டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

இது நம்ம ஊரு காரு!

இது நம்ம ஊரு காரு!

இது நம்ம ஊரு காரு!

ட்டோ எக்ஸ்போவில் ஒவ்வொரு முறையும் அசத்தல் கார்களைக் காட்டி அதிர வைக்கும் திலீப் சாப்ரியா, இந்த முறை சூப்பர் காரை அறிமுகப்படுத்தினார். திலீப் சாப்ரியாவின் கை வண்ணத்தில் உயிர் பெற்றிருக்கும் புதிய காரின் பெயர் 'அவான்தி.’ ஃபெராரி, லம்போகினி என இரண்டு சூப்பர் கார்களையும் கலந்துகட்டி டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த காரை, ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்து வைத்தார் அமிதாப் பச்சன்.

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்று அவான்தி காரைச் சொல்லும் தீலீப் சாப்ரியா, இதன் விலையை 24 லட்சம் ரூபாய் (டெல்லி, எக்ஸ்-ஷோ ரூம்) என்று சொல்லி சூப்பர் கார் பிரியர்களைத் தன் பக்கம் இழுத்தார். ஸ்போர்ட்ஸ் கார்களுக்கே உரிய ஸ்டைலில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவு. 155 மிமீ மட்டுமே கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த காரை, நம்மூர் ஸ்பீடு பிரேக்கர்களிடம் இருந்து காப்பாற்ற பெரும்பாடு பட வேண்டும். காரின் எடை 1562 கிலோ!

இது நம்ம ஊரு காரு!

அவான்தி காருக்குள் ஃபோர்டு 'ஈக்கோபூஸ்ட்’ 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 240 bhp சக்தியை வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பிடித்துள்ளது. 'இன்னும் சில மாதங்களில் இதில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்படும்’ என்கிறார் திலீப் சாப்ரியா.

இது 0-100 கி.மீ வேகத்தை 7 விநாடிகளில் கடக்கும் என்றும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கி.மீ என்றும் சொல்கிறது டிசி டிசைன் நிறுவனம். காரை முழுவதுமாக டெஸ்ட் டிரைவ் செய்த பிறகே இதன் உண்மையான வேக விவரங்களை வெளியிட முடியும்.

ஆண்டுக்கு 300 கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கும் டிசி டிசைன் நிறுவனம், பிப்ரவரி மாதம் முதல் புக்கிங்கைத் துவங்குகிறது. ஆனால், காரின் டெலிவரி அடுத்த ஆண்டுதான் ஆரம்பமாகுமாம். இதற்கிடையே சென்னை எழும்பூரில் புதிதாக ஷோ ரூமைத் திறக்க இருக்கிறது டிசி டிசைன் நிறுவனம். இனி சென்னையில் டிசி கார்களை வாங்கலாம்!