர் சுற்ற வாய்ப்புக் கிடைத்தால் வேலையை உதறி விடுவேன். முதன் முதலாக 2007-ல் 'பஜாஜ் பல்ஸர் 220’ பைக் வாங்கிய போது தான் இந்த பைக் பயணத்தின் ருசியைக் கண்டு கொண்டேன். என் முதல் பயணம் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகத் தொடங்கியது. அதன் பிறகு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவேன். வேடந்தாங்கல், ஏலகிரி, வயநாடு (கேரளா) என பயணங்களின் தூரம் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதேபோல, என்னைப் போல பயணங்களின் மேல் தீராத ஆசை கொண்ட நிறைய நண்பர்களும் கிடைக்க ஆரம்பித்தார்கள். பிறகு உற்சாகத்துக்குக் கேட்கவா வேண்டும்?

அதற்குப் பின்பு, கவாஸாகி நின்ஜாவைப் பற்றி இணைய தளத்தில் நிறையப் படித்தேன். ஆனால், அந்தச் சமயத்தில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகம் ஆகவில்லை. நான் மிகவும் ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்த நாள் வந்தது. நின்ஜாவை ஷோ ரூமில் பார்த்த நிமிடமே கால்கள் தரையில் பதியாமல் மிதக்க ஆரம்பித்தேன். உடனே நின்ஜாவை வாங்கி விட்டேன். அந்த பைக்கில்  நான் சென்ற முதல் பயணம் புனே! இந்தப் பச்சை நிற நின்ஜாதான் 'ட்ரூ வாண்டரர்ஸ்’ போட்டியில் நான் கலந்து கொண்டு வெற்றி பெற அடித்தளம் இட்டது.

பல்ஸர் பயணங்களில் மறக்க முடியாதது டெல்லியிலிருந்து லே சென்றது தான். 2009-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இமயமலைக்குப் பயணம் செல்லத் திட்டமிட்டோம். டெல்லியிலிருந்து லே செல்வது தான் திட்டம். பைக் எல்லாம் பார்சல் மூலமாக டெல்லிக்கு அனுப்பி விட்டு, டெல்லியிலிருந்து நானும் மூன்று நண்பர்களும் பயணத்தைத் தொடங்கினோம்.

பதினைந்து நாட்கள் பயணம். சண்டிகார், மணாலி வழியாக 'லே’வை அடைந்தோம். அங்கிருந்து ஸ்ரீநகர், ஜம்மு வழியாக மீண்டும் டெல்லி வந்து சேர்ந்தோம். பனி மலைகள், பயணத்துக்கு உதவாத சாலைகள், நடு வழியில் பைக் ரிப்பேர் என அந்தப் பயணம் சாகச விரும்பிகளுக்கான எங்களுக்குச் சவாலாக இருந்தது. இந்தச் சவால்தான் சாலையில் என்ன இன்னல்கள் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ளும் பலத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது!'' என்கிறார் பிரவீன் செல்வம் கம்பீரமாக!