கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - மாருதி சியாஸ்தமிழ் - படங்கள்: சி.ரவிக்குமார்

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

‘சென்னைக்கு மிக அருகில்...’ என்று ரியல் எஸ்டேட்களுக்கு விளம்பரம் செய்வதுபோல், டூர் பிரியர்களைக் கவர நாகலாபுரத்துக்கு இப்படி ஒரு டேக்லைன் கொடுக்கலாம். சென்னைக்கு மிக அருகில், வெறும் 98 கி.மீ தூரத்தில் அற்புதமான ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுவும் அட்வெஞ்சர்ஸ் ஸ்பாட். ``ஒரே நாள் டூர்ல, வாழ்நாள் முழுக்க நினைவுல இருக்கிற மாதிரி ஒரு ஸ்பாட் சொல்லுங்க. என் சியாஸை எடுத்துக்கிட்டுக் கிளம்பி வந்துடுறேன்’’ என்று கணவரோடு டூருக்குத் தயாராகிவிட்டார் பாரதி.

ஆந்திர எல்லையில் உள்ள நாகலாபுரம் அருவிக்கு பிளான் போட்டோம். நாகலாபுரம் ஒரு காட்டுப்பகுதி. இதனுள் மொத்தம் ஐந்து அருவிகள் உண்டு. ஆனால், மூன்று அருவியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதுதான் பெஸ்ட். ஒவ்வோர் அருவியும் ஒவ்வொரு லெவலில் இருக்கும். `விலங்குகள் கிடையாது. ஆனால், மலைப்பாம்புகள் அதிகம்’ என்றன சில டிராவல் இணையதளங்கள். ‘`ட்ரெக்கிங் போன அனுபவம் உண்டா?, 8 கி.மீ நடந்துடுவீங்களா?, நீச்சல் தெரியுமா?, பாம்புக்குப் பயப்படக் கூடாது’’ என்ற பல கேள்விகளுக்கும் பாசிட்டிவாகவே தலையாட்டினார்கள் தம்பதியர். ‘‘நாங்க பண்ணாத அட்வெஞ்சரா... என்ன சொல்ற தீபக்?’’ என்று தன் காதல் கணவருடன் காலை 5 மணிக்குக் கிளம்பிவிட்டார் பாரதி.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

ஆந்திர மாநிலம் என்றதும் `தெலுங்கு தெரியாதே’ என்று ஜெர்க் ஆகவேண்டியது இல்லை. ஆந்திரா பார்டர் தாண்டியும் தல, தளபதிக்கு கட் அவுட்டெல்லாம் வைத்திருந்தார்கள். அரைகுறை தெலுங்கில் விசாரித்தால், நம்மைத் தவிர எல்லோருமே தமிழ் பேசினார்கள். ``ஹலோ, கமல் மாதிரி எனக்கு ஆறு மொழிகள் தெரியும்’’ என்றார் பாரதி.

* செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர் வழிதான் நாகலாபுரத்துக்கு ரூட். பெரியபாளையம் திரும்புவதற்கு இடதுபுறம் சிலபல `பளபள’ பிங்க் கொய்யாக்காய்களை பார்சல் செய்துவிட்டு, டிபனை முடித்து, லஞ்சுக்கும் பார்சல் செய்துகொண்டு பறந்தோம். ஏனென்றால், நாகலாபுரத்தில் உணவகங்கள், டீக்கடைகள் லேது! நான்-வெஜ் பார்ட்டிகள், பிச்சாட்டூரில் பார்சல் வாங்கிக்கொள்வது பெஸ்ட். மீன் வறுவல் 15 ரூபாய், சிக்கன் லெக்பீஸ் 25 ரூபாய், பிரியாணி 40 ரூபாய், அசைவச் சாப்பாடு 40 ரூபாய் என எல்லாமே செம மலிவு!

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* மலைப்பிரதேசம் என்பதால், நாகலாபுரத்தில் எக்கச்சக்க அருவிகள். சத்திகூடு மடுகு, உப்பலமடுகு, கோனே, கைலாசகோனா... இப்படி பல அருவிகள் பாதையையும் மூளையையும் டைவர்ட் செய்யும். நாங்கள் ப்ளான் செய்தது `ஆரே’ எனும் இடம். ``கோனே ஃபால்ஸில் இப்போது சீஸன் இல்லை’’ என்றார்கள்.

* நாகலாபுரம் போகும் பாதை `பச்சைப்பசேல்’ என  இருந்தது. ஒரு பெரிய ஆலமரம். அதைத் தாண்டி 1 கி.மீ-ல் வலதுபுறம் திரும்ப வேண்டும். ஏனென்றால், `ஆரே’ அருவிக்கு எந்த சைன் போர்டும் கிடையாது. நாகலாபுரம் `ஆரே’ அருவியில் முன்பெல்லாம் பார்க்கிங் கிடையாது. பஞ்சாயத்து சார்பில் டெண்டர் எடுத்து காருக்கு 50, தலைக்கு 30, பைக்குக்கு 30 என வசூலித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அதை அரசாங்கமே செய்கிறது.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* நாகலாபுரம் `ஆரே’வில் மொத்தம் ஏழு அருவிகள் உண்டு என்பவர்கள் இருக்கிறார்கள்; ஐந்து அருவிகள்தான் என்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நான்கு அருவிக்குமேல் யாரும் போனதாகச் சொல்லவேயில்லை. காரணம், இந்த ட்ரெக்கிங் பாதை, செத்துப்போன தாத்தா - பாட்டியெல்லாம் கம்பெனிக்குக் கூப்பிடுகிற அளவுக்கு மோசமான பாதை! ஆனால், ``ஐந்து அருவிகள் வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்’’ என்று உறுதியாக இருந்தார் பாரதி.

* ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. எடுத்தவுடனே கற்கள், பாறைகள், சுடுமணல் என்று சவால் விட்டது பாதை. வெயில்காலம் என்றால், மண்டையிலிருந்து நம் எனர்ஜியை நேரடியாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிவிடும் சூரியன். எனவேதான் நாகலாபுரம் கிளம்புபவர்கள், வீட்டிலிருந்து காலை 5 அல்லது 6 மணிக்கே கிளம்பிவிட வேண்டும்.

* உள்ளே போகப் போக வேற லெவல். எவ்வளவு வெயில் அடித்தாலும், `வானத்தைப்போல’ விஜயகாந்த் மாதிரி நமக்குக் குடை பிடிக்கின்றன மரங்கள். காட்டின் அமைதி, பேரிரைச்சலாக இருந்தது. காடு பயங்கரம்தான். ஆனால், விலங்குகளே இல்லாத காடு இது. கரையான்கள் மட்டும்தான் 10 அடிக்கு ஒரு வீடு கட்டியிருந்தன. கரையான் புற்றுகளைப் படமெடுத்துக்கொண்டே வந்தார் புகைப்படக் கலைஞர். ஆயிரக்கணக்கிலான பட்டாம்பூச்சிகள் பாதையை இன்னும் அழகாக்கின.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* செல்லும் வழியெங்கும் குட்டிக் குட்டி ஓடைகள், அருவிகள் செமயாக சிம்பொனி மீட்டிக்கொண்டு, இளையராஜாவுக்குச் சவால்விட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சிற்றோடையிலும் கால் நனைத்து, முகம் நனைத்து ரெஃப்ரெஷ் செய்துகொண்டே வந்தனர் காதல் ஜோடிகள்.

* பாதையெங்கும் அம்புக்குறி போட்டு அலெர்ட் செய்திருந்தார்கள். முதல் ஓடை தாண்டி கொஞ்ச தூரம் கழித்து, இடதுபுறம் திரும்ப வேண்டும். வழி மாறினால், மலை உச்சிக்குப் போனாலும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் பார்க்க முடியாது. `பாயசம் எங்கடா?’ என்று நடிகர் சிங்கம்புலி தேடுவதுபோல், ‘அருவி எங்கடா?’ என்று தேடி அலையவேண்டியதுதான். ``8 கி.மீ போயிட்டு வந்துட்டோம்ங்க... தண்ணி இருக்குன்னு சொல்லி ஏமாத்திப்புட்டாங்க. ஒரு அருவியைக்கூட காணோம்’’ என்று ஃபைனலில் தோற்ற குரோஷியா கால்பந்து டீம்போல் முகம் தொங்கிவந்தனர் சிலர்.

* முதல் அருவி - பெண்கள், குழந்தைகளுக்கானது. அதுவும் அகழியில் கொஞ்ச தூரம் வரைதான். நடுப்பகுதிக்குப் போனால் 15 அடி ஆழம். எனவே, நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் இறங்குவது நல்லது. ``நல்லவேளை - நான் லைஃப் ஜாக்கெட் கொண்டுவந்துட்டேன்’’ என்று தைரியமாக அகழியில் இறங்கிவிட்டார் பாரதி.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* 4-வது அருவி தவிர, எல்லாமே இதே டைப்தான். இரண்டாவது அருவி, இதற்கெல்லாம் அண்ணன். ``25 அடி ஆழம்’’ என்றார்கள். சிலர் அருவியிலிருந்து `தீம் பார்க்கில்’ விளையாடுவதுபோல் மேலே இருந்து `சொர்’ என ஸ்கேட்டிங்கெல்லாம் வந்து `தொபுக்’ என அகழிக்குள் விழுந்தார்கள். இப்படி ஸ்கேட்டிங் விளையாட முன்னனுபவம் வேண்டும்.

* அப்படியே 2-ம் அருவியின் தலைக்கு மேலேறி, 25 நிமிடம் வெறித்தனமான ட்ரெக்கிங் போனால், மூன்றாவது அருவி. போகும் வழியில் இரண்டாம் அருவியின் ஆரம்பம் தெரிந்தது. ``இந்த அருவியிலயா குளிச்சோம்!’’ என்று டாப் ஆங்கிளில் முதுகைச் சில்லிட வைத்தது வியூ. `அபோகலிப்டோ’ படத்தில் வரும் காடுபோல் `டர்’ அடித்தது. கால்கள் கொஞ்சம் பிசகினாலும், 100 அடி பள்ளத்தின் அடியில் பாராசூட் இல்லாமல் பறக்கவேண்டியதுதான்.

* இரண்டாம் அருவி `அபோகலிப்டோ’ என்றால், மூன்றாம் அருவி `அவதார்’ லொக்கேஷன்போல் இருந்தது. 100 அடிக்கு பாறையைப் பிளந்து அதில் நான்-ஸ்டாப்பாகத் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கிறது இயற்கை. அருவி கீழே விழும் இடத்தின் ஆழம் 70 முதல் 80 அடி என்றார்கள். நீச்சல் தெரியாதவர்கள், லைஃப் ஜாக்கெட் போடாமல் இறங்குவது நிச்சயம் பேராபத்து. அகழிக்கு நடுவே மல்லாக்கு நீச்சல் அடித்தபடி அண்ணாந்து வானத்தைப் பார்த்தால்... இயற்கையின் பிரமாண்டம் பிரமாதமாய் கண்களில் விரிகிறது.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* நாகப்பாம்புகள்தான் நாகலாபுரத்தில் அதிகம் என்றார்கள். கூகுளும் அப்படித்தான் சொன்னது. `ஒரு பாம்பையாவது பார்த்துடணும்’ என்று 360 டிகிரியில் கவரேஜ் செய்தார் பாரதி. ஆனால், காட்டுக்குள் இல்லை; ஊருக்கு வெளியே சாலை முழுவதையும் அடைத்தபடி வயதான மலைப்பாம்பு ஒன்று ஆடி அசைந்து க்ராஸ் செய்ததை இருட்டுக்குள் பார்த்தோம்.

* நாகலாபுரத்தில் ஐந்து அருவிகளுக்கும் பெயரே இல்லை. ``நான் வைக்கவா?’’ என்று மூன்று அருவிகளுக்கும் புரியாத பாஷையில் பெயர் சூட்டினார் பாரதி. `எப்படியும் நாலாவது அருவிக்குப் போய்விடலாம்’ என்பதில் ஆர்வமாய் இருந்தனர் தம்பதியர். ஆனால், நேரமின்மை காரணமாக... 90 டிகிரி மேலே ஏறும் பாதை காரணமாக... கிளம்பிவிட்டோம்.

* திரும்பிப் பார்க்கவைக்கும் முகம் சிலருக்கே இருக்கும்; திரும்ப நினைக்கவைக்கும் முகம் சிலருக்குத்தான் இருக்கும். `நாகலாபுரம் திரும்பத் திரும்ப நினைக்க வைத்துக்கொண்டே இருக்கிறது’ என்று திரும்பத் திரும்ப ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருந்தனர் பாரதி தம்பதியினர்.

என்ன பார்க்கலாம்?

கைலாசகோனா அருவி (92 கி.மீ)


திருப்பதி சாலையில் இருக்கும் அருவி. சென்னையிலிருந்து ஒரே நாள்தான். மழைக்காலம்தான் சீஸன். விசாரித்துவிட்டுச் செல்வது நல்லது.

பழவேற்காடு (80 கி.மீ)


ஒரே நாள் பிளானிங்கில் அற்புதமான பீச் டூர். போட்டிங் வசதியும் உண்டு. 8 பேருக்கு 1,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பார்கள். தனித் தீவில் உல்லாசக் குளியல் போடலாம்.

தடா அல்லது உப்பலமடுகு அருவி (87 கி.மீ)

நாகலாபுரம் போன்றே அட்வெஞ்சர் ஸ்பாட். ஒன்றரை மணி நேரம் ட்ரெக்கிங் போய்தான் குளிக்க முடியும். நீச்சல் பார்ட்டிகளுக்குச் சரியான சாய்ஸ்!

தலக்கோனா (192 கி.மீ)


சித்தூரில் இருக்கும் அருவி. 270 அடியிலிருந்து விழும் இந்த அருவி, ஆந்திராவின் பெரிய அருவிகளில் ஒன்று. வெங்கடேஷ்வரா நேஷனல் பார்க் எனும் இடமும் பார்க்க வேண்டிய இடம்.

ஹார்ஸ்லி ஹில்ஸ் (265 கி.மீ)


கடல் மட்டத்திலிருந்து 4,312 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப்பிரதேசம். `ஆந்திராவின் ஊட்டி’ என்று இதைச் சொல்கிறார்கள்.

துமுகுரல்லு அருவி (225 கி.மீ)

பாலமனேர் - குப்பம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இது 40 அடி உயரத்தில் இருந்து விழும் மூலிகை அருவி. மழைக்காலம்தான் இதற்கு சீஸன்.

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

* நாகலாபுரம் மலைப்பிரதேசம் என்பதால், எக்கச்சக்க அருவிகள் மனதைத் திசை திருப்பும். ஆல்ட்டோ எடுக்கப் போய் செலெரியோ எடுத்துவிட்டு வருவதுபோல், நீங்கள் ஓர் அருவியை நினைத்துக்கொண்டு போனால், வேறு ஓர் அருவி பல்ப் கொடுக்கும். அதனால், பயணத்தைத் திட்டமிட்டுத் தொடர்வது நல்லது.

* காட்டுப் பகுதிக்குள் கடுமையான ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்பதால், ஷூ, நல்ல செருப்பு அவசியம். 2 கி.மீ தூரம் வெயிலில்தான் நடக்க வேண்டும். அதனால், தொப்பி அவசியம்.

* நாகலாபுரத்தில் 365 நாளும் சீஸன்தான். ரவுண்ட் தி க்ளாக் வேலைபார்க்கிறது அருவி. நீச்சல் தெரியாதவர்கள் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் போகக் கூடாது.

* காலை 7:30 முதல் அனுமதி. 8 மணிக்கு பார்க்கிங்கில் இருப்பதுபோல் இருந்தால், அருவிகளில் ஆரவாரம் பண்ணிவிட்டு, வெளிச்சம் குறையும் முன் கீழே இறங்கிவிடலாம். இருளில் சிக்கி, பாதை தெரியாமல் காட்டில் அலைந்தவர்கள் ஏராளம்.

* பை நிறைய ஸ்நாக்ஸ், சாப்பாடு எல்லாமே மிக அவசியம்.

* குரங்குகள் தொல்லை அதிகம் என்பதால், சாப்பாட்டுப் பையைக் கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். பைக்/கார் சாவி, மொபைல், கேமராவை பைக்குள் வைத்தால் இன்னும் கவனம்.

* மலைப்பயணத்தில் பாதை மாறினால், 8 கி.மீ வரை நடந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் திரும்பி வர வேண்டும். முதல் சிற்றோடை கடந்து 1 கி.மீ-ல் இடதுபுறம் திரும்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

ஜாலியான குளியலுக்கு வாழ்த்துகள்!

சியாஸ் எப்படி?

ஆரம்பத்தில் மாருதி ஷோரூமில் இருந்த சியாஸ், இப்போது நெக்ஸாவுக்கு புரொமோஷன் ஆகிவிட்டது. குறைவான எடைதான் இதன் மைனஸ். ஆனாலும், ஸ்டெபிலிட்டியில் அசத்துகிறது சியாஸ். ஸ்விஃப்ட்டைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் 7 மிமீ அதிகம். (170 மிமீ). பயப்படத் தேவையில்லை. பிரீமியம் காராக இருந்தாலும், பவர் விண்டோ பட்டன்கள் ஸ்விஃப்ட், டிசையரில் இருப்பவையே. ரிவர்ஸ் கேமரா, கீ-லெஸ், பட்டன் ஸ்டார்ட், ரியர் சன் பிளைண்டு, ரியர் ஏ.சி வென்ட் என வசதிகளில் அசத்துகிறது. ``ஆனால், ப்ளூடூத்ல இதை கனெக்‌ட் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது சார். சிட்டியைவிட கார் பெருசா இருக்கு. சன் ரூஃப் கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும். ரியர் விண்ட்ஷீல்டுக்கு சன் பிளைண்டு கொடுத்திருக்காங்க. இது நாலு பக்கமும் இருப்பதுதானே சரி’’ என்று சில குறைகளை அடுக்கினார் பாரதி. மற்றபடி மைலேஜ் ஓகே! சிட்டி டிரைவிங்குக்கு சியாஸ் பெஸ்ட்!

சென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!