கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

ஏன் எதற்கு எப்படி? - இன்ஜின் ஆயில்தமிழ்

ரு இன்ஜினின் ஆயுள் - நிச்சயம் இன்ஜின் ஆயிலில்தான் இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் ஒரு வாகனத்தின் வாழ்நாளைச் சொல்லும் விஷயம். தரமான பெட்ரோல் மட்டுமில்லை; இன்ஜின் சிறப்பாக இயங்க ஆயிலும் மிக அவசியம். 2 ஸ்ட்ரோக் வாகனங்கள் இருந்த காலங்களில், 2T ஆயில் புழக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாமே 4 ஸ்ட்ரோக் வாகனங்கள். இந்த மாதம் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் ஆயில் (4T) பற்றி ஆராயலாம்.

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

ஏன் இன்ஜினுக்கு ஆயில்?

‘பெட்ரோல்தான் போடுகிறோமே; பிறகு எதற்கு தனியாக ஆயில் வேறு’ என்று சிலர் நினைக்கலாம். இங்கே பெட்ரோல் என்பது எரிபொருள். அதாவது, இன்ஜினை இயக்குவதற்கு. ஆயில் என்பது இன்ஜினின் உராய்வைத் தடுப்பதற்கு. இரண்டு உலோகங்கள் உரசும்போது என்னாகும்? உலோகங்களில் வெப்பம் அதிகமாகி, விரைவில் தேய்ந்து விடும். இதுவே மசகுத்தன்மை (விஸ்காஸிட்டி) இருந்தால்? அதாவது, கொழகொழப்புத் தன்மை. இயக்கமும் எளிதாக இருக்கும். உலோகங்களும் பாதுகாக்கப்படும். அதற்குத்தான் இன்ஜின் ஆயில்.

ஒரு சின்ன உதாரணம் - நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத பூட்டு இருக்கிறது. வெயிலில், மழையில் துருப்பிடித்துப் போய், சாவியைப் போட்டாலும் திறக்கவே முடியவில்லை. சாவியிலும் பூட்டு துவாரத்திலும் லேசாக எண்ணெய் விட்டுத் திறந்து பாருங்கள். சட்டென வேலை முடியும். இதுதான் இன்ஜினுக்கும். இன்ஜினில் பிஸ்டன்கள் இயங்கும்போது ஏற்படும் உராய்வுத் தன்மையைச் சீராக்க, இந்த இன்ஜின் ஆயில் மிக முக்கியம். நாள் ஆக ஆக இந்த ஆயிலின் மசகுத்தன்மை குறைந்து, உராய்வு சீராக இருக்காது. அதனால்தான் நாள்பட்ட இன்ஜின் ஆயில் கொண்ட இன்ஜினை, வாகனம் ஓட்டும்போதே கண்டுபிடித்து விடலாம். இன்ஜின் சத்தமே ‘நச நச’ என இருக்கும்.

அடிட்டீவ்ஸ் எதற்கு?


ஆயில் என்றால், வெறும் எண்ணெய் மட்டும் அல்ல. உலோகங்கள் தேய்ந்து விடாதவண்ணம், இன்ஜின் சீராக இயங்கும்வண்ணம் இந்த ஆயிலில் சில ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். ஆயில் 80% என்றால், மற்றவை 20% இருக்கும். ஆன்ட்டி-வியர் அடிட்டீவ்ஸ், ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்ஸ், டிட்டர்ஜென்ட்ஸ் என்று சில கலவைகள் இருக்கும். இதை அடிட்டீவ்ஸ் என்கிறோம். பலவிதமான கெமிக்கல்களையும் மினரல்களையும் கொண்ட இந்த ஆயிலுக்குள் இருக்கும் அடிட்டீவ்ஸைப் பொறுத்துத்தான் கிரேடுகளைப் பிரிப்பார்கள். மைலேஜுக்கு ஏற்ப, இன்ஜின் செயல்பாட்டுக்கு ஏற்ப, இன்ஜினை கூலாக வைத்திருக்க, உலோக அரிப்பைத் தடுக்க என்று ஒவ்வொரு கெமிக்கலுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இதைத்தான் லூப்ரிகன்ட் அடிட்டீவ்ஸ் என்கிறார்கள்.

இந்த லூப்ரிகன்ட் ஆயில் மூன்று விதங்களில் இருக்கும். திரவமாக... கெட்டியாக... கொழகொழப்பாக! பெரும்பாலும் நம் கார் மற்றும் பைக்குகளில் உள்ள இன்ஜின்-கியர்பாக்ஸில் பயன்படுத்துவது திரவ நிலையில் உள்ள லூப்ரிகன்ட் ஆயிலைத்தான். ஏனென்றால், இங்கேதான் உராய்வுகள் அதிகமாக இருக்கும்.

விஸ்காஸிட்டி என்றால் என்ன?

பொதுவாக, ஆயிலை ‘விஸ்காஸிட்டி இண்டெக்ஸ்’ கொண்டுதான் அளவிடுகிறார்கள். அதாவது, மசகுத்தன்மை. இங்கே மசகுத்தன்மை என்பது, ஒரு ஆயில் அதிகபட்சம் எந்தளவு வெப்பத்தைத் தாங்கி, எவ்வளவு நாட்கள் தனது வழவழப்புக் குணத்தை இழக்காமல் இருக்கும் என்பதுதான். இந்த விஸ்காஸிட்டி இண்டெக்ஸின் அளவு அதிகமாக இருந்தால், சந்தேகமே படாமல் அந்த ஆயிலை இன்ஜினுக்கு ஊற்றி, ஜாலியாகப் பயணிக்கலாம்.

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

எத்தனை வகை ஆயில்கள்?

மினரல் ஆயில்: மொத்தம் 3 வகை ஆயில்கள் இருந்தாலும், ஆயில்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது மினரல் ஆயில். இதுதான் விலை குறைவு. குரூட் ஆயிலைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் பேஸ் ஆயிலில், தேவைக்கு ஏற்பட அடிட்டீவ்ஸ் கலந்தால்.... அதுதான் மினரல் லூப்ரிகன்ட் ஆயில். மினரல் ஆயில்தான் விலை மலிவு என்பதோடு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பட்ஜெட் பைக்குகளுக்கும், நம் சீதோஷ்ண நிலைக்கும் மினரல் ஆயில்தான் சரியான ஆயில்.

செமி சிந்தெடிக் ஆயில்: மினரல் ஆயிலுக்கு அடுத்த கிரேடு - இந்த செமி சிந்தெடிக் ஆயில். முக்கால்வாசி மினரல் ஆயிலும், கால்வாசி சிந்தெடிக் ஆயிலும் கலந்ததுதான் இது.  அதிக வெப்பநிலையில் மசகுத்தன்மையை இழக்காமல் இருக்க, நல்ல மைலேஜ் கிடைக்க, இன்ஜினைப் பாதுகாக்க... இந்த செமி சிந்தெடிக் ஆயில் நல்ல ஆப்ஷன். சிந்தெடிக் ஆயில் வாங்க முடியாதவர்களுக்கான பட்ஜெட் ஆயில் இது.

சிந்தெடிக் ஆயில்: மாடர்ன் இன்ஜின்களுக்கு சிந்தெடிக் ஆயில்தான் ஊற்ற வேண்டும். ஏனென்றால், விசேஷமான முறையில் மினரல் ஆயிலைப்போல் பல மடங்கு பிரமாதமான முறையில் தயாரிக்கப்படும் ஆயில். இது எப்படிப்பட்ட பருவ நிலைக்கும் செட் ஆவதுதான் சிந்தெடிக் ஆயிலின் ஸ்பெஷல். அதிக வெப்பத்தில் ஸ்டேபிளாகவும், பனிக்காலங்களில் திரவமாகவும் மாறிக்கொள்ளும்படி தயாரிக்கப்படும் இது, மற்ற ஆயில்களைவிட விலை அதிகம்.

எந்த கிரேடு பயன்படுத்தலாம்?

ஆயிலில் கிரேடுகளைப் பிரித்து வைத்துள்ளார்கள். சிங்கிள் கிரேடு, மல்ட்டிபிள் கிரேடு என்று பல கிரேடுகள் இன்ஜின் ஆயிலுக்கு உண்டு. நாம் சாதாரணமாகப் பயன்படுத்துவது சிங்கிள் கிரேடு. பொதுவாக, இந்த கிரேடு, ‘SAE’ (Society of Automotive Engineers) எனும் அமைப்பு மூலம்தான் உறுதி செய்யப்படுகிறது. ஏற்கெனவே சொன்னபடி, விஸ்காஸிட்டி டெஸ்ட்டிங்கின் அடிப்படையில் கிரேடுகள் நிர்ணயிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, மோபில் ஆயில் எடுத்துக் கொள்ளலாம். ‘4T 20W-40’ என்றொரு குறியீடு இருக்கும். இதில் 4T என்பது 4 ஸ்ட்ரோக் இன்ஜின் ஆயில் என்பதைக் குறிக்கிறது. ‘W’ என்றால் ‘Winter’. இதை சிலர் ‘Weight’ என்றும் நினைக்க வாய்ப்பு உண்டு. அது இல்லை. அதாவது, 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி வரை கிரேடிங்கில் இதன் விஸ்காஸிட்டி டெஸ்ட்டிங் செய்யப்படுகிறது. 20-க்கு மேல் போவதால், இதை சம்மர் கிரேடிங் என்று சொல்லலாம்.

இதுவே 0W25 வரை வின்டர் கிரேடிங்கில் விஸ்காஸிட்டி டெஸ்ட் செய்யப்பட்ட ஆயில்கள், வின்டர் கிரேடிங். அதாவது, 0 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை. இமயமலை போன்ற குளிர்ப் பிரதேசங்களுக்கு இந்த வகை ஆயில்தான் சரியானது.

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெயில் பின்னியெடுக்கும். இங்கே 20W60 வரை கிரேடுதான் சரியாக இருக்கும். இது ராஜஸ்தானுக்கு மட்டும்தான் செட் ஆகும். இதை குளிர்ப் பிரதேசங்களில் ஓட்டினால்... ஸாரி! இம்மாதிரி நேரங்களில்தான் சிங்கிள் கிரேடு, மல்ட்டி கிரேடு உருவாகிறது. உதாரணத்துக்கு, SAE 4T 5W60 என்றொரு குறியீடு இருந்தால், அது டபுள் கிரேடு ஆயில். அதாவது, வெயிலிலும் ஓட்டலாம்; குளிரிலும் ஓட்டலாம். தமிழகத்தின் மிதமான பருவ நிலைக்கு 20W40 தான் பெஸ்ட்.

உங்கள் மேனுவல் புத்தகத்தைத் திறந்து பாருங்கள். எந்த கிரேடு பரிந்துரைக்கிறார்களோ, அதைப் பயன்படுத்துவதே பெஸ்ட். மினரலுக்கு சிந்தெடிக்கையும், சிந்தெடிக்குக்கு மினரலையும் ஊற்றிப் பார்ப்போம் என்று புத்திசாலித்தனமாகச் செய்தால், இன்ஜின் பாவம் ப்ரோ!

இந்த ஐந்து விஷயத்தை மறக்காதீங்க!

* குறிப்பிட்ட கி.மீ தாண்டியதும், இன்ஜின் ஆயிலை மாற்ற மறக்காதீர்கள்.

* மேனுவல் பரிந்துரைக்கும் கிரேடை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

* ஆயில் வாங்கும்போது, கேன்களில் சீல் அல்லது ஹாலோகிராம் உள்ளதா என்பதைப் பாருங்கள்.

* காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட்டைப் பயன்படுத்துங்கள்.

* ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிராண்ட்... வேண்டாமே!

இன்ஜினுக்கு எதுக்கு ஆயில்? - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்!

இன்ஜின் சீஸ் ஆவது என்றால் என்ன?

இன்ஜினுக்குள் இருக்கும் பிஸ்டன்கள், உலோகங்களால் ஆனவை. இவை உரசும்போது, வெப்பம் ஏற்பட்டு விரைவில் உலோகங்கள் தேய்ந்துவிடும். அதற்கு, லூப்ரிகன்ட் தேவை. அதுதான் இன்ஜின் ஆயில். இந்த ஆயிலின் விஸ்காஸிட்டி, அதாவது மசகுத்தன்மை குறைந்து உலோகங்கள் வெப்பத்தில் உருகி, தனது வடிவத்தை இழந்து கொஞ்ச நேரத்தில் செயலிழந்துவிடும். இதைத்தான் இன்ஜின் சீஸ் ஆகிவிட்டது என்கிறோம். ஏழு கடல், ஏழு மலை தாண்டியெல்லாம் இன்ஜினின் உயிரைப் பாதுகாக்க வேண்டியதில்லை. ஒழுங்காக இன்ஜின் ஆயிலை மாற்றினாலே போதும்.