Published:Updated:

கிரேட் எஸ்கேப் - கோவை to கர்நாடகா

யானைகளின் தேசத்தில்...

எஸ்.ஷக்தி

 ##~##

யற்கை சிருஷ்டித்த அற்புதமான விலங்கு - யானை; மனிதன் சிருஷ்டித்த ஆச்சர்யமான விஷயம் மோட்டார்! இந்த இரண்டு பிரம்மாண்டங்களையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தால்...?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'யானைப் பாதைகளை ஃபாலோ செய்ய சென்னை நண்பர் வேணுவின் டாடா சுமோ கிராண்டே படு ராயலாகத் தயாரானது. யானையின் வழித் தடங்களை ஆராய்ச்சி செய்யும் 'தி நேச்சர் டிரஸ்ட்’-டின் நிறுவனர் திருநாரணனிடம் விஷயத்தைக் கூற, பாலாஜி மற்றும் பிரபு ஆகியோருடன் சேர்ந்து திட்டத்துக்கு ஸ்கெட்ச் போட்டார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மூன்று மாநில வனங்களுக்குள்ளும் ஊடுருவிச் செல்வதென முடிவானது. கோவையிலிருந்து கிளம்பி குன்னூர், ஊட்டி, கல்லட்டி கடந்து மசனகுடியை அடைந்தோம். வனப் பகுதிகளில் விலங்குகளைப் பார்க்கும் ஆர்வத்தில், வாகனம் ஓட்டுபவர்கள் இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பத்திலிருந்து இருபது கி.மீ. வேகத்தில் வாகனத்தைச் செலுத்த வேண்டும். ஏனென்றால், புதரோடு புதராக ஒட்டி நிற்கும் விலங்குகள் மெதுவாகச் சென்றால்தான் கண்ணில் படும். இது நமக்கு நல்லது! இரண்டாவது விஷயம் - தலை போகிற அவசியம் நேர்ந்தால் மட்டுமே ஹாரன் அடிக்க வேண்டும். மற்றபடி ஹாரன் என்கிற வஸ்து நம் வாகனத்தில் இருப்பதை மறந்துவிட்டு ஓட்டுவதுதான் விலங்குகளுக்கு நல்லது!

கிரேட் எஸ்கேப் - கோவை to கர்நாடகா

முதுமலை புலிகள் காப்பகத்தில் அடங்கும் மசினகுடி பகுதி, மிக முக்கியமான யானை வழித்தடம். தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் ஒரு ஆண் யானை எங்களைக் கடந்து செல்கிறது. தந்தம் பிரம்மாண்டமாக இருந்தாலும் உடல் மெலிந்து காணப்படுகிறது.

இது குறித்துப் பேச ஆரம்பித்த திருநாரணன், ''யானைங்க நல்ல கொழுக்மொழுக்குன்னு இருக்கணும்னா, நல்ல செழிப்பான தீனி தேவை. ஆனா அக்டோபர், நவம்பர் சீசன்ல முதுமலை வனத்துல வளர்ற செடிகள் அதிக முரட்டுத்தன்மையா மாறிடறதோடு, பூ பூக்கவும் ஆரம்பிச்சிடும். யானைகள் இந்த மாதிரி புற்களை விரும்பி உண்ணாது. ஆக, தீனி குறையுறதாலதான் உடல்  மெலியுது. ஏப்ரல், மே மாசத்துக்கு மேலே பழைய புற்கள் போய் புதிய மென்மையான புற்கள் வர்றப்ப, இங்கே இருக்கிற யானைகளோட தோற்றமும் செழிப்பாயிடும்.

கிரேட் எஸ்கேப் - கோவை to கர்நாடகா

இப்போ நாம போகப் போற முதுமலை புலிகள் காப்பகம் (தமிழ்நாடு), பந்திப்பூர் புலிகள் காப்பகம் (கர்நாடகா), வயநாடு சரணாலயம் (கேரளா) மற்றும் நாகரகொலே தேசிய பூங்கா (கர்நாடகா) இந்த நாலுமே இந்தியாவில் மிக முக்கியமான யானைகள் வழித் தடம். மொத்தம் 12,000 சதுர கிலோ மீட்டர் கொண்ட இந்தப் பகுதிக்குள்ளே, குறைஞ்சது 6,300 யானைகள் வாழ்றதா சமீபத்திய சர்வே சொல்லுது!

யானைகள் மூணு மாசத்துக்கு ஒருமுறை உணவுக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் தன்னோட இருப்பிடத்தை மாற்றும். ஓரிடம் விட்டு இன்னொரு இடம் பயணிக்கிற யானை பயன்படுத்துற பாதையைத்தான் 'யானை வழித்தடம்’-னு சொல்றோம்'' என்று அவர் கூறிக் கொண்டிருக்கையிலேயே, தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியை நெருங்கியிருந்தோம்.

கிரேட் எஸ்கேப் - கோவை to கர்நாடகா

சட்டென ''பாஸ்... மேலே பாருங்க...'' என்கிறார் பாலாஜி. பெரும் மரக்கிளை ஒன்றில் அநாயாசமாகப் படுத்திருக்கும் சிறுத்தை, சின்ன அதிர்வுடன் வந்து நிற்கும் சுமோவைப் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த மரங்களுக்குத் தாவிச் சென்று மறைகிறது.

மசினகுடியில் இருந்து துல்லியமாக முப்பத்தொன்பதாவது கி.மீ.யில் எங்களை வரவேற்கிறது குண்டல்பேட். அங்கிருந்து சுல்தான் பத்தேரி நோக்கிய சாலையில் வளைந்து வேகம் பிடிக்கிறது சுமோ கிராண்டே. பீட்ரூட், மஞ்சள், முட்டைக்கோஸ், பச்சைப் பயறு என விவசாயம் வெளுத்து வாங்குகிறது. குண்டல்பேட்டிலிருந்து சரியாக முப்பத்து ஏழாவது கி.மீ.யில் வரவேற்கிறது கேரள மாநிலம்.

கிரேட் எஸ்கேப் - கோவை to கர்நாடகா

''வெயிட் வெயிட்! காட்டு மாடு கிராஸ் பண்ணப் போகுது!'' என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுக்கிறார் திருநாரணன். அவரது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் அந்த அகன்ற சாலையை இரண்டே தாவலில் பாய்ந்து கடக்கிறது ஆண் காட்டு மாடு ஒன்று. இந்த வனத்தில் செழிப்பான புற்கள் இருக்கிறது என்பது, அந்தக் காட்டு மாட்டின் வனப்பிலேயே புரிகிறது!

வளமான வனப் பாதை ஆரம்பித்து விட்டதால், மீண்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தி சுமார் பத்து கிலோ மீட்டர் வேகத்தில், செகன்ட் கியரிலேயே சுமோவைச் செலுத்த ஆரம்பிக்கிறார் பாலாஜி. சுமார் முப்பது கிலோ மீட்டரில் முத்தங்கா சரணாலயம் 'ஹலோ’ சொல்கிறது. அடுத்த சில நொடிகளில் சாலையின் வலதுபுறம் உள்வாங்கியபடி நிற்கின்றன குட்டி யானை ஒன்றும், சற்றே வளர்ந்த பெண் யானை ஒன்றும்!

சாலையைக் கடக்க அவை எத்தனிப்பதும், தூசி கிளம்ப பேய் வேகத்தில் வரும் வாகனங்கள் அவற்றை மிரள வைப்பதும் கண் முன்னே கஷ்டமாக விரிகிறது. அந்த சோகக் காட்சியைப் பார்த்து விட்டு எதேச்சையாக இடது புறம் திரும்பினால் நம் வாகனத்தையே முறைத்தபடி நிற்கிறது ஆண் யானை ஒன்று. யானைகள் அதிகம் கடக்கும் இந்த மிக நீண்ட வனச் சாலையில், அறிவுறுத்தும் பலகைகள் எதுவும் இல்லாமலிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது நமக்கு. மனிதர்களைப் பாதுகாக்க ஹைவே பேட்ரோல் வாகனம் இருப்பதுபோல, அடாவடிப் பேர்வழிகளிடம் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க ஒரு 'வைல்டு லைஃப் பேட்ரோல்’ இருந்தால் தேவலாம் என்றிருக்கிறது. ஆனால் முதுமலை, பந்திப்பூர் போல இங்கேயும் இரவு ஒன்பது மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பது ஆறுதலான விஷயம். இந்த இடைவெளி நேரத்தில் சிறுத்தைகள் மற்றும் புலிகளின் நடமாட்டம் சாலையிலேயே இருக்கிறது என செக்போஸ்ட் நபர்கள் சொல்கிறார்கள்.

கேரள அரசின் வருவாய்த் துறை சோதனைச் சாவடிகளைக் கடந்து, சுல்தான்பத்தேரியை அடைகிறோம். வளர்ந்த ஊரான பத்தேரியில் சப்பாத்தியும், பன்னீர் பட்டர் மசாலாவுமாக இரவு உணவு கழிகிறது. அடுத்து எங்கள் இலக்கு கர்நாடக மாநிலத்தில் அடங்கும் மிக பிரபலமான வனப்பகுதியான 'நாகரகொலே தேசிய பூங்கா’. இரவோடு இரவாக நாகரகொலெ நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

சுல்தான்பத்தேரியில் சூப்பராகத் தொடங்கும் ரோடு - திடீரென குறுகிய வளைவுகள், திடீர் பள்ளங்கள் எனப் பயணிக்கிறது. பின் நள்ளிரவில் செக்போஸ்டினை அடைந்து காரை நிறுத்திவிட்டு, சுமோவுக்குள்ளேயே சூப்பர் தூக்கம் போடுகிறோம். காலை ஆறு மணிக்கு முதல் ஆளாக செக் போஸ்ட் தாண்டிப் பயணிக்க ஆரம்பிக்கிறோம். மான், செந்நாய்கள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக தலை தூக்குகின்றன.

எல்லாவற்றுக்கும் ஹலோ சொல்லி வந்த நாம், கும்கி யானைகள் முகாமிலிருந்து சற்றுத் தள்ளிப் போய் வலதுபுறம் திரும்பி, ஹெச்.டிகோட்டை சாலையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம். சில கி.மீ.களுக்கு அப்பால், காட்டுக் கோழியைத் தவிர வேறேதும் கண்ணில் படவில்லை. இந்த நேரத்தில் எதிரில் வந்த கர்நாடக அரசுப் பேருந்து டிரைவர், துதிக்கை போல் தன் கைகளை வெளியே நீட்டி வளைத்து எங்களுக்கு சமிக்ஞை செய்து செல்கிறார். அவர் சொன்னபடியே அடுத்த அரை கி.மீ-யில் குடும்பம் சகிதமாக சுமார் நான்கு யானைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

செக்போஸ்டில் சுமோவுக்கு ஓய்வு கொடுக்கிறோம். அப்போது தோள் தொட்டு என்னைத் திருப்பும் திருநாரணன், ''இதுவரைக்கும் மூன்று மாநிலத்துல பல நேஷனல் பார்க்குகளைப் பார்த்துட்டோம். நடைபயிலுற யானைகள் எல்லைகளைத் தாண்டி, மற்ற மாநில வன யானைகளோடும் பழகி இனவிருத்தி செய்யணும். அப்போ தான் ஹெல்தியான பரம்பரை உருவாகும். ஒரே காட்டுக்குள்ளேயே சுற்றி, அதே இனத்துக்குள் உறவு வெச்சுக்கிறது ஆரோக்கியமான விஷயமில்லை.

யானை ஒரு ஆதார உயிரினம். காரணம், இந்த விலங்குக்கு ஜீரண சக்தி ரொம்பக் குறைவு. அரைச்சும், அரைக்காமலும் இது போடுற சாணம் மூலமாதான் பெரும்பாலும் காடுகள்ல அதிக மரங்கள் வளருது. யானை பிய்த்துப் போட்ட தழைகளைத் தின்றுதான் காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான்கள் போன்றவை உயிர் வாழ்கின்றன. யானை மட்டும் இல்லேன்னா வன உயிர்ச் சுழலே அடிபட்டுப் போகும். வனம் இல்லேன்னா நாம இல்லை, இந்த உலகமே இல்லை. இது புரியாம யானைகள் ஒவ்வொரு பருவமும் வலம் வருகிற காரிடார்களை ஆக்கிரமிச்சு வீடும், காலேஜும் கட்டிடுறோம். பழைய ரூட்ல வர்ற யானை இந்தப் பிரச்னைகளைக் கண்டு ஆடிப்போயி முரண்டு பண்ணுது. இதைத்தான் 'ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்’-னு பழி பேசுறோம். இது ரொம்பவே தப்பு. பேருயிரான யானையைக் காப்போம்... வாங்க பாஸ்!'' என்று நிறுத்தினார்.

மீண்டும் சுல்தான் பத்தேரி, குண்டல்பேட் வந்து திம்பம் வழியாக தரைப் பாதையைத் தொட்டது சுமோ. இனி யானையைப் பார்க்க வாய்ப்பில்லை என்று வருந்தியவாறு சுமோவின் ஸ்டீயரிங்கைப் பிடித்த வேணு, ஒரு இடத்தில் அதிர்ந்து காரை நிறுத்தினார். எதிரே தனது ஆண் குட்டியுடன் ஆனந்தமாக புல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தது இளம் பெண் யானை ஒன்று. கடவுளைக் கண்ட சந்தோஷத்தில் எல்லோரும் கிரேட் எஸ்கேப்!