Published:Updated:

காந்திக்கு லிஃப்ட்! MORRIS - 8

காந்திக்கு லிஃப்ட்! MORRIS - 8

கே.கே.மகேஷ்>>பா.காளிமுத்து

 ##~##

வின்டேஜ் கார்களைக் காண் பதே அரிதிலும் அரிதான மதுரையில், மகாத்மா காந்தி பயணம் செய்த சிறப்புக்குரிய கார் ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா? மகாகவி பாரதியின் நண்பரான நாவலர் சோமசுந்தர பாரதியின் கார் அது! மதுரை திருநகரில் உள்ள அவரது கொள்ளுப் பேரனின் வீட்டில் அந்த கார் இன்றும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இங்கிலாந்தின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மோரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இந்த கார். கட் டோர், 4 சிலிண்டர், 8 bhp பவர், சைடு வால்வ் பெட்ரோல் இன்ஜின் என பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. 1936-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கார் இப்போதும் ரன்னிங் கண்டிஷனில் இருப்பது தான் ஆச்சரியம்!

சோமசுந்தர பாரதியின் கொள்ளுப் பேரனான நம்பி கார்த்திகேயன்தான் இப்போது இந்த காரைப் பராமரித்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ''எட்டயபுரம் மன்னரால் பாரதி பட்டம் பெற்றவர்களில் ஒருவரான சோமசுந்தர பாரதி, சிறந்த வழக்கறிஞராகவும், தமிழறிஞராகவும் இருந்தார். 1936-ல் சோமசுந்தர பாரதி இங்கிலாந்து தயாரிப்பான மோரீஸ்-8 காரை வாங்கியிருக்கிறார்.

காந்திக்கு லிஃப்ட்! MORRIS - 8

அந்தக் காலகட்டத்தில் மதுரையில், பி.டி.ராஜன், மில் அதிபர் தியாகராஜ செட்டியார், டி.வி.எஸ் ஆகியோரிடம் மட்டும்தான் கார்கள் இருந்திருக்கின்றன. அதனால், ஒருமுறை மகாத்மா காந்தி மதுரை வந்தபோது, அவரது பயணத்துக்காக தன் காரை அனுப்பி வைத்தார் சோமசுந்தர பாரதி. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து எட்வர்டு ஹாலுக்கு இந்த காரில் பயணித்த மகாத்மா, பிறகு அங்கிருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கும் இதே காரில்தான் சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தையும், அன்றைய நிகழ்ச்சியில் காந்திஜியிடம் வாங்கிய ஆட்டோகிராபையும் பல தலைமுறையாக எங்கள் குடும்பம் பத்திரமாக வைத்திருக்கிறது.

காந்திக்கு லிஃப்ட்! MORRIS - 8

1956-ல் சோமசுந்தர பாரதி மறைந்து விட்டார். அவரது மகனும் அப்போதைய ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ் படிப்புக்குச் சமமானது) அதிகாரியுமான லட்சுமி ரத்தன் பாரதியால், இந்த காரை சரி வர பராமரிக்க முடியவில்லை. அதனால், தன் தந்தையின் நண்பரான சம்போ சங்கர் ராவ் என்பவரிடம் காரை ஒப்படைத்திருக்கிறார். காலப்போக்கில் கை மாறி வந்த இந்த கார், கடைசியாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வந்து சேர்ந்திருக்கிறது!

இதற்கிடையே, இப்படி ஒரு கார் தங்களிடம் இருந்ததை எங்கள் குடும்பத்தினரே மறந்து விட்டார்கள்.

காந்திக்கு லிஃப்ட்! MORRIS - 8

எதேச்சையாக 1990-ல் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரை தொழில் விஷயமாகச் சந்திக்கச் சென்றபோது, இந்த மோரீஸ் காரைப் பார்த்தேன். அவரிடம் மிகவும் வற்புறுத்திக் கேட்டு காரை வாங்கிவிட்டேன்.

1994-ல் மதுரை பசுமலையில் இருந்த தாத்தாவின் கல் பங்களாவை இடித்தபோது, அங்கிருந்த பழைமையான பொருட்களை எல்லாம் சேகரித்தேன்.அப்போது தான், சோமசுந்தர பாரதியிடம் மோரீஸ்-8 கார் இருந்தது புகைப்படங்கள் மற்றும் சில ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது. அந்த ஆவணங்கள் மூலமாக எஸ்.ஏ.சி-யிடம் இருந்து நான் வாங்கிய காரும், சோமசுந்தர பாரதி பயன்படுத்திய காரும் ஒன்றுதான் என்று தெரிந்த போது, பயங்கர சந்தோஷமாகி விட்டேன்.

இங்கிலாந்தில் உள்ள 'மோரீஸ் கார் கிளப்’ உறுப்பினராகிவிட்டதால், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த உதிரி பாகம் வேண்டுமானாலும் இங்கிலாந்தில் இருந்து வாங்குவது எளிதாகிவிட்டது. 6 வோல்ட் பேட்டரி இப்போது கிடைப்பதில்லை என்பதால், ஆரம்பத்தில் வெளியே ஆர்டர் கொடுத்து வாங்கி பயன்படுத்தினேன். இப்போது ஹெட் லைட், வைப்பர் எல்லாவற்றையும் 12 வோல்ட்டுக்கு ஏற்றபடி மாற்றி விட்டேன். இப்போது வருகிற ஆயில்கள் எல்லாம் அடர்த்தி குறைவாக இருப்பதால், பிரேக் ஆயில் மற்றும் டிஃப்ரன்ஷியல் ஆயிலாக விளக்கெண்ணையைத்தான் பயன்படுத்துகிறேன்'' என்று மூச்சு விடாமல் பேசுகிறார் நம்பி கார்த்திகேயன்!

''வின்டேஜ் கார் கிளப் உறுப்பினர் என்ற முறையில் தமிழக அரசிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்க விரும்புகிறேன். வருடாந்திர வரி கட்டுவதற்காக நாங்கள் மிகவும் மெனக்கெட வேண்டியது இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கைகளால் பதிவுச் சான்றிதழின் ஒரிஜினாலிட்டியும் கெட்டு விடுகிறது. எங்கள் காரில் காந்தி பயணித்திருப்பதைப் போல, தமிழக வின்டேஜ் கார்கள் ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் ஒரு வரலாறு இருக்கும். எனவே, வின்டேஜ் கார்கள் அனைத்துக்கும் அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்'' என்று முடித்தார்!