Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக்: திருப்பூர்

அழுக்குத் துணி போடுறதுக்கு ஆசைப்பட்டேன்

கி.ச.திலீபன்  தி.விஜய்

 ##~##

திருப்பூர் வட்டாரத்தில் டிராவல்ஸ் கார்களின் புகலிடமாகத் திகழ்கிறது அண்ணாமலை ஆட்டோ கேரேஜ். அந்த வொர்க் ஷாப்பில் எந்நேரமும் அழுக்கு உடையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் இதன் உரிமையாளர் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள். கடந்த 20 ஆண்டுகளாக வொர்க் ஷாப் நடத்தி, நேரம் தவறாமைக்குப் பெயர் எடுத்த இவரைக் கொண்டாடுகிறார்கள் திருப்பூர் நகர கார் உரிமையாளர்கள். அம்பாஸடர் இன்ஜினைப் பிரித்து மேய்ந்துகொண்டு இருந்த அண்ணாமலையிடம் பேசினோம். வேலையை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டே நம்மிடம் பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என்னோட சொந்த ஊரு புதுக்கோட்டை - திருமயம் பக்கம் தெக்கூர். படிக்கும் போதிருந்தே எனக்கு மெக்கானிக் ஃபீல்டு மேல ஒரு ஈர்ப்பு. ஏனோ இந்த அழுக்குத் துணி போடுறதுக்கு அவ்வளவு ஆசைப்பட்டேன். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். முடிச்சதும் மெட்ராஸ்ல ரெண்டு வருஷம் ஒரு ஹோட்டலில் சப்ளையர் வேலைக்குப் போனேன். அங்கிருந்து கோயம்புத்தூருக்கு வந்து இன்னொரு ஹோட்டல் கடையில சேர்ந்தேன். அந்த ஹோட்டலுக்கு சாப்பிட கார் பெயின்டர் ஒருத்தர் வருவார். அவர் வரும்போதெல்லாம் மெக்கானிக் ஷெட்ல வேலை வேணும்னு கேட்டுக்கிட்டே இருப்பேன். அவர் என்னை 1984-ல் லட்சுமி ஆட்டோ கேரேஜ் பஞ்சவர்ணம் என்பவரிடம் சேர்த்துவிட்டார். அப்ப எனக்கு வயசு 16.

நம்ம ஊரு மெக்கானிக்: திருப்பூர்

நான் ஸ்பானர் பிடிச்சுப் பழகின அந்தக் காலத்துல பிளைமவுத், ஹில்மேன், ஆஸ்டின், ஸ்டாண்டர்டு, ஹெரால்டு, அம்பாஸடர், ஃபியட்- எலிகண்ட், செலக்ட், சூப்பர் செலக்ட், பிரீமியர் பத்மினி-னு பல காருங்க இருக்கும். எல்லாமே பெட்ரோல்தான். சில கார்கள் மட்டும்தான் டீசல். அப்ப எனக்கு அம்பாஸடர் காரை ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்துல அம்பாஸடருக்கு இருந்த மரியாதையே தனி!

நல்லா உழைச்சா கட்டாயம் முன்னேறுவோம்னு உழைப்பு மேல எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. பகல் முழுசும் மெக்கானிக் ஷெட்ல வேலை செய்வேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஹோட்டலுக்கு சப்ளை பண்ணப் போயிடுவேன். ரெண்டு வேலையுமே செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

நம்ம ஊரு மெக்கானிக்: திருப்பூர்

1986-ல் திருப்பூருக்கு வந்து ராஜி ஆட்டோ கேரேஜ் பழனிச்சாமிகிட்ட வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப நான் கை தேர்ந்த மெக்கானிக். என்னதான் பல காருங்க வந்தாலும் அம்பாஸடர் காருக்கு நிகராகுமான்னு யோசிச்சுக்கிட்டு இருப்பேன். அந்த ஷெட்டுக்கு வர்ற அம்பாஸடர் காரை ரெடி பண்ணுறது நான்தான். கொஞ்ச நாள்ல அம்பாஸடர் கார் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டேன்.

1991-ல் தான் சொந்தமா அண்ணாமலை ஆட்டோ கேரேஜைத் தொடங்கினேன்... அப்ப வட திருப்பூரில் நான் ஏழாவது ஆள். ஏதோ கார் ஷெட்ல வேலை பார்த்த அனுபவம் கை கொடுக்கும்ங்கிற நம்பிக்கையிலதான் ஆரம்பிச்சேன். ஆனா, கஸ்டமரைத் தக்க வெச்சுக்கணும்னா வேலை நல்லா இருந்தா மட்டும் பத்தாது; ரேட்டுலயும் அனுசரிச்சுக்கணும்; எல்லார்கிட்டயும் பணிவா பேசணும்னு அதுக்கப்புறம்தான் கத்துக்கிட்டேன். நானும் நஷ்டமடையக் கூடாது; என்னோட கஸ்டமருக்கும் அதிக செலவு வைக்கக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். ராப்பகல் பாக்காம வேலை செய்வேன். இதெல்லாம்தான் பல கஸ்டமர்களை எனக்குச் சம்பாதிச்சுக் குடுத்திருக்கு!

நான் ஷெட் தொடங்கினப்பவெல்லாம் 'டி’-போர்டு காருங்கதான் அதிகம். வாடகை கார் ஓட்டுறவங்களுக்கெல்லாம் ஒரு மணி நேரம் லேட் ஆனாலும்கூட வருமானம் போயிடும். அதனால, சொன்னா... சொன்ன நேரத்துக்குச் செஞ்சு குடுத்துடுவேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கஸ்டமர் மத்தியில நல்ல பேரைத் தேடிக்கிட்டேன்.

அன்னைக்கு இருந்த கார்களைவிட இன்னைக்கு எத்தனையோ மாடல்கள் வந்தாச்சு. காலத்துக்குத் தகுந்த மாதிரி நாங்களும் மாறிக்கிட்டாத்தான் எங்க வண்டியும் ஓடும் இல்லையா? மெக்கானிஸம்ங்கிற பேட்டர்ன் என்னைக்குமே ஒண்ணுதான். அதனால எந்த காருன்னாலும் பிரிச்சு மேய்ஞ்சிடுவேன்.

என்ன ஒரு வருத்தம்னா... அப்ப எல்லாம் மெக்கானிக் கடைகள்ல வேலைக்குச் சேர முண்டியடிச்சுகிட்டு வருவாங்க. ஆனா, இப்ப பல மெக்கானிக் ஷெட்ல ஆட்களே பத்தாம திண்டாடுற நிலை இருக்கு. டிப்ளமோ, ஐ.டி.ஐ படிக்கிறவங்களும் கம்பெனிகளைத் தேடிப் போயிடுறாங்க!'' என்று எதார்த்தத்தைச் சொல்லி முடிக்கிறார் அண்ணாமலை என்ற ரவி!