டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

உச்சபட்ச விழா!

உச்சபட்ச விழா!

 ##~##
உச்சபட்ச விழா!

வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது இந்தியாவின் உச்சபட்ச ஆட்டோமொபைல் திருவிழா. தற்போது உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விளங்குகிறது. இடப் பற்றாக்குறையால், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஸ்டால் அமைக்க இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால், 'உலகின் நம்பர் ஒன் ஆட்டோ ஷோ’ என்ற தகுதியை ஜஸ்ட் மிஸ் செய்துவிட்டது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ! 

திலீப் சாப்ரியா வடிவமைத்திருந்த அவான்தி காரை அறிமுகப்படுத்த அமிதாப் பச்சன், ஆடி காரை அறிமுகப்படுத்த கத்ரீனா கைஃப், நிஸான் காரை அறிமுகப்படுத்த ரன்பீர் கபூர், யமஹா ஸ்டாலுக்கு ஜான் ஆபிரகாம் என நட்சத்திரப் பட்டாளங்கள் படையெடுக்க... அடுத்து யார் வரப் போகிறார் என்று ஒரு பக்கம் பாலிவுட் ஸ்டார்களைத் தேடிக்கொண்டிருந்தது சினிமா ரசிகர் கூட்டம்.

உச்சபட்ச விழா!

ஆட்டோ ஷோவில் குவிந்திருந்த அத்தனை நிறுவனங்களும் ஸ்டைலான அரங்க வடிவமைப்பு, வெளிநாட்டு அழகிகள், கலை நிகழ்ச்சிகள் எனக் கூட்டத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பணத்தை ஏகத்துக்கும் செலவழித்திருந்தன. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், ஏழு நாள் ஷோவுக்காக 20 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியிருந்தது! மற்ற ஸ்டால்களைப் போல அல்லாமல், தனியாக இடம் பிடித்து அரங்கம் அமைத்திருந்தது பென்ஸ். இடத்துக்கு வாடகையாக அது செலவழித்த தொகை மட்டும் 3 கோடி ரூபாய். இது தவிர, சின்னச் சின்ன நிறுவனங்கள்கூட 30 லட்சம் ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெற்றன. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது ஸ்டாலின் தரையை வெள்ளையாக அலங்கரித்திருந்தது. தரையைச் சுத்தப்படுத்துவதற்கும், நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்களைத் துடைப்பதற்கும், ஜெர்மனியில் இருந்தே பெண்களை அழைத்து வந்திருந்தது ஃபோக்ஸ்வாகன். ஃபெராரி, போர்ஷே கார்களை மக்கள் நெருங்காமல் பாதுகாக்க, அந்தந்த ஸ்டால்களுக்கென்று தனித் தனியாக பாடிகார்டுகளும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தார்கள்.

உச்சபட்ச விழா!

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த ஆட்டோ எக்ஸ்போவில் சில குறைகளும் உண்டு. எக்ஸ்போவின் முதல் இரண்டு நாட்களுக்கு மீடியாக்களுக்கும், விஐபிகளுக்கும் மட்டுமே அனுமதி. ஆனால், விஐபி டிக்கெட்டுகளில் பலரும் படையெடுக்க... சில நூறு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய நாளில் 60 ஆயிரம் குவிந்தனர்! மாருதி, ஆடி, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்கள் கொஞ்ச நேரத்துக்கு அரங்கத்தையே மூடி வைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டன. மீடியாவுக்கான கார் அறிமுக விழாக்கள் சில நடைபெறவே இல்லை.

இதனால், அடுத்த ஆட்டோ எக்ஸ்போவை குரேகாவுன் அல்லது நொய்டாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது ஆட்டோ எக்ஸ்போவை நடத்தும் SIAM, CII, மற்றும் ACMA அமைப்புகள். அதேபோல், ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் கடுங்குளிர் மிரட்டுவதால், 2014 ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்குத் தள்ளிப்போக இருக்கிறது.

ஸ்பெஷல் கவரேஜ்: சார்லஸ்

படங்கள்: கே.கார்த்திகேயன்