டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

புத்தாண்டு சபதமும் விபத்தில்லாப் பயணமும்!

புத்தாண்டு சபதமும் விபத்தில்லாப் பயணமும்!

மோ.வி.டீம்

 ##~##

வ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, பெட்ரோல் விலையைப் போல ஏறிக்கொண்டே போகிறது. அதை அறவே ஒழிக்கும் பொருட்டு, 'மோட்டார் விகடன்’ தொடர்ந்து விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் செய்து வருகிறது. மோட்டார் விகடனின் ஆறாம் ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் விபத்தில்லாப் பயணம் குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரம் நடத்தினோம். இதில், திரளாக கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டு, 'ரத்தம் கொடுங்கள்! சாலையில் ரத்தம் சிந்தாதீர்! கிக் ஸ்டார்ட் செய்யலாம்! 'கிக்’ ஸ்டார்ட் செய்யாதீங்க!’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திப் பிடிக்க... அவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை ஈர்த்தன. அப்போது, பாதுகாப்பான, சிக்கனமான பயணத்துக்கு விதிமுறைகளும், வழிமுறைகளும் அடங்கிய பயனுள்ள கையேடுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், அந்தந்த நகரங்களின் காவல்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கைகோர்க்க... புத்தாண்டு களை கட்டியது!

புத்தாண்டு சபதமும் விபத்தில்லாப் பயணமும்!

சென்னை

'புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதால், சென்னை நகரம் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஸ்பென்ஸர் சிக்னல், எழிலகம் சிக்னல், நந்தனம் சிக்னல், அண்ணா நகர் ஆர்ச், பல்லாவரம் ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் சேஷசாயி, துணை ஆணையர்கள் அசோக்குமார், பாஸ்கரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, உதவி ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

'கைபேசி முக்கியமா, கை முக்கியமா? - வாகனம் ஓட்டும்போது போன் பேசாதீர்!’ என்ற வாசகத்தைப் படித்த பைக் ஓட்டி ஒருவர், ''புது வருஷத்துல என்ன சபதம் எடுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டே பைக் ஓட்டிட்டு வந்தேன். சாலைப் பாதுகாப்புதான் எடுக்க வேண்டிய முதல் சபதம்னு இந்த வாசகத்தைப் பார்த்ததும் முடிவெடுத்தேன். இனிமே, பைக் ஓட்டுறப்ப செல்போன் பேசமாட்டேன். இது என் புத்தாண்டு சபதம்!'' என உற்சாகமாகக் கூறிச் சென்றது இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்!

கோவை

சிக்னல் காத்திருப்பு எரிச்சலான விஷயம்தான். ஆனால், கடந்த 31-ம் தேதி கோவை மாநகர மக்களுக்கு சிக்னல் காத்திருப்பு சலிப்பைத் தரவில்லை. மாறாக, ஆரோக்கியப் புன்னகை பூத்தார்கள். காரணம், மோட்டார் விகடன்! அவிநாசி சாலையின் அண்ணா சிலை சிக்னல் மற்றும் காந்திபுரம் க்ராஸ்கட் சாலை சிக்னல் ஆகியவை கோவை சிட்டியின் பரபரப்பான போக்குவரத்து சிக்னல்கள். இவற்றில் புத்தாண்டு பிறப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்னதாக மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பொது மக்களிடம் ஏக வரவேற்பு.  

சிக்னலில் காத்திருந்தவர்களில் 'சாலைப் பாதுகாப்பு மற்றும் மைலேஜ் டிப்ஸ்’ கையேட்டை வாங்கிய சிலர், வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஆன் தி ஸ்பாட்டில் அதைப் படித்தது சுவாரஸ்யம். கோவை பி.என்.புதூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் கணேஷ்குமார், ''காஸ்ட்லியான பொருட்களில் பெட்ரோலும் ஒண்ணு. அதை எப்படி மிச்சம் பிடிக்கலாம்னு பார்த்துப் பார்த்து டிப்ஸ் கொடுத்திருக்கிறதுதான் மோட்டார் விகடனோட அக்கறை. வெல்டன் சார்...'' என்றபடி கைகுலுக்கி நகர்ந்தார்.

புத்தாண்டு சபதமும் விபத்தில்லாப் பயணமும்!

திருச்சி

திருச்சி தலைமை தபால் நிலைய சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியை, திருச்சி மாநகரக் காவல் துறை உதவி ஆணையர் காமராஜ் தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் 'மோட்டார் விகடன்’ சின்னம் அச்சிட்ட பனியனுடன் நின்றதைக் கண்ட சிலர், 'ஏதாவது போராட்டமா? என்று விசாரித்தனர். 'ஆமாம், சாலை விபத்துக்கு எதிரான போராட்டம்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தனர் நமது தன்னார்வலர்கள். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டவர்கள்,  'நல்ல விஷயம் பண்ணுங்க’ என்றுவிட்டு பறந்தனர். துண்டுப் பிரசுரங்களில் மைலேஜ் டிப்ஸ்களைப் படித்த சிலர், 'பலே பலே’ என்று தலையாட்டிவிட்டு இன்ஜினை ஆஃப் செய்து, அப்போதே எரிபொருள் சேமிப்பில் தங்களை இணைத்துக் கொண்டது ஆச்சரியம். ''விகடன் நிறுவனத்தைப் போல, ஏனைய நிறுவனங்களும் இதுபோன்ற மக்கள் விழிப்பு உணர்வு சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால், பெருமளவு விபத்துகளைக் குறைத்து எரிபொருளையும் சேமிக்க முடியும்'' என்று முத்தாய்ப்பாகக் கூறினார் உதவி ஆணையர் காமராஜ்!

மதுரை

அன்றைக்கு மதுரையில் மழை கொட்டிக் கொண்டு இருக்க... கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வந்திருந்த மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் காத்திருந்தார். சரியாக மூன்று மணிக்கு மழை ஓய... கமிஷனர் துவங்கி வைக்கவும் சுறுசுறுப்பாக களமிறங்கினார்கள் சௌராஷ்டிரா மகளிர் கல்லூரி தன்னார்வத் தொண்டர்கள். இவர்களோடு இணைந்து, போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர்கள் மகுடபதி, எல்லப்பராஜ் மற்றும் அதிகாரிகளும், காவலர்களும் வாகன ஓட்டிகளுக்கு ஓடி ஓடி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள். நீண்ட நேரம் துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டே ஹெல்மெட் அணியாதவர்களைப் பார்த்து புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, 'புத்தாண்டில் இருந்தாவது ஹெல்மெட் போடுங்க!' என்று உரிமையோடு கண்டித்தார் கமிஷனர்.

நெல்லை

நெல்லை ஜங்ஷன் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார். தன்னார்வலர்களோடு சேர்ந்து உதவி கமிஷனர்கள் தர்மலிங்கம், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பெரும் போலீஸ் படையே களத்தில் இறங்கி, விழிப்பு உணர்வுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

மனைவியுடன் பைக்கில் வந்த ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் வந்ததைக் கவனித்த துணை கமிஷனர் ஜெயபாலன், ''உங்க பாதுகாப்பில் அக்கறை இருப்பதால்தான், கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு அறிவுறுத்துறோம். அதையும் மீறிச் சென்றால், உங்களையே நீங்க ஏமாத்திக்கிறீங்க'' என அட்வைஸ் செய்தார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண்மணி, ''நல்லாச் சொல்லுங்க சார்.. நான் சொல்லிப் பார்த்துட்டேன். இப்பவே போய் அவருக்கு ஹெல்மெட் வாங்கிடுறேன்'' என கறாராகச் சொன்னார். துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்ற 'மைலேஜ் டிப்ஸ்’ மிகவும் பயன்படும்படி இருப்பதாக பெரும்பாலானோர் கூறியதைக் கேட்ட ஜெயபாலன், ''அப்போ, இது எங்களுக்கும் பயன்படும் போலிருக்கே!'' என்றவர் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று துண்டுப் பிரசுரங்களைக் கொஞ்சம் வாங்கிச் சென்றார்!