டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ல்லடித்துக் கிடந்த பைக் மார்க்கெட்டை, மீண்டும் டாப் கியரில் தடதடக்க வைத்திருக்கிறது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ! ஐம்பதுக்கும் மேலான புத்தம் புது பைக்குகள் எக்ஸ்போவில் அறிமுகமாக... அரங்கத்துக்குள் கொலை வெறிக் கூட்டம்!

 ஆட்டோ எக்ஸ்போவில் எப்போதுமே பைக் நிறுவனங்களின் அரங்கம் தனியாக இருக்கும். ஆனால், இந்த முறை கார் தயாரிப்பு நிறுவனங்களின் அருகிலேயே பைக் நிறுவனங்களும் கடை விரித்திருந்தன. ராயல் என்ஃபீல்டு, வெஸ்பா, ஏப்ரில்லா, ஹோண்டா, டிவிஎஸ், யமஹா, ஹார்லி டேவிட்சன், டிரையம்ப், டுகாட்டி, சுஸ¨கி, மஹிந்திரா, ஹீரோ என உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் அரங்கம் முழுவதும் வியாபித்திருக்க... இந்தியாவின் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளரான பஜாஜ் மட்டும் மிஸ்ஸிங்! பஜாஜ் மட்டுமல்லாது, பஜாஜ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கவாஸாகி, கேடிஎம் பைக்குகளும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெறவில்லை!

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ராயல் என்ஃபீல்டு

 தண்டர்பேர்டு 500

2010 ஆட்டோ எக்ஸ்போவில் சத்தமே இல்லாமல் இருந்த ராயல் என்ஃபீல்டு ஸ்டாலில், இந்த முறை கூட்டம் கும்மியது. இங்கு, தண்டர்பேர்டு 500 பைக்தான் ஷோ ஸ்டாப்பர்! டூரிங் பைக்ஸ் போட்டியில் ஹார்லி, டிரையம்ப் என வெளிநாட்டு நிறுவனங்கள் களம் இறங்குவதால், தண்டர்பேர்டு பைக்கின் இன்ஜின் சிசி அளவை அதிகரித்து, சக்தியைக் கூட்டி, சில சிறப்பம்சங்களைச் சேர்த்து அறிமுகப்படுத்திருக்கிறது. ராயல் என்ஃபீல்டு, மேட் மெட்டாலிக் பிளாக், மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் வின்ட்டர் பிளாக் என மூன்று விதமான கறுப்பு வண்ணத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

சாய்ந்தவாக்கில் கால்களை நீட்டி உட்கார வசதியாக, ஃபுட் ரெஸ்ட் இடம் மாறியிருக்கிறது. அதேபோல், ஸ்பிளிட் சீட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னால் யாரும் உட்காரவில்லை என்றால், சீட்டை அகற்றிவிட்டு சூட்கேஸைக் கட்டிக் கொண்டு பயணிக்க ஹூக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தண்டர்பேர்டு 350 பைக்கில் இருந்ததுபோல, வட்ட வடிவ ஒற்றை டெயில் லைட்டுக்குப் பதில், இரட்டை எல்இடி டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் டிஜிட்டல் டிரிப் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில்  பாதுகாப்பாகப் பயணிக்க ஹாலோஜன் ஹெட் லைட்டும், லோ பீமுக்கு புரொஜெக்டர் பல்பும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய தண்டர்பேர்டில் பின் பக்கம் டிஸ்க் பிரேக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், 350 தண்டர்பேர்டில் இருந்தது போல,  13.5 லிட்டர் பெட்ரோல் டேங்குக்குப் பதில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜினைப் பொறுத்தவரை 499 சிசி, 27.2 bhp சக்தி கொண்ட யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஜினைத் தவிர, கரடு முரடான பாதைகளில் பயணிக்க ஏதுவாக, 41 மிமீ முன்பக்க ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. தண்டர்பேர்டு 500 சிசி பைக்கின் விலை 2 லட்ச ரூபாயை நெருங்கும் என எதிர்பார்க்கலாம். மே - ஜூன் மாதவாக்கில் பைக் விற்பனைக்கு வரும்!

கஃபே ரேஸர்

2010 ஆட்டோ எக்ஸ்போவில் அட்ராக்ஷனை அள்ளிய கஃபே ரேஸர் கான்செப்ட் பைக்கின் வெர்ஷன்-2, இந்த முறையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். பழைமையும் புதுமையும் கலந்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த கஃபே ரேஸர் பைக்கில், கிளிப் ஆன் ஹேண்டில் பார் (2 பீஸ்) இருக்கிறது. பின் பக்கம் இருப்பதோ ஓலின்ஸ் சஸ்பென்ஷன். ரியர் வியூ கண்ணாடிகள் ஹேண்டில் பாரின் முடிவில் இரண்டு பக்கமும் சேர்த்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. அனலாக் ஸ்பீடோ, ஓடோ மீட்டர் டயல்கள் கிளாஸிக் பைக்குக்கான அடையாளத்தைத் தருகின்றன. இந்த கஃபே ரேஸர் பைக்கைக் காட்சிக்கு வைத்திருந்ததைத் தவிர, பைக்கின் விவரங்களைப் பற்றி வாயைத் திறக்கவில்லை என்ஃபீல்டு நிறுவனம். வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் இதே கஃபே ரேஸர் பைக்கில் 500 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால், இந்தியாவிலும் அதே 500 சிசி பைக்தான் இருக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை 1.70 - 1.80 லட்ச ரூபாய்க்குள் இருக்கும்!

ஹீரோ முதல் ஹார்லி வரை..

 ஹோண்டா

ஹீரோவை விட்டுத் தனியாகப் பிரிந்த பிறகு, ஹோண்டா பங்கேற்கும் முதல் ஆட்டோ எக்ஸ்போ. அதனால், வரிசை கட்டி பைக்குகளை அடுக்கியிருந்தது ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் நிறுவனம். மொத்தம் 7 பைக் /ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சிபிஆர் 150ஆர்

யமஹா ஆர்-15 பைக்கை டார்கெட் செய்து 150ஆர் பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. தோற்றத்தில் அப்படியே சிபிஆர் 250ஆர் பைக்கை முன் நிறுத்துகிறது 150ஆர். லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின் கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 18 bhp சக்தியை வெளிப்படுத்தும். இது யமஹா ஆர்-15 பைக்கின் சக்தியைவிட 1 bhp அதிகம். அதேசமயம், யமஹா ஆர்-15 பைக்கைவிட சிபிஆர் 150ஆர் 2 கிலோ அதிகம். இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்-15 பைக்கைவிட பில்லியனில் உட்காருபவருக்கு அதிக இட வசதி உண்டு என்பதோடு, மிகவும் குனிந்துகொண்டு ஓட்ட வேண்டிய அவசியம் இதில் இல்லை. யமஹா ஆர்-15 பைக்குக்குப் போட்டி என்பதால், இதன் விலை 1 லட்ச ரூபாயை நெருங்கும். மார்ச் மாதம் முதல் இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஹோண்டா.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ட்ரீம் யுகா

சிபி ட்விஸ்ட்டரைத் தொடர்ந்து, 100 சிசி பைக் மார்க்கெட்டில் மற்றுமொரு ஹோண்டா பைக் ட்ரீம் யுகா! ஸ்ப்ளெண்டர், பேஸன் பைக்குகளுக்குப் போட்டியாக களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கை, அன்றாடப் பயன்பாட்டுக்கான பைக்காக வடிவமைத்திருக்கிறது ஹோண்டா. 110 சிசி, 8 bhp சக்தி கொண்ட இந்த பைக்கில், ட்யூப்லெஸ் டயர்களை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 72 கி.மீ மைலேஜ் தரும் என்று சவால் விடுகிறது ஹோண்டா.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

டியோ

டியோ ஸ்கூட்டரின் தோற்றத்திலும், வண்ணத்திலும் புதுமையைப் புகுத்தியிருக்கிறது ஹோண்டா. பழைய 102 சிசி இன்ஜினுக்குப் பதில் இதில் 110 சிசி இன்ஜின் மாற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல், முதன்முறையாக ஸ்கூட்டர்களில் ட்யூப்லெஸ் டயர்களை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. மேலும், இதில் 'காம்பி பிரேக்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் பின் பிரேக்கை மட்டுமே பிடித்தாலும், முன் பிரேக்கும் ஆட்டோமேட்டிக்காக அதே அளவுக்குப் பிடித்து பவர்ஃபுல் பிரேக்கிங் அனுபவத்தை வெளிப்படுத்தும். சீட்டுக்கு அடியில் 18 லிட்டர் கொள்ளளவு இடம் இருப்பதால், பொருட்களைக் கூடுதலாக வைக்க முடியும். புதிய டியோ, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். விலை 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டும்.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

இந்த மூன்று வாகனங்களைத் தவிர புதிய சிபி ஷைன், புதிய நிறத்தில் சிபிஆர் 250ஆர், VT 1300 சிஎக்ஸ், சிபிஆர் 1300ஆர்ஆர் ஃபயர்பிளேடு, R212V மோட்டோ ஜீபி பைக்குகளையும் காட்சிக்கு வைத்திருந்தது ஹோண்டா.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

டிவிஎஸ் 

கான்செப்ட் ஸ்கூட்டர் மற்றும் பைக் தவிர, டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து இந்த முறை எந்த பைக்கும் அறிமுகப்படுத்தப்படவில்லை.  

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்

ஜைவ் பைக்கின் தொழில்நுட்பத்தை ஒட்டி, புதிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை காட்சிக்கு வைத்திருந்தது டிவிஎஸ். இதன்படி இன்ஜினில் இடம் பெற்றிருக்கும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட், பைக்கின் வேகத்தைப் பொருத்து கியர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்து விட்டதைக் கண்டுபிடிக்கும். பிறகு, அதே வேகத்தில் சென்ஸார்கள் மூலம் கியர் ஷிஃப்ட்டிங் டிரம்முடன் இணைந்திருக்கும் மின் கம்பிச் சுருள் வாயிலாக கியரைத் தானாகவே மாற்றி விடும். அதனால், பைக்கை ஓட்டுபவர் கியர்களை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. இந்தத் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறது டிவிஎஸ்.

டார்மேக்ஸ்

இந்தோனேசியாவில் விற்பனையில் இருக்கும் டார்மேக்ஸ் பைக்கைக் காட்சிக்கு வைத்திருந்தது டிவிஎஸ். இந்த பைக்குக்குள் லிக்விட் கூல்டு, 150 சிசி, டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மோனோ சஸ்பென்ஷன் கொண்ட இந்த பைக்கை, இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்குக் கொண்டு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்கிறது டிவிஎஸ்.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

க்யூப்

கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்த எலெக்ட்ரிக் ஹைபிரிட் ஸ்கூட்டரை, இந்த முறையும் காட்சிக்கு வைத்திருந்தது டிவிஎஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இதில் எல்சிடி டிஸ்ப்ளே ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜ், மீதம் இருக்கும் பெட்ரோலின் அளவு, ஸ்பீடோ, ஓடோ விவரங்கள் மற்றும் நேரம் ஆகியவை இந்த எல்சிடி திரை காட்டுகிறது. பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பேட்டரியால் இயங்கும் இந்த ஸ்கூட்டரை ஜூன் மாதம் முதல் டெஸ்ட் செய்ய இருக்கிறது டிவிஎஸ். இதற்காக 100 க்யூப் ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்களிலேயே அதிகமாக 65 - 70 ஆயிரம் ரூபாய் விலைக்கு இது விற்பனைக்கு வரும் என தெரிகிறது!

ரேடியான்

டிவிஎஸ்-ன் புதிய 125 சிசி பைக் இதுதான். கிட்டத்தட்ட ஜைவ் பைக் போலக் காட்சியளிக்கும் இந்த பைக், விற்பனைக்கு வரும்போது மாறிவிடும் என்கிறது டிவிஎஸ். முன் பக்கம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கைத் தவிர, தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளைக் காட்சிக்கு வைத்திருந்தது டிவிஎஸ். அதோடு, அந்தந்த பைக்குகளில் இடம் பெற்றிருக்கும் இன்ஜின்களையும் தனித் தனியாகக் காட்சிக்கு வைத்திருந்தது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது!

ஹீரோ முதல் ஹார்லி வரை..

 யமஹா

கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் குதிக்க இருப்பதாக அறிவித்த யமஹா, சொன்னபடி இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த முறை ஸ்கூட்டரைத் தவிர, புதிய அறிமுகங்கள் எதுவும் யமஹாவிடம் இல்லை!

ஹீரோ முதல் ஹார்லி வரை..

ரே

''இது கான்செப்ட்தான். விற்பனைக்கு வர இருக்கும் மாடலில் இதில் இருக்கும் விஷயங்கள் பல இருக்காது. இப்போது இல்லாத சில விஷயங்கள் இருக்கும்'' என்று அறிவித்திருக்கிறது யமஹா. தோற்றத்தைப் பொறுத்தவரைக்கும் 'ஆஹா... ஓஹோ’ எனப் பாராட்ட எதுவும் இல்லாதபடி, வழக்கமான ஸ்கூட்டர்களையே உரித்து வைத்திருக்கிறது ரே. முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் டிசைனை வைத்துப் பார்க்கும்போது, இது முழுக்க முழுக்க பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்கூட்டர் என்பது புரிகிறது. இதன் இன்ஜின் 100-125 சிசி-க்குள் இருக்கும். தீபாவளி சீசனில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை 40-45 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்!

 ஹீரோ

உலகின் நம்பர் ஒன் பைக் தயாரிப்பாளரான ஹீரோவுக்கு, இந்த ஆட்டோ எக்ஸ்போ தனது புதிய பிராண்டை பிரபலப்படுத்த சிறந்த இடமாக அமைந்தது. ஹோண்டாவிடம் இருந்து தொழில்நுட்ப உடன்பாடு முடிவதற்குள், புதிய பைக்குகளை மார்க்கெட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது ஹீரோ அறிமுகப்படுத்திய பைக்குகள் மூலம் தெரிந்தது. 'ஹோண்டாவுக்கும் ஹீரோவுக்கும் போர்’ என மீடியாக்கள் செய்தி வாசித்துக் கொண்டிருந்த நிலையில், ஹோண்டா ஸ்டாலுக்குள் போய் எல்லா பைக்குகளையும் பார்த்துவிட்டு விவரங்கள் சேகரித்து வந்தார் ஹீரோ நிறுவனத்தின் தலைவர் முஞ்சால். ஆட்டோ எக்ஸ்போ துவங்குவதற்கு முந்தைய நாளே இக்னைட்டர் எனும் பைக்கையும், மேஸ்ட்ரோ எனும் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்தது ஹீரோ.

இக்னைட்டர்

ஹோண்டாவின் ஸ்டன்னர் போலவே இருக்கிறது இக்னைட்டர்.  இது அதிகபட்சமாக 11 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், முன் பக்க டிஸ்க் பிரேக் போன்ற சிறப்பம்சங்களும் உண்டு. இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக்கின் விலை 55-60 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்!

ஹீரோ முதல் ஹார்லி வரை..

மேஸ்ட்ரோ

பெயர் மாறியிருக்கிறதே தவிர, இதற்கும் ஹீரோவின் பழைய ப்ளஷருக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இதில் 109 சிசி 8 bhp சக்தி கொண்ட இன்ஜின். தோற்றத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஸ்பீடோ மீட்டர் டயல் மட்டுமே மாறியிருக்கிறது. இந்த ஸ்கூட்டரை விரைவில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஹீரோ!

லீப்

ஹீரோ முதல் ஹார்லி வரை..

தனது டெக்னிக்கல் திறமையை வெளி உலகுக்குக் காட்ட 'லீப்’ எனும் கான்செப்ட் ஸ்கூட்டரைக் காட்சிக்கு வைத்தது ஹீரோ. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரால் இயங்கும். அதாவது, பேட்டரி சார்ஜ் குறைந்து விட்டால், உடனடியாக பெட்ரோல் மூலம் பைக்கை ஓட்டலாம். ''கான்செப்ட் நிலையில் இருக்கும் இந்த ஸ்கூட்டர், விற்பனைக்கு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்'' என்றார் ஹீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால்!

 மஹிந்திரா

ஹீரோ முதல் ஹார்லி வரை..

மஹிந்திரா புதிதாக எந்த ஸ்கூட்டரையும், பைக்கையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவில்லை. திடீரென விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட ஸ்டாலியோ பைக்கைக் காட்சிக்கு வைத்திருந்தது. 110 சிசி திறன் கொண்ட இந்த பைக்கை, முன்பு அமீர்கானை வைத்து விளம்பரப்படுத்தியது மஹிந்திரா. இடையில் பைக்கின் கியர் பாக்ஸில் பிரச்னைகள் வருவதாகப் புகார்கள் வரவும், விற்பனையை நிறுத்தியது. இப்போது பிரச்னைகளைச் சரி செய்து, மீண்டும் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா. இது தவிர, 300 சிசி மோஜோ பைக்கையும் காட்சிக்கு வைத்திருந்தது மஹிந்திரா. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கை இன்னமும் விற்பனைக்குக் கொண்டு வராத நிலையில், ''இது இன்னமும் கான்செப்ட் பைக்தான். விற்பனைக்கு வருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை'' என்கிறது மஹிந்திரா எந்த சுறுசுறுப்பும் இல்லாமல்!

 சுஸ¨கி

ஹயாட்டே எனும் பைக்கையும், ஸ்விஷ் என்னும் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தியது சுஸ¨கி. ஹயாட்டே எனப் பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர, இது அப்படியே பழைய ஸ்லிங்ஷாட் பைக்தான். ஹயாட்டே என்றால் ஜப்பானிய மொழியில் 'தென்றல்’ என்று அர்த்தமாம். 110 சிசி திறன் கொண்ட இந்த பைக், எப்போது விற்பனைக்கு வரும் என்று சுஸ¨கி அறிவிக்கவில்லை.

'ஸ்விஷ்’ என அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர், அப்படியே ஆக்ஸஸ் ஸ்கூட்டரை நினைவுப்படுத்துகிறது. டிசைன் மட்டும் அல்ல, இன்ஜினும் ஆக்ஸஸுக்குள் இருக்கும் அதே 125 சிசி இன்ஜின். ஹயபூஸா, இன்ட்ரூடர் என வரிசை கட்டி நின்ற சூப்பர் பைக்குகளுக்கு இடையில் 'இ-லெட்’ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் காட்சிக்கு வைத்திருந்தது சுஸ¨கி. லித்தியம் ஐயான் பேட்டரி கொண்ட இந்த ஸ்கூட்டரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை பயணிக்க முடியும் என்று சொல்லும் சுஸ¨கி நிறுவனம், இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியது!

 டிரையம்ப்

இந்தியாவுக்குள் அடி எடுத்து வைத்திருக்கும் டிரையம்ப், ஆட்டோ எக்ஸ்போவை அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டது. பைக் ஸ்டால்களில் இருந்து ஒதுங்கி தனியாகக் கடை விரித்திருந்த டிரையம்ப் நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவுக்குள் தான் அறிமுகப்படுத்த இருக்கும் 7 பைக்குகளையும் அறிமுகப்படுத்தியது. இதில், 'பானவெல்’ என்ற பைக்கின் விலையை 5.50 லட்சம் என அறிவித்து அதிர வைத்தது. அடுத்ததாக, ஸ்ட்ரீட் டிரிபிள் பைக்கின் விலையை 5.75 லட்சமாக அறிவித்திருக்கிறது. விலை குறைவான பைக்குகள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. டேடோனா, டைகர் 800 XC, ஸ்பீடு டிரிப்பிள், ராக்கெட் 3 ரோட்ஸ்ட்டர், ஸ்டார்ம் பைக்குகளையும் டிரையம்ப் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. முதல்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூருவில் ஷோ ரூம்களைத் திறக்க இருக்கும் டிரையம்ப், அடுத்த ஆண்டு சென்னையிலும் ஷோ ரூம் திறக்கிறது!

 ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் FXDB ஸ்ட்ரீட் பாப் மற்றும் கஸ்டம் கிளைடு பைக்குகளை அறிமுகப்படுத்தியது. முன்பு, வெளிநாட்டில் இருந்து அப்படியே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட இந்த பைக்குகள், இனி ஹரியானாவில் உள்ள ஹார்லி டேவிட்சன் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

 வெஸ்பா

ஹீரோ முதல் ஹார்லி வரை..

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது வெஸ்பா. பியாஜியோ நிறுவனத்தின் ஒரு அங்கமான வெஸ்பா ஸ்கூட்டர்கள், இந்த ஆண்டு முதல் இந்தியாவில் மீண்டும் விற்பனையைத் துவக்க இருக்கின்றன. முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 35 டீலர் ஷிப்புகளைத் துவக்க இருக்கும் பியாஜியோ நிறுவனம், ஏப்ரல் மாதம் முதல் வெஸ்பா ஸ்கூட்டர் தயாரிப்பை ஆரம்பிக்க இருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட வெஸ்பா எல்எக்ஸ் ஸ்கூட்டர் முதலில் விற்பனைக்கு வரும். ஆனால், இது விலை உயர்ந்த ஸ்கூட்டராக இருக்கும். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

 டுகாட்டி

ஹீரோ முதல் ஹார்லி வரை..

டுகாட்டி நிறுவனம் மான்ஸ்ட்டர் 795 பைக்கை டெல்லியில் அறிமுகப்படுத்தியது. 803 சிசி திறன், 86 bhp சக்தி கொண்ட இந்த பைக்கின் விலையை முதலில் 6.99 லட்சம் ரூபாய் என அறிவித்தது டுகாட்டி. அடுத்தநாள் டிரையம்ப் தனது பைக்குகளின் விலையை அறிவிக்க... உடனடியாக மான்ஸ்டரின் விலையில் ஒரு லட்ச ரூபாயைக் குறைத்து 5.99 லட்சம் என அறிவித்தது டுகாட்டி. புக்கிங்குகள் துவங்கி விட்ட இந்த பைக்கின் டெலிவரி மார்ச் முதல் துவங்கும்!

 ஏப்ரில்லா, மோட்டோ குஸி

ஏப்ரில்லா, மோட்டோ குஸி நிறுவனங்களும் ஆட்டோ எக்ஸ்போவில் தங்கள் பைக்குகளைக் காட்சிக்கு வைத்திருந்தன. பியாஜியோ நிறுவனத்தின் அங்கமான ஏப்ரில்லா, தனது ஆர்எஸ்வி-4 பைக்கைக் காட்சிக்கு வைத்தது. 1000 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் சக்தி 180 bhp. மோட்டோ குஸியின் நார்க் 1200 ஜிடி பைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 1151 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் பவர் 98 bhp. ஏப்ரில்லா மற்றும் மோட்டோ குஸி பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, அப்படியே விற்பனை செய்ய இருக்கிறது பியாஜியோ.

ஹீரோ முதல் ஹார்லி வரை..

இது தவிர, பிஎம்டபிள்யூ நிறுவனம் கார்களோடு சேர்த்து தனது ஆர்-1200 ஜிஎஸ் மற்றும் எஸ்-1000 ஆர்ஆர் பைக்கையும் காட்சிக்கு வைத்திருந்தது.  

கிட்டத்தட்ட உலகின் அத்தனை பைக் தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பைக்குகளைக் காட்சிக்கு வைத்திருந்ததால்... ஆட்டோ எக்ஸ்போ, பைக் ரசிகர்களின் வருகையால் திக்குமுக்காடியாது!