டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

பிஎம்டபிள்யூ வழங்கும் i3

பிஎம்டபிள்யூ வழங்கும் i3

 ##~##

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடுத்த பிராண்ட் ரெடி! மினி, ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டுகளை அடுத்து ஐ பிராண்டை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ. இந்த ஐ பிராண்ட் கார்கள் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களாக இருக்கும். 

2011-ம் ஆண்டு நடந்த 'ஃப்ராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ’வில் முதல் முறையாக இந்த ஐ பிராண்ட் கான்செப்ட் கார்களைக் காட்சிக்கு வைத்தது பிஎம்டபிள்யூ! ஐ3 என்னும் சிறிய ஹேட்ச்பேக் காரையும், ஐ8 என்னும் ஹைபிரிட் மிட் சைஸ் காரையும் காட்சிக்கு வைத்திருந்தது. இப்போது இந்த இரண்டு கார்களும் ரோடு டெஸ்ட்டுக்குத் தயாராகிவிட்டன என்பதுதான் எலெக்ட்ரிக் கார் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போக்களில் கான்செப்ட் காராக இல்லாமல், ரியல் காராகக் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் இந்த கார்கள், 2014 முதல் விற்பனைக்கு வர இருக்கின்றன.

பிஎம்டபிள்யூ வழங்கும் i3

ஐ3 காரின் டிசைனில் ஏராளமான புதுமையைப் புகுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ. 'கிட்னி கிரில்’ என அழைக்கப்படும் இந்த காரின் க்ரில், ஆட்டோமொபைல் ரசிகர்களை அதிகம் கவரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த கார்களில் கிரில் நீல வண்ணத்தில் மின்னும் என்று அறிவித்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இரண்டு கதவுகள் கொண்ட காராக ஐ3 இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்போது இது நான்கு கதவுகள் கொண்ட காராகவே இருக்கும்.

பிஎம்டபிள்யூ வழங்கும் i3

இந்த காரில் முன் பக்க இருக்கைகளைப் பிரிக்கும் 'சென்டர் டனல்’ இல்லை. இதனால் காருக்குள் அதிக இட வசதி இருப்பதை உணர முடிகிறது. அதேபோல் நடுவில் சென்டர் டனல் இல்லை என்பதால், ஒரே பக்க கதவு வழியாகவே இரண்டு பேரும் வெளியே வர முடியும்.

எலெக்ட்ரிக் கார் என்பதால், பேட்டரியின் எடையே அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தால் எடை குறைவான கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் சேஷியால் காரை வடிவமைத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. ஐ3 கார், சிறிய கார் போன்று இருந்தாலும், இது கிட்டத்தட்ட மினி கூப்பர் சைஸ் கார். அதனால், காருக்குள் இடவசதியும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் டிக்கியின் கொள்ளளவு 200 லிட்டர் என்பதால், ஒரு சிறு பயணத்துக்குத் தேவையான பொருட்களையும் வைக்க முடியுமாம்.

ஐ8 காரில் எலெக்ட்ரிக் மோட்டாரோடு பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினையும் சேர்த்து ஹைபிரிட் காராக வெளியிட இருக்கிறது பிஎம்டபிள்யூ. கார்பன் ஃபைபர், அலுமினியம் சேஷி என காரின் எடையைக் குறைக்க ஹைடெக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த கார்களின் விலை ரொம்பவே அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!