கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8
பிரீமியம் ஸ்டோரி
News
லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

தொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன், டெபுட்டி மேனேஜிங் டைரக்டர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

ந்தத் தொழிலுக்குமே இப்படி ஒரு சிக்கல் உண்டு.  ‘வரவு இருக்குது; ஆனா செலவு அதைவிட அதிகமா இருக்குது’ என்று குறைபடாதவர்கள் இருக்க முடியாது. லாஜிஸ்டிக்ஸ் தொழிலுக்கும் அப்படித்தான். ‘‘வருமானம் வருதுதான். செலவும் அதைவிட எக்ஸ்ட்ராவா வருது. மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். இதற்கு டிப்ஸ் கிடைக்குமா?’’ என்று மோட்டார் விகடன் அலுவலகத்துக்கு மெயில்கள் குவிவதாகச் சொன்னார்கள்.

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

பாரிமுனையைச் சேர்ந்த வாசகர் விஜய். சென்னையில் ‘விஜய் லாஜிஸ்டிக்ஸ்’ எனும் பெயரில் பார்சல் சர்வீஸ், பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் என்று 20 ஆண்டுகளாக லாஜிஸ்டிக்ஸ் தொழில்புரிந்து வருகிறார். சரக்குப் பெயர்ச்சிப் பலன்கள் பகுதியைப் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டார்.

நாங்கள் பேசியதுதான் இந்த இதழுக்கான டாபிக். விஜய்க்கான பதில் என்ன, அவர் எந்த இடத்தில் தவறு செய்கிறார் என்பதை நேருக்கு நேராக விளக்கித் தெளிவுபடுத்தினேன்.

இன்ஜினீயரிங் மாணவரான விஜய்க்கு 24 வயதுதான். தனது தந்தை 18 ஆண்டுகளாக நடத்திவந்த லாஜிஸ்டிக்ஸ் தொழிலை அப்படியே டேக்ஓவர் செய்துகொண்டார். முதலில் இதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. ‘‘லாஜிஸ்டிக்ஸ் ஒயிட் காலர் வேலை கிடையாது. டிரைவர், லாரி, லோடுனு ரொம்ப ஹார்டுவொர்க் பண்ணணும்டா... உனக்கு அது செட் ஆகாது’’ என்று விஜய்யின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் இந்தத் தொழிலுக்கு வந்து, 5 வாகனங்கள் வைத்து சென்னை - புதுச்சேரிக்கு தினசரி லோடு அடித்தும், பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் தொழிலும் செய்துவருகிறார்.

‘‘உங்க டர்ன்-ஓவர் எவ்வளவு?’’ என்று விஜயிடம் கேட்டால், ‘‘இதுக்கு என்னால பதில் சொல்லத் தெரியலைங்கிறதுதான் சார் என்னோட பிரச்னையே’’ என்கிறார். 15,000 ரூபாய் லோடுக்கு ஒரு ட்ரிப் அடிக்கிறார் என்றால்... டிரைவர், டீசல், பராமரிப்பு, EMI எல்லாம் போக விஜய்யிடம் மிஞ்சுவது ஆயிரமோ ஐநூறோகூட இல்லை என்பதுதான் அவரிடம் இருக்கும் சிக்கல். இத்தனைக்கும் தினமும் லோடு அடிக்கிறார். ஆனால், வருமானம் இல்லை என்றால், முறையான ஆடிட்டிங் இல்லை; கஸ்டமர் Priority விஷயத்தில் தெளிவு இல்லை; இருக்கும் சோர்ஸ்களை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பல காரணங்களைப் பட்டியலிட்டேன்.

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

கஸ்டமர்களில் பல வகை உண்டு. தரத்தை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் ஒரு வகை. விலையை மட்டும் குறி வைப்பவர்கள் ஒரு வகை. இரண்டிலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வேலை முடிந்தால் போதும் என்பவர்கள் ஒரு வகை. தரம் - நேரம் ஆகிய இரண்டையும் சரியாக நிர்வகித்து சேவை செய்தால், இந்தத் தொழிலில் நல்ல பெயரும் லாபமும் கிடைக்கும். உதாரணத்துக்கு, இரவு நேரம் ஆட்டோவில் போவதற்கும், பகலில் சவாரி செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. இரவில் நாம் பணத்தைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அந்த நேரத்தில் ஆட்டோக்காரர் டிமாண்ட் செய்வதுதான் ரேட். அதற்காக அநியாய விலை சொல்ல வேண்டும் என்று அர்த்தமில்லை. சரியான ரேட் பேசி; தரமான டெலிவரி கொடுக்க வேண்டும்.

* டெலிவரி, ஒன்று இரண்டு நாள் கழித்து ஆனாலும் பிரச்னை இல்லை; ரேட்தான் முக்கியம் என்பவர்களை இரண்டாம் பிரியாரிட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதில் சூட்சுமம் இருக்கிறது. இதற்குப் பெயர்தான் பிசினஸ் டெவலப்மென்ட். விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை ஃபில்லர் டெலிவரி போல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* பிசினஸில் இரண்டு வகை உண்டு. B to C... B to B. அதாவது, பிசினஸ் டு கஸ்டமர், பிசினஸ் டு பிசினஸ். ஒரு மொபைலை நான் விற்கிறேன். நான் நேரடியாக கஸ்டமருக்கு விற்பது B to C. இன்னொரு பிசினஸ் சென்டரிடம் விற்று, அவர்கள் மூலம் கஸ்டமருக்குப் போவது B to B. இரண்டிலும் தெளிவு வேண்டும்.

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

* விஜய்யிடம் 5 லாரிகள் இருக்கின்றன. ஆனால், 5 லாரிகளுமே முறையாக ஓடவில்லை. 2 லாரிகள் எப்போதுமே ஷெட்டில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. கப்பல் கரையில் இருந்தால் பாதுகாப்புதான். ஆனால், கரையில் இருப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல கப்பல். அதுபோல்தான் வாகனங்களும். லாஜிஸ்டிக்ஸைப் பொறுத்தவரை பராமரிப்பு  மற்றும் ஓய்வு நேரம் போக மீதி நேரம் முழுதும் வாகனத்தின் டயர்கள் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

* வெறும் புதுச்சேரியை மட்டும் செலெக்ட் செய்து ட்ரிப் அடிப்பது மாபெரும் தவறு. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 5 மணி நேரம் ட்ரிப் என்றால், லோடு - அன்லோடிங்குக்கு மூன்று மணிநேரம். ஒரு ட்ரிப்புக்கு 8 மணி நேரம். 24 மணி நேரத்துக்கு 3 ட்ரிப் அடித்தால்தான் கணக்கு டேலி ஆகும். ‘ஒரு நாளைக்கு ஒரு ட்ரிப் அடிச்சாச்சே’ என்று திருப்தி அடைந்தால், லாஜிஸ்டிக்கில் நஷ்டம்தான். திருப்தியே அடையக் கூடாது. 24 மணி நேரத்தில் 5 மணி நேரம் மட்டும்தான் வாகனம் ஓடுகிறது என்றால், அது குற்றம்!

* ஒவ்வொரு ட்ரிப்புக்கும் செலவுக்கான கால்குலேஷனை முதலிலேயே போட்டுவிட வேண்டும். ட்ரிப் முடிந்த பிறகும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணத்தை ஒதுக்கிவிட வேண்டும். எனக்குத் தெரிந்த டிரைவர் ஒருவர், ட்ரிப் முடிந்ததும் - டீசல் சேமிப்பு, டயர், சாப்பாடு, இஎம்ஐ என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சின்னத் தொகையைத் துணிப்பையில் கட்டி வைத்து விடுவார். பின்னாளில் வரும் ட்ரிப்புகளில் இது சொல்ல முடியாத சிக்கலைக் குறைக்கும்.

லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8

* ஒவ்வொரு ட்ரிப்புக்கு முன்பும், பின்பும்... எப்படி நடக்க வேண்டும், எப்படி நடந்தது என்பது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் போட வேண்டும். லாஜிஸ்டிக்கில் கலந்துரையாடல் அவசியம்.

* ஒரு லாரியில் 15 டன் லோடு அடிக்கலாம் என்றால், 8 டன் லோடுக்கும் ஒரே ட்ரிப், 10 டன் லோடுக்கும் ஒரே ட்ரிப் என்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மீதமுள்ள 7 டன்னுக்கு கஸ்டமர் ரெடி செய்து ஒரே நேரத்தில் லோடு அடித்து டெலிவரி கொடுக்கும்போது, நல்ல லாபம் பார்க்கலாம்.

* எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் - விஜய்க்கு டிரைவிங் தெரியாது. லாஜிஸ்டிக்ஸ் தொழிலின் மூலதனமே டிரைவிங்தான். டிரைவர்கள் சொதப்பும் பட்சத்தில், தானே டிரைவிங்கில் இறங்குவது சமயங்களில் கைகொடுக்கும்.

- சரக்கு பெயரும்

தொகுப்பு: தமிழ்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்