டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஃபோர்டின் உலக கார்!

ஃபோர்டின் உலக கார்!

ஃபோர்டின் உலக கார்!

ஃபோர்டு நிறுவனம், இந்தியாவை முக்கிய ஆடுகளமாக முன்னிறுத்துகிறது என்பதற்கு 'ஈக்கோஸ்போர்ட்’ அறிமுகமே சாட்சி! எப்போதுமே டெட்ராய்ட் ஆட்டோ ஷோ அல்லது ஜெனீவா ஆட்டோ ஷோவில் தனது புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு நிறுவனம், இந்த முறை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உலகத்துக்கான புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது.

 ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஆலன் முல்லாலி, ஈக்கோஸ்போர்ட் காரை அறிமுகப்படுத்துவதற்காகவே டெல்லி வந்திருந்தார். ''2015-ம் ஆண்டுக்குள் ஃபோர்டு அறிமுகப்படுத்தும் எட்டு கார்களில், ஃபியஸ்டா காரை அடுத்து இரண்டாவது கார் ஈக்கோஸ்போர்ட். புதிய கார்களுக்காக சென்னைத் தொழிற்சாலையில் 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறோம்'' என்றார் ஆலன் முல்லாலி.

ஃபோர்டின் உலக கார்!

புதிய ஃபியஸ்டா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கிறது ஈக்கோஸ்போர்ட். ஆஸ்திரேலியாவில் தற்போது விறபனை செய்யப்பட்டு வரும் 'டெரிட்டரி’ காரைப் போலவே இருக்கிறது ஈக்கோஸ்போர்ட். முன் பக்கம் நான்முக கிரில் வடிவமைப்பு, ஈக்கோஸ்போர்ட்டை போட்டி கார்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. ஹெட் லைட் மிகவும் சிறிதாக, தட்டையாக இருந்தாலும் பவர்ஃபுல் வெளிச்சத்தை உமிழும் என்கிறது ஃபோர்டு. முன் பக்கமும் சரி, பின்பக்கமும் சரி ஒரு முழுமையான எஸ்யூவி காரைப் போன்று டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்.

1 லிட்டர் 'ஈக்கோபூஸ்ட்’ பெட்ரோல் இன்ஜினை முதன்முறையாக இந்த கார் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. 1 லிட்டர் இன்ஜின் என்றாலும், இது 1.6 லிட்டர் இன்ஜினுக்கு இணையாக, 118 bhp சக்தியை வெளிப்படுத்தும். 1.2 லிட்டர் பெட்ரோல், அதனைத் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. ஈக்கோஸ்போர்ட்டின் நீளம் 4 மீட்டருக்கும் அதிகம் என்பதால், இது சின்ன கார் வரையறைக்குள் வராது. இதில் வெறும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை மட்டுமே அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு.

ஈக்கோஸ்போர்ட் காரை ஃபியஸ்டா போல அல்லாமல், 7-9 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஃபோர்டு. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதவாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!