Published:Updated:

ஹை - டெக் நம்பர் பிளேட்!

உச்சநீதி மன்றத்தின் குட்டு!

டி.எல்.சஞ்சீவிகுமார்

 ##~##

'4 வாரங்களுக்குள் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாநிலங்கள் எல்லாம், இந்தக் குறுகிய காலத்தில் எப்படி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. ''அது என்ன உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டம்?'' என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டோம். ''நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பெயர் வேண்டாமே...'' என்ற நிபந்தனையோடு அந்தத் திட்டம் குறித்து நம்மிடம் பேசினார் ஓர் அதிகாரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மத்திய மோட்டார் வாகன விதிகளுக்கான தொழில்நுட்ப நிலைக் குழுவின் பரிந்துரைப்படி, வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்துக்காக, கடந்த 2001-ம் ஆண்டே மத்திய அரசின் போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஐந்தாண்டுகள் இழுத்தடித்த பின்பு 2006-ம் ஆண்டு தமிழக அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பின்பு, பெரியதாக இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

ஹை - டெக் நம்பர் பிளேட்!

கிரிமினல்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தகிடுதத்தம் செய்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம். அது தவிர, விபத்து மற்றும் வாகனங்கள் காணாமல் போனாலோ அந்த வாகனத்தைப் பிடித்தவுடன் அந்த உரிமையாளரின் மொத்த விபரமும் இந்தத் திட்டம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை வாகனத்தின் முன் புறமும் பின்புறமும் பொருத்த வேண்டும். இதை அரசால் அங்கீகரிக்கப்பட்ட வொர்க் ஷாப்களில் மட்டுமே பொருத்த முடியும். ஒருமுறை பொருத்திய பின்பு, இந்த நம்பர் பிளேட்டை அகற்றவோ, கழற்றி வேறு வாகனத்தில் பொருத்தவோ முடியாது. அப்படி முறைகேடு செய்ய முயற்சித்தால், அந்த நம்பர் பிளேட் தானாக அழிந்து விடும் வகையில் 'ஸ்நாப் லாக்’ தொழில்நுட்ப வசதியில் செய்யப் பட்டுள்ளது.

இந்த நம்பர் பிளேட்களில் உள்ள விபரங்களை சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்தே காணும் வகையில் குரோமியம் ஹாலோ கிராம் ஸ்டிக்கரால் எம்போஸ் செய்யப்பட்டு இருக்கும். நம்பர் பிளேட்டில் 'ரெட்ரோ ரெஃப்ளக்டிவ்’ ஃபிலிமில் 'இந்தியா’ என்று 45 டிகிரி சாய்வில் ஆங்கில எழுத்துக்கள் பதியப்பட்டு இருக்கும். இந்த பிளேட்களின் இடது ஓரத்தில் நீல நிறத்தில் ஐ.என்.டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். வாகனத்தின் விண்ட் ஷீல்டில் மூன்றாவதாக சிறிய வடிவிலான நம்பர் பிளேட் ஒன்றும் பொருத்தப்படும். அதில், வாகனத்தின் இன்ஜின் மற்றும் சேஸி எண், வாகனத்தைப் பதிவு செய்த அதிகாரியின் பெயர், கையப்பம் ஆகியவை இருக்கும். இவை எல்லாம் இல்லாமல் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, கை ரேகை, புகைப்படம் அடங்கிய 'சிப்’ ஒன்றும் இந்த பிளேட்டில் பொருத்தப்பட்டு இருக்கும். வாகனத்தை விற்க வேண்டும் என்றாலும் அரசு அலுவலகம் மூலமே இந்த விபரங்களை மாற்றித் தர முடியும்.

இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களை, உலகின் எந்த மூலையில் மடக்கினாலும் அதன் உரிமையாளரின் விபரங்களை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும். நம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாதச் செயல்களில் 90 சதவிகிதம் வாகனங்களே பயன்படுத்தப் படுகின்றன. இப்போது குற்றச் செயல்களைத் துப்புத் துலக்க மொபைல் போன் எந்தளவுக்கு பயன் மிக்கவையாக இருக்கின்றனவோ, அதுபோல் இந்த நம்பர் பிளேட்களும் உதவும். ஏற்கெனவே இந்தத் தொழில்நுட்பம் பஞ்சாப் (சண்டிகர்), டில்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் இருக்கின்றன.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அவசரமாக தமிழகம் முழுவதும் இந்த நம்பர் பிளேட்களைப் பொருத்துவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகத்தை தலா 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கொண்ட ஆறு மண்டலமாகப் பிரித்து, ஒரே சமயத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தில் ஒரு கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 717 வாகனங்கள் உள்ளன. மிகப் பெரிய பிராசஸ் இது. அத்தனைக்கும் நம்பர் பிளேட் பொருத்துவதற்கு நான்கு வாரம் காலம் போதாது. எப்படிச் சமாளிப்பது என்றும் புரியவில்லை...'' என்கிறார். இந்த நம்பர் பிளேட்டின் விலை சுமார் 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை ஆகலாம்.

பாதுகாப்பு விஷயத்திலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போடுவது வரை காத்திருக்க வேண்டுமா?!