கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!

விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!
பிரீமியம் ஸ்டோரி
News
விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!

ரோடு டிரைவ் - யமஹா R15 V3.0தொகுப்பு: தமிழ்

‘ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்’ படத்தில் எத்தனை பாகங்கள் வந்தாலும் ஹிட் அடிக்கும். R15 பைக்கும் அப்படித்தான். இதுவரை வந்த இரண்டு வெர்ஷன்களும் செம ஹிட். காரணம், இதன் ஹாட் டிசைனும் ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் குணமும். இப்போது மட்டுமில்லை; எப்போதுமே பசங்களின் சென்சேஷனல் பைக் - யமஹா R15. இப்போது R15-க்கு மூன்றாவது பிறப்பு. அதாவது, வெர்ஷன் 3.0 வந்துவிட்டது. சென்னை ரேஸ் டிராக்கில் R15-யில் 140 கி.மீ வரை முறுக்கியிருக்கிறேன். ஆனால், ரோட்டில் ஓட்ட வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. விடுவேனா? சிட்டிக்குள், ஹைவேஸில் R15 V 3.0-யை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!

டிசைன் R1 பைக்கா? R15 பைக்கா?

பைக்கை 360 டிகிரியிலும் சுற்றிச் சுற்றி வந்து பார்க்க வேண்டியதில்லை; பைக் வெறியர்கள் ஈஸியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ‘அட, யமஹா R1 மாதிரி இருக்கே!’ ஆம், R1 சூப்பர் பைக் இன்ஸிபிரேஷனில்தான் R15 V 3.0-ன் டிசைன் உருவாகியிருக்கிறது. பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் காக்பிட், செங்குத்தான ரியர் டெய்ல் லைட்ஸ், டேங்க்கில் நீட்டிக் கொண்டிருக்கும் ஸ்டைலான செதில்கள், வைஸர், ஹேண்டில்பாரில் இருக்கும் ஹாலோ டிசைன் எல்லாமே R1 பைக்கின் ஜெராக்ஸ்தான். இளசுகள் கெத்து காட்டலாம். செம ஷார்ப் டிசைனில் பரபரக்கிறது முன் பக்கம். டூயல் LED ஹெட்லைட்ஸ் இரவில் செம பவர்ஃபுல். (FZ25-க்கும் இந்த டிசைனை மனது வைக்கலாமே யமஹா?) சில விஷயங்களில் காஸ்ட் கட்டிங் கண்ணுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தெரிந்தன. பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்குகள் ரொம்பவும் ஒல்லியாக இருப்பது பைக்கின் பிரம்மாண்ட ஸ்டைலுக்கு எடுபடவில்லை. சில இடங்களில் வெல்டிங் வேலைப்பாடுகளிலும் ஃபினிஷிங் சரியில்லை. சீட்டில் இருக்கும் தையல் வேலைப்பாடு மேல் ஆரம்பத்திலேயே சந்தேகம் இருந்தது. சீட் கழன்று விழுவதுபோலவே இருந்தது. ரேஸ் டிராக்கில் ஓட்டும்போதும் இந்தக் குறையைக் கவனித்தேன். ‘வெறும் 1,200 கிமிதான் ஓட்டியிருக்கேன்; சீட் சரியில்லை’ என்று சில வாசகர்களும் குறைப்பட்டது நினைவுக்கு வந்தது. மற்றபடி ஒட்டுமொத்தத் தரம் ஓகே!

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்

யமஹா பைக், ஓட்டும்போதே ஒரு மென்மையான ஃபீல் தெரியும். புது R15-லும் அப்படித்தான். யமஹாவின் இன்ஜின் ரிஃபைன்மென்ட் அப்படி. இதன் 155 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின், 4 வால்வ் மோட்டாரில் இன்டேக் - எக்ஸாஸ்ட் சிஸ்டத்திலும் ஸ்பெஷல் வேலை பார்த்துள்ளது யமஹா. ரிஃபைன்மென்ட் இன்னும் அடுத்த லெவலில் இருக்கிறது. 19.3 bhp பவர், 1.5 kgm டார்க்.

சிட்டிக்குள் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் இன்ஜினும், ரோஹித்-தவான் போல் செம கூட்டணி வைக்கிறது. கியர்பாக்ஸ், இன்ஜின்போலவே அத்தனை ஸ்மூத். இதுவரை நான் ஓட்டிய 150 சிசி பைக்குகளிலேயே இந்த R15தான் க்விக் ஆக்ஸிலரேஷன். 0-100 கி.மீ-யை வெறும் ‘10.7 எண்ணுறதுக்குள்ள’ தொடும் 150 சிசி பைக் இதுதான். 110 கி.மீ-ல் விரட்டியபோதும் இன்ஜின் திணறவில்லை. ஜாலியாக ரெவ் ஆகிறது.

விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!

சமீபகாலமாக யமஹா, VVA என்றொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. Variable Valve Actuation. லோ எண்ட் பர்ஃபாமென்ஸில் ஒரு ஃபிளெக்ஸி பிலிட்டியும், டாப் எண்டில் இன்னும் பவர் டெலிவரியும் கிடைக்க வைக்கும் தொழில்நுட்பம் இது. இதனால் மைலேஜிலும் நல்ல முன்னேற்றம் தெரியும் என்றது யமஹா. எனது டிரைவிங்குக்கு சிட்டியில் 37.2 கி.மீ-யும், ஹைவேஸில் 49.7 கி.மீ-யும் கிடைத்தது. யமஹா சொல்வது சரிதான்.

அப்புறம், அந்த ஸ்லிப்பர் கிளட்ச். ஒருவழியாக கேடிஎம், டிவிஎஸ்-க்குப் பிறகு யமஹா இந்த வசதியை R15-ல் கொடுத்துவிட்டது. அதிக வேகங்களில் சட்டென கியரை டவுன்ஷிஃப்ட் செய்து பைக்கை நிறுத்தும்போது, இந்த ஸ்லிப்பர் கிளட்ச்சின் மகிமை புரியும்.

பக்கா ஹேண்ட்லிங்!

ஸ்போர்ட்ஸ் பைக்காக இருந்தாலும், கம்யூட்டிங்காக இருந்தாலும், கையாளுமை சிறப்பாக இருந்தால்தான் ஓட்டுதல் மகிழ்ச்சியாக அமையும். நான் ஓட்டியவரை இந்த யமஹாவின் ஹேண்ட்லிங் ஃபன் ஆகவே இருந்தது. காரணம், இதன் டெல்டா பாக்ஸ் ஃப்ரேம் கொண்ட டிசைன். இந்த சேஸிதான், 139 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை வளைத்து, நெளித்து, சாய்த்து ஓட்ட வசதியாக இருக்கிறது. ஏரோ டைனமிக்கான டிசைன் சிறப்பாக இயங்கி, டாப் ஸ்பீடில் பைக் ஸ்டேபிளாகச் செல்வதற்கும் இதுதான் காரணம். மேலும், வெர்ஷன் 2.0-ஐவிட 20 மிமீ வீல்பேஸும் குறைந்துள்ளதால், ஹேண்ட்லிங் இன்னும் ஈஸி.

ரைடிங் பொசிஷன் அருமை. க்ளிப் ஆன் ஹேண்டில் பார்கள் பிடிக்கும்போதே ஸ்டைலாக இருக்கின்றன. சீட் உயரத்தை பழசைவிட 15 மிமீ கூட்டியிருக்கிறது. பழசு 800 மிமீதான். உயர்ந்த மனிதர்களுக்கும் இப்போ ஃபிட் டிரைவ் கிடைக்கும். ஆனால், பில்லியன் ரைடர்கள்தான் பாவம். கொஞ்சம் உயரமாகப் பயணிக்க வேண்டும். லாங் ரைடுக்கு இது செட் ஆகாது.

விரட்டி விரட்டி பறக்கத் தோணுது!

முன் பக்கம் MRF Zapper டயர்கள் நல்ல அகலம். சில பைக்குகளில் கார்னரிங் செய்யும்போது, அலெர்ட் ஆறுமுகமாக மாறி பரபரக்க வைக்கும். இதில் கூலான டர்னிங் ரிசல்ட் கிடைத்தது. பின்பக்கம் மெட்ஸெல்லர் ஸ்போர்ட்டெக் M5 டயர்கள். கிரிப்புக்குப் பஞ்சமே இல்லை. முன் பக்கம் 282 மிமீ டிஸ்க்; பின் பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக் எல்லாம் ஓகேதான். ஆனால், இத்தனை பெரிய ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு யமஹா ABS கொடுக்காததற்குக் கண்டனம் தெரிவித்தே ஆக வேண்டும்.

சஸ்பென்ஷன் செட்-அப்பும் அருமை. சின்னச் சின்ன மேடு பள்ளங்களில்கூட கம்ஃபர்ட்னெஸ் தெரிந்தது. ஆனால், ரியர் மோனோஷாக்கில் மட்டும் பழைய பைக்கைவிட லேசாக டைட் செட்-அப். பழைய பைக் 105 மிமீ பயணிக்கும்; இது 97 மிமீதான்.

வெர்ஷன் 3.0 ஓகேவா?

சில இடங்களில் பிளாஸ்டிக் தரம், மிஸ் ஆன ABS என்று சின்னச் சின்னக் குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், R15 V 3.0 எல்லாவற்றிலும் அவுட்ஸாண்டிங்தான். ஸ்டன்னிங் லுக், பவர்ஃபுல் 150 சிசிக்கு நிறைவான மைலேஜ், இன்ஜின் ரிஃபைன்மென்ட் எல்லாமே யமஹாவில் சூப்பர். ஆனால், இதன் விலை 200 சிசி பைக்குகளைவிட அதிகமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் ஆன்ரோடு சென்னை விலை 1.43 லட்சம். இது அப்பாச்சி RTR 200, பல்ஸர் 200 NS போன்றவற்றின் விலையைவிட கிட்டத்தட்ட 30,000 வரை அதிகம். ‘பரவாயில்லைங்க... R15-ல் போனா ரேஸ் பைக் ஓட்டுற ஃபீல் கிடைக்குதே’ எனும் இளசுகளுக்கு இது பெரிய விஷயமாக இருக்காது.