டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

பிங்க் கேங் ஸ்கூட்டி கிளப்

பிங்க் கேங் ஸ்கூட்டி கிளப்

மோ.கிஷோர்குமார்  >>எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

 ##~##

'மஞ்சள் திரவம் கசிந்து கொண்டிருந்தது வானம்; பச்சைப் போர்வை போர்த்தியிருந்தது புல்வெளி’ என அன்றைய தினத்துக்கு மட்டும் கவிப்பேரரசு வைரமுத்து போல் இன்ட்ரோ கொடுக்க முடியாது. காரணம், அன்றைய தினம் பிங்க் டே! சண்டே தெரியும்; மண்டே தெரியும்; அதென்ன பிங்க் டே? என ஆச்சரியத்துடன் கேட்பவர்களுக்கு, மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் டாப் அடித்த கல்லூரிப் பெண்கள் விளக்கம் தருகிறார்கள்.  

''பொதுவா, பொண்ணுங்களோட ஃபேவரைட் கலர் பிங்க்தான். டிரஸ், பேக், ஹேர்பேண்ட், வளையல், பொட்டு, கிளிப்ன்னு எது வாங்குனாலும் பிங்க் கலருக்கு முன்னுரிமை கொடுப்பாங்க. இந்த கலரை 'கேர்ளி கலர்’னு (Girly Colour) சொல்லுவாங்க. அதே மாதிரி, வண்டின்னு வரும்போதும் பெரும்பாலான பொண்ணுங்களோட சாய்ஸ் இந்த பிங்க் கலராத்தான் இருக்கும். இப்படி பிங்க் கலர் ஸ்கூட்டியா வாங்குன காலேஜ் பொண்ணுங்க ஒண்ணு சேர்ந்தோம். அதுதான் இந்த பிங்க் கேங். என்னைக்காவது மீட் பண்ணுனா அது பிங்க் டே!'' என தன் குழுவுக்கு ஹெவி இன்ட்ரோ கொடுக்கிறார் பி.மு.க (பிங்க் முன்னேற்ற கழகம்) தலைவி மீனு ப்ரியா!

பிங்க் கேங் ஸ்கூட்டி கிளப்

''பிங்க் கலர் ஸ்கூட்டி வெச்சிருக்கிறவங்க எப்படி ஒண்ணு சேர்ந்தீங்க. எல்லாரும் ஒரே கல்லூரியா?'' என்ற நம் கேள்விக்கு, கழகத்தின் பொருளாளர் (அவங்கதான் காசு இல்லைன்னா பெட்ரோல் போடுவாங்களாம்!) ஷீலா பதிலளித்தார். ''ஒரே காலேஜ் கிடையாது. சீனியர், ஜூனியர் எல்லாம் கலந்த கேங் இது! சீனியர் பொண்ணுங்க எல்லாம் யாதவா வுமன்ஸ் காலேஜ்! ஜூனியர்ஸ் எல்லாம் லேடி டோக் காலேஜ்! ஆனா, ரெண்டு பெரும் ஒரே ஏரியாவுல இருந்துதான் வரோம். எங்க ரெண்டு காலேஜும் பக்கத்துக்கு பக்கத்துலதான் இருக்கு. ஒரு தடவை என்னை கிராஸ் பண்ணி நாலஞ்சு பிங்க் ஸ்கூட்டி பறந்துச்சு. 'அட! என்னடா நம்மள மாதிரியே ஒரு பிங்க் கேங்கா’ன்னு ஆச்சர்யப்பட்டேன். பிறகு, மதுரை அமெரிக்கன் காலேஜுல நடந்த கல்ச்சுரல் ஃபெஸ்டிவலுக்கு அந்த குரூப் வந்தாங்க. அப்போதான் எங்களுக்குள்ள பழக்கம் ஏற்பட்டு ஃப்ரெண்ட் ஆனோம்!'' என ஷீலா முடிக்கவும், தொடங்கினார் கவிதா.

பிங்க் கேங் ஸ்கூட்டி கிளப்

''என்னோட அப்பா மோட்டார் விகடன் படிப்பாரு. ஒவ்வொரு புக்கும் படிக்கும்போது என்னோட அங்கிளுக்கு போன் பண்ணி, 'இந்த மாசம் ஜாவா பைக் கிளப், அப்பாச்சி பைக் கிளப்’னு பேசிப்பாங்க. அப்பதான் கேட்டேன்; பைக் கிளப்னா என்னன்னு! எங்கப்பா வெவரம் சொன்னப்போ, 'அதென்ன பசங்க மட்டும்தான் பைக் கிளப் வச்சுக்கணுமா? பொண்ணுங்க ஸ்கூட்டர் கிளப் வெச்சுக்கக் கூடாதா’ன்னு அப்பாகிட்ட சண்டை போட்டுட்டு, சல்லுன்னு நாங்க வழக்கமா டாப் அடிக்கிற இடத்துக்கு கிளம்பினேன். ஸ்கூட்டி கிளப் ஐடியா பத்தி பொண்ணுங்ககிட்ட சொல்ல, சரசரனு மீனு, அபி, யாஸ்மின், ஜெஸிமா, அம்மு, ஷீலா, நிலோபர், வசந்தினு நைன் ஸ்டார் கேங் ஃபார்ம் ஆயிடுச்சு!'' என மூச்சு விடாமல் ஸ்கூட்டி கிளப் ஆரம்பித்த கதையைச் சொல்லி முடித்தார் கவிதா.

பிங்க் கேங் ஸ்கூட்டி கிளப்

'லீவு நாட்கள்ல ஸ்கூட்டியும் ஹெல்மெட்டுமா கிளம்பிடுவோம். ஆரம்பத்தில நானே, 'ஏன்டி இவ்வளவு அழகா மேக்-அப் பண்ணிட்டு, ஹேர் ஸ்டைல் பண்ணிட்டுப் போறோமே... இந்த ஹெல்மெட் எல்லாத்தையும் மறைச்சுடுதே. அவசியம் இது வேணுமா’ன்னு.. ஆனா அதுக்கு மட்டும் ஜெஸிமா அனுமதிக்கவே இல்ல. அவளோட பக்கத்துக்கு வீட்டு அங்கிள், ஒரு தடவை ஹைவேஸ் ரோட்டுல ஆக்ஸிடென்டாகி விழுந்துட்டாராம். ஹெல்மெட் போட்டு இருந்ததுனாலதான் அவரைக் காப்பாத்த முடிஞ்சதுன்னு அந்த ஆன்ட்டி சொன்னது அவள ரொம்பவே பாதிச்சிடுச்சு. அதனால, ஜெஸிமா பேச்சை உதாசீனப்படுத்துறது இல்லை; ஹெல்மெட் இல்லாமப் போறதும் இல்லை!'' என்றார் அம்மு.

''ஸ்கூட்டி வாங்குறதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?'' என்று கேட்டதும் பதில் சொன்னார் ஜெஸிமா. ''எங்களை மாதிரி பொண்ணுங்களுக்கு என்னல்லாம் பிடிக்கும், எதெல்லாம் தேவைன்னு, ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து ஸ்கூட்டிய உருவாக்குனது மாதிரி தோணும். நெறய்ய கலர் சாய்ஸ், ஸ்டோரேஜ் பாக்ஸ், ஹேண்ட் பேக் ஹூக், செல் சார்ஜர், சைடு ஸ்டாண்ட் அலாரம்... இப்படிச் சொல்லிகிட்டே போகலாம். எங்ககிட்ட யாராவது எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்னு கேட்டா... எங்க எல்லார்கிட்ட இருந்தும் ஸ்கூட்டின்னுதான் பதில் வரும்'' என்று விவரமாகப் பேசுகிறார் ஜெஸிமா.

''இப்போ பெட்ரோல் விலை ரொம்பவே கூடிப் போச்சு. நாங்க ஸ்கூட்டி வாங்குனப்போ வெறும் அம்பது ரூபாய் இருந்தது. இப்போ 70 ரூபாயில வந்து நிக்குது. அதனால, பெட்ரோல சேமிக்கிறது ரொம்பவே முக்கியம். இப்போ எல்லாம், பக்கத்துல எங்கயாச்சு கடைக்குப் போகணும்னா நடராஜா சர்வீஸ்தான்! அப்படி குட்டி குட்டியா பெட்ரோல் சேமிச்சு, வாரக் கடைசில, இன்னும் கொஞ்சம் பெட்ரோல் போட்டுட்டு கேங்கா கிளம்பிடுவோம்!' என்றார் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட அபி.

''எங்க எல்லாத்துக்கும் இன்னொரு ஆசைகூட இருக்கு. ஆனா, மதுரையில இருக்கிறதுனால, அது நிறைவேறாமலே கெடக்கு. வேற ஒண்ணும் இல்ல... எல்லாரும் வரிசையா, பீச் மணல்ல அடிக்கிற உப்புக் காத்துல, அப்படியே சாரை சாரையா, கடலோரம் ஸ்கூட்டிய ஒட்டிக்கிட்டே போகணும்னு ரொம்ப நாளா ஆசை. ஹூம்... பாக்கலாம் நடக்குதான்னு...!'' என்று ஏங்குகிறார்கள் இந்த மதுரைப் பறவைகள்!