கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஏமியோ இல்லை... ரோமியோ!

ஏமியோ இல்லை... ரோமியோ!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏமியோ இல்லை... ரோமியோ!

டிராக் டிரைவ் - ஃபோக்ஸ்வாகன் ஏமியோ கப் கார்தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ஏமியோ இல்லை... ரோமியோ!

சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்காக ஃபோக்ஸ்வாகன் தயாரித்ததுதான் ஏமியோ! இதே ஏமியோவில் ரேஸிங் வெர்ஷனும் இருக்கிறது. அதுதான் ஏமியோ கப். சென்னை ரேஸ் டிராக்கில் ஏமியோ கப் காரை டெஸ்ட் செய்தேன்.

சாதாரண ஏமியோவுக்கும், ரேஸிங் வெர்ஷனுக்கும் முன்பக்க டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. காரின் பின்பக்கத்திலும்  இதயத்திலும்தான். பின்பக்கம் ஸ்பாய்லரும், 17 இன்ச் டயர்களும்தான் டிசைனில் வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியும் மாற்றங்கள். இதைக் கவனிக்காமல் உள்ளே போய் உட்கார்ந்து ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் விவகாரம் புரியும். சூப்பர் கார் ரேஞ்சுக்கு `பீட்’ காதைப் பிளக்கிறது. ஆம்... இதில் இருக்கும் இன்ஜின்  4 சிலிண்டர் 1,798 சிசி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இதன் பவர்  205 bhp. ஸ்டீயரிங்குக்குக் கீழேயே பேடில் ஷிஃப்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ரேஸ் ட்ராக்கில் இன்ஸ்ட்ரக்டருடன் கோ-டிரைவர் சீட்டில் பயணம்செய்து ட்ரையல் பார்த்துக்கொண்டேன். சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கின்  நீளம் 3.74 கி.மீ. புத் சர்க்யூட் டிராக்குக்குப் பிறகு, ரேஸிங்கில் பக்காவான வளைவு-நெளிவுகள் கொண்ட டிராக், இருங்காட்டுக்கோட்டை டிராக்தான். 3.74 கி.மீ-யை தடாலென 1.35 நிமிடத்தில் கடந்து பிட் ஸ்டாப்பில் நிறுத்தினார் நமது இன்ஸ்ட்ரக்டர். விசாரித்தால், ``2016 ஏமியோ கப் சாம்பியன்’’ என்றார் அடக்கத்துடன்.

ஹெல்மெட் போட்டுக் கொண்டு காரில் ஏறினேன். ஐடிலிங்கிலேயே 2,500 ஆர்பிஎம்-க்கு நெருக்கத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது முள். ஆக்ஸிலரேட்டரை ஒரே மிதி. ஒரு ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெச்சில் 130 கி.மீ வேகத்தில் முள் துடித்தது... இதயமும்தான்.

ஏமியோ இல்லை... ரோமியோ!

சாதாரண காரின் கியர்பாக்ஸுக்கும் இதன் கியர்பாக்ஸுக்கும் வித்தியாசம் உண்டு. அதே மேனுவல்தான். ஆனால், இதற்குப் பெயர் `சீக்வென்ஷியல் கியர்’. எலெக்ட்ரோ மேக்னடிக் ஆக்சுவேட்டர் மூலம் வேலை செய்யும். கிளட்ச் பிளேவிலும் வித்தியாசம் இருக்கும். இதற்குப் பெயர் `சாக்ஷ் (SACHS) ரேஸிங் கிளட்ச்’ .

ராக்கெட் வேகத்தில், ஏமியோவை தரையில் பறக்கவிட்டேன். கார்னரிங்கில் சில டெக்னிக்ஸ் சொல்லித் தந்திருந்தனர். அதாவது, இடதுபக்கம் திரும்புவதற்கு வலதுபக்கம் போய்த் திரும்பினால், எக்ஸ்ட்ரா நேரம் எடுக்கும். டிராக் ஓரத்திலேயே தடதடத்தது ஏமியோ. 100 கி.மீ வேகத்தில் திருப்பினாலும், பாடி ரோல் கொஞ்சம் போல்தான் தெரிந்தது. ஆனால், ரோலர்கோஸ்டரில் திரும்புவதுபோல் ஜில்லென வயிற்றுக்குள் ஏதோ உருண்டது. டயர்கள் அத்தனை கிரிப்.

டிராக்கில் 50 என்று நெடுஞ்சாலை மாதிரி சைன் போர்டு வைத்திருந்தார்கள். இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு வேகத்தில் வந்தாலும், 50-க்குக் கீழ் கொண்டுவந்துதான் கார்னரிங் எடுக்க வேண்டும் என்று அர்த்தம். இங்கே ரேஸ் வாகனங்களுக்கு ஹார்டு பிரேக்கிங் அவசியம்.

பிரேக்கில் 68 கிலோவையும் இறக்கினேன். அதாவது, என் மொத்த எடையையும் பிரேக்கில் வைத்தேன். 120 கி.மீ வேகம், தடாலென 50-க்கு வந்திறங்கியது. 334மிமீ / 232மிமீ கேலிப்பர் ரேஸிங் டிஸ்க் பிரேக்ஸ். அடடா! அற்புதமான அனுபவம்.  பிட் லேனுக்குள் வந்திறங்கும்போது, இதயத்துடிப்பு எத்தனை ஆர்பிஎம்-ல் துடித்துக் கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

நான் ஏமியோவை ஓட்டவில்லை; பவர்ஃபுல் ரோமியோவை ஓட்டிவிட்டு வந்திருக்கிறேன்.