டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

சென்னை to உடுமலைப்பேட்டை

கா.பாலமுருகன்  எம்.விஜயகுமார்

 ##~##

பெட்ரோல் விலை விளைவால், மக்கள் டீசலுக்கு மாறுவது ஆச்சரியம் இல்லை. ஆனால், பெட்ரோல் சன்னி அறிமுகமான ஆறே மாதத்தில், டீசல் சன்னியை விற்பனைக்குக் கொண்டு வந்து விட்டது நிஸான். 'பெரிய கார்’ என்பதைத் தாண்டி வசதியான கார் என்பதால் பெட்ரோல் மாடல் சன்னி, விற்பனையில் ஏறுமுகத்தில் இருக்கிறது. இப்போது டீசல் இன்ஜினும் வந்துவிட்டதால், நிஸானுடைய களம் கூடியிருக்கிறது.

மைக்ராவில் இருக்கும் அதே 1.5 டீசல் இன்ஜினில், சற்றே சக்தியை அதிகரித்து சன்னியில் பொருத்தி இருக்கிறது நிஸான். இவ்வளவு பெரிய காருக்கு இந்த இன்ஜின் போதுமா என்ற கேள்வியுடன் சன்னியுடன் கிரேட் எஸ்கேப் செல்லத் தயாரானோம். 

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகிக் கொண்டு இருந்தபோது, சென்னையில் இருந்து கோவை வரை நால்வழிச் சாலையிலும், அங்கிருந்து உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி நீர்த் தேக்கம் வரை இருவழிச் சாலையிலும் பயணித்து, டீசல் சன்னியில் சாதக பாதகங்களை அலசினோம். ஏற்கெனவே, பெட்ரோல் இன்ஜின் காரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஓட்டி இருந்ததால், அந்த அனுபவம் டீசல் இன்ஜினின் வேறுபாட்டை உணர்ந்து கொள்ள மிக வசதியாக இருந்தது. சென்னையில் இருந்து அதிகாலையில் பெங்களூரு நால் வழிச் சாலையைப் பிடித்தோம். கிருஷ்ணகிரி, சேலம், வழியாக கோவையை அடைந்து, பின்பு சூலூர், பல்லடம் வழியாக உடுமலைப்பேட்டையைச் சென்றடைவது பயணத் திட்டம்.

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

காரின் 'ஸ்டார்ட்’ பட்டனை அழுத்தியதும், சின்ன அதிர்வுடன் உயிர் பெறுகிறது சன்னி. ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்ததும் உருவாகும் உறுமல் சத்தம், டீசல் இன்ஜின் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. பொதுவாக, டீசல் கார்களில் முதல் கியரில் ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டிய அவசியமிருக்காது. கிளட்ச்சை ரிலீஸ் செய்தால், கார் தானாகவே நகரும். ஆனால், சன்னியில் பவரைச் செலுத்தினால்தான் நகர்கிறது. இரண்டாவது கியருக்கும் இதே நிலைதான். ஆனால், மூன்றாவது கியருக்கும் நான்காவது கியருக்கும் நீங்கள் ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டிய அவசியமில்லை! ஆம், நான்காவது கியரில் ஆக்ஸிலேரேட்டரில் கால் படாத நிலையிலேயே 40 கி.மீ வேகத்தில் பறக்கிறது சன்னி. பிரேக்கில் கால் வைத்தாலும் திமிறிக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. அந்தச் சமயத்தில் காரை நிறுத்த வேண்டும் என்றால், முழுமையாக கிளட்ச்சை அழுத்திக் கொண்டு பிரேக் செய்தால்தான் நிற்கிறது.

ஆக்ஸிலரேட்டரை, தேவைக்கு அதிகமாக லேசாக மிதித்தாலே, இன்ஜின் சத்தம் காருக்குள் அமர்ந்திருக்கும் நமக்கு மிகத் தெளிவாகக் கேட்கிறது. ஆனால், டாப் கியருக்கு மாறியதும் ஸ்மூத்தாகப் பயணிக்க ஆரம்பிக்கிறது.

நகருக்குள் ஓட்டும்போதும் சரி; நீண்ட தூரப் பயணங்களின் போதும் சரி... கையாள்வதற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. 120 கி.மீ வேகம் வரை குரூஸ் செய்து ஓட்ட பிரேக், கன்ட்ரோல், ஸ்டீயரிங் என எல்லாவிதத்திலும் பாதுகாப்பானதாக இருக்கிறது சன்னி. அதற்கும் மேல் பறக்க வேண்டும் என்றால்... தாராளமாகச் செல்லலாம். ஆனால், இன்ஜினில் இருந்து வெளியாகும் சத்தம் நம்மைப் பயமுறுத்துகிறது. 150 கி.மீ வேகத்தைக் கடக்கும்போது, கார் லேசாக அலைபாய்கிறது. கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் செல்லும் நேர் ரோட்டில் மணிக்கு 160 கி.மீ வேகத்தை எட்டிப் பிடித்தோம்.

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

குடும்பத்துடன் நீண்ட தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த காரில், பின்னிருக்கைகளில் தாராள இடவசதி இருப்பது நாம் அறிந்ததே! ஆனால், இதில் ஒரே ஒரு சின்னக் குறை என்னவென்றால், டிரைவர் கைகளை ஓய்வாக வைத்துக் கொள்ள 'ஆர்ம் ரெஸ்ட்’ இல்லை. அந்த இடத்தை பின்னிருக்கைகளுக்கான 'ஃபேன் ப்ளோயர்’ பிடித்துக் கொண்டு விட்டது.

பெங்களூரு ஹைவேயை மேலும் அகலமாக்கும் பணி நடந்து வருவதால், சற்று நிதானமான வேகத்தில்தான் பயணிக்க முடிந்தது. கிருஷ்ணகிரி கடந்ததும் சேலம் நெடுஞ்சாலையில்தான் காரின் பர்ஃபாமென்ஸை முழுமையாகச் சோதிக்க முடிந்தது. நெடுஞ்சாலையில் டாப் கியரிலேயே சுலபமாக ஓவர்டேக் செய்ய முடிகிறது. கியரைக் குறைத்து பவரைச் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது நிஸான் இன்ஜின் பலம். ஸ்டீயரிங், அதிகபட்ச வேகத்திலும் சிறந்த நம்பிக்கையை அளிக்கிறது. ஏபிஎஸ் பிரேக்ஸ் என்பதால், 120 கி.மீ வேகம் வரை பிரேக்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. பிரேக்கில் கால் வைத்ததும் நம் கட்டுக்குள் வந்து விடுகிறது கார்.

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

கோவையை நெருங்கியபோது, மாலை நெருங்கிவிட்டது. அதனால், கோவையில் தங்கிவிட்டு மறுநாள்

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

உடுமலை செல்லத் திட்டமிட்டோம். அடுத்தநாள் அதிகாலை கோவையில் இருந்து சூலூர், பல்லடம் வழியாகப் பயணித்தோம். கோவையில் இருந்து பல்லடம் வரை சாலை அகலமாக இருந்தாலும், பல்லடத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலை கிராமச் சாலை போலத்தான் இருக்கிறது. ஆனாலும், குண்டு குழிகள் இல்லாமல் சீராக சாலை இருந்தது. பல்லடம் தாண்டியதும் கண்ணுக்கெட்டியவரை காற்றாலைகளின் சாம்ராஜ்யம் தான்.

உடுமலை அடைந்ததும் நாம் முதலில் சென்றது, திருமூர்த்தி நீர்த் தேக்கத்துக்கு! மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மடியில் இருக்கும் உடுமலையில் இருந்து 22 கி.மீ தொலைவில் மலையடிவாரத்தில் உள்ளது திருமூர்த்தி நீர்த் தேக்கம். இது பாசன வசதிக்காக நீரைத் தேக்கி வைப்பதற்காகவே கட்டப்பட்டது. இந்த அணைக்கு மலை மீதுள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து மலையைக் குடைந்து சுமார் 53 கி.மீ தூரம் கொண்ட கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது. 'காண்டூர் கால்வாய்’ என அழைக்கப்படும் இந்த கால்வாய்தான் இந்த நீர்த் தேக்கத்தின் உயிர்நாடி!

இந்த நீர்த் தேக்கம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் சுமார் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. இங்குள்ள திருமூர்த்தி மலையும், ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலும் மிகவும் புகழ் பெற்றது. மலையடிவாரத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ தூரம் மலை மீது ஏறினால், பஞ்சலிங்க அருவி இருக்கிறது.

மழைக் காலங்களில் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றோரத்தில் இருக்கும் கோவிலுக்குள் நீர் புகுவது அடிக்கடி நிகழும். நீர்த் தேக்கத்தில் படகுத் துறை, கோவில், அருவி என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் ஏராளமாக இருப்பதால், எந்நேரமும் கூட்டத்துக்குக் குறைவில்லை.

அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகே நிஸான் சன்னி நின்றிருந்ததைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தனர் இரு இளைஞர்கள். நிஸான் சன்னி அந்தப் பகுதியில் அவ்வளவாக இன்னும் இல்லை. எனவே, புதிய கார் என்பதால் பார்க்கக் கூடும் என நினைத்து காரை எடுக்கச் செல்கையில் நம்மிடம் வந்து, 'டெஸ்ட் டிரைவ் காரா, டீசல் இன்ஜினா, எவ்வளவு விலை, என்ன மைலேஜ்...’ என சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

'மோட்டார் விகடனில் இருந்து டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக வந்திருக்கிறோம்’ என்று கூறியதுதான் தாமதம், ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார்கள் அந்த மோட்டார் விகடன் வாசகர்கள்! உடுமலை அருகே கோலார்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், கட்டுமானப் பொருட்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வருபவர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நம்மாழ்வார், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் கான்ட்ராக்டர். மோட்டார் விகடன் படிப்பதன் மூலம் நண்பர்களானவர்கள் என்பது தெரிந்தபோது, மகிழ்ச்சி பல மடங்கானது. அவர்களிடம் விடைபெற்று, அங்கிருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் அமராவதி அணை நோக்கிக் கிளம்பினோம்.

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

அமராவதி அணை முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையை நம்பித்தான் இருக்கிறது. சின்னாறு என்று அழைக்கப்படும் நதிதான் இதன் முக்கியமான நீர் ஆதாரம். இந்த சின்னாறு நதியைக் கடந்துதான் மறையூர் வழியாக மூணாறு செல்ல வேண்டும். அமராவதி அணையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் அணையை ஒட்டி பூங்கா, முதலைப் பண்ணை, சின்ன மிருகக் காட்சி சாலை ஆகியவை உள்ளன. ஆனால், இங்கு அவ்வளவாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைக் காண முடியவில்லை. மற்றொரு முக்கிய அம்சமான 'சைனிக் பள்ளி’ என அழைக்கப்படும் ராணுவப் பள்ளி இங்கு இருக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்தப் பள்ளி மிகவும் பிரபலம். தமிழகத்தில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனுக்கு அடுத்து இங்குதான் இந்தப் பள்ளி இருக்கிறது. இதில் அட்மிஷன் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே, இங்கு ஏராளமான தனியார் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.          

கிரேட் எஸ்கேப் - நிஸான் சன்னி டீசல்

அமராவதி அணையில் இருந்து கொழுமம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது, நமக்கு எதிரே வந்த சான்ட்ரோவில் இருந்து ஒருவர் கைகாட்டி காரை நிறுத்தினார். 'விளம்பரங்களில் மட்டுமே இந்த காரைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நேரில் பார்த்ததும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்றவரிடம் காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொன்னோம். சந்தோஷமாக சில கி.மீ ஓட்டிப் பார்த்தவர்,  'செடான் டீசல் கார் வாங்கும் திட்டத்தில் கடந்த மாதம் மாருதி எஸ் எக்ஸ்-4 காரைச் சென்று பார்த்தேன். எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. அப்போதுதான் நிஸான் சன்னியில் டீசல் கார் வரப் போகிறது என்று கேள்விப்பட்டேன். இப்போது ஓட்டியே பார்த்துவிட்டேன். நிச்சயம் இந்த கார்தான் வாங்கப் போகிறேன். எனக்குப் பிடித்திருக்கிறது'' என்றார். அவருடை பெயர் மணிவாசகம். உடுமலை அருகே பட்டு நூல் உற்பத்தி ஆலை வைத்திருக்கிறாராம்.

உடுமலை திரும்பி மோட்டார் விகடன் வாசகரான ராஜேந்திரனை டெஸ்ட் டிரைவுக்கு அழைத்தோம். அடுத்த அரைமணி நேரத்தில் தன் மாருதி ஸ்விஃப்ட் நியூ டீசல் காரை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஹார்டுவேர் பிசினஸ் செய்து வரும் ராஜேந்திரன், நிஸான் சன்னியை அங்கிருந்து திருமூர்த்தி நீர்த் தேக்கம் வரை பலவிதமாக ஓட்டிப் பார்த்துவிட்டு, ''காரின் உள்பக்கம் விசாலமான அறை போல இருக்கிறது. இவ்வளவு தாராளமான இட வசதி கொண்ட காரை நான் பார்த்ததே இல்லை. பர்ஃபாமென்ஸ், பிரேக், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் என அனைத்துமே பக்காவாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால், இது போன்ற காரில் ஏதாவது ஒரு குறை இருக்கும். இதில் எதையுமே குறை சொல்வது போல இல்லை. அதுதான் இந்த காரின் பலம் என்று நினைக்கிறேன்!'' என்று முடித்தார்.