டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ஹார்லி லேடி!

ஹார்லி லேடி!

இரா.வினோத்>>சு.குமரேசன்

 ##~##

ஜோம்ஸ் பாண்டில் ஆரம்பித்து அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர் வரை ஹாலிவுட் ஹீரோக்களின் ஆஸ்தான பைக் - ஹார்லி டேவிட்சன். நம் நாட்டில் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிய 'முதல் பெண்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஷீஜா மேத்யூ. 8.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கில் கம்பீரமாக ஷீஜா பறக்கும்போது... பெங்களூருவின் அத்தனை கண்களும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றன. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத் துறையில் பணிபுரியும் இவருக்கு, சிறுவயது முதலே வாகனங்கள் மீது அதீத ஈடுபாடு. பெங்களூரு புறநகரில் இருக்கும் அவரது வீட்டுக்குச் சென்றபோது, இன்முகத்தோடு வரவேற்றார் ஷீஜா. 

''என்னோட லவ்வபிள் ஹஸ்பண்ட் பேரு சஞ்சய் ஜோசப். சிவில் இன்ஜினீயர்னு அறிமுகப்படுத்துறதைவிட, பைக் ரேஸர்னு சொன்னா பெருமைப்படுவார். எனக்கு அவர் மேல காதல் வரக் காரணமே... எங்களுக்குள்ள இருந்த பைக் காதல்தான்!'' என வெட்கப்பட்டு சிரித்தார் ஷீஜா.

ஹார்லி லேடி!

''நாங்க லவ் பண்ணிட்டு இருந்த சமயத்தில, அவர்கிட்ட ஆர்.டி-350 யமஹா இருந்தது. 'எவ்ளோ நாள் கியர் இல்லாத பைக்கையே ஓட்டுவ... இன்னைக்கு இதை ஓட்டு’ன்னு சொல்லி, கியர், கிளட்ச் பத்தி டிப்ஸ் கொடுத்திட்டு... திடீர்னு பைக் சாவியைக் கொடுத்து ஒரு ரவுண்ட் போகச் சொல்லிட்டார். அந்தப் பொன்னான நாளை மறக்கவே முடியாது!'' என சிரித்த ஷீஜா, ஹார்லி டேவிட்சன் பைக் கதைக்குத் தாவினார்.

ஹார்லி லேடி!
ஹார்லி லேடி!

''ஹார்லி டேவிட்சன் பைக்கை முதன்முதலாக சின்ன வயசில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருக்கேன். அது மட்டுமில்லாமல், நான் அர்னால்டின் தீவிர ரசிகை. அவரோட எல்லா படங்களில் டமால் டூமால் துப்பாக்கியும், ஹார்லியும் கண்டிப்பாக இருக்கும். ஹார்லி டேவிட்சன் பைக் ரொம்ப கம்பீரமா, மேன்லியா, செம ஸ்ட்ராங்கா, ரிச் லுக்னு பார்க்கவே பத்திக்கிற மாதிரி இருக்கும். அப்போ இருந்தே ஹார்லின்னா எனக்கு உயிர். எப்படியாவது வாழ்க்கையில ஒரு தடவையாவது ஹார்லியை ஓட்டிப் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். 2010 செப்டம்பரில் ஹார்லி கம்பெனி, பெங்களூருவில் ஷோ ரூம் ஓப்பன் பண்ணாங்க. ரொம்ப ஆசையாக அங்க போய் ஹார்லியைத் தொட்டுப் பார்த்து... உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கிட்டேன். எப்படியாவது வாங்கியே தீரணும் முடிவெடுத்து, சேர்த்து வச்சிருந்த பணத்தோடு லோன் போட்டேன். ஒரு வழியாக 8.50 லட்ச ரூபாய் புரட்டி 2010 அக்டோபரில் 'ஹார்லி டேவிட்சன் 883 ஐரன்’ கறுப்பு பைக்கை புக் செய்தேன். இந்த மாடலில் மஞ்சளும், கறுப்பும் மட்டுமே இருக்குதாம். கறுப்பு என்னோட ஃபேவரைட் கலர். அதனால, அதையே ஓ.கே பண்ணிட்டேன்!'' என்றவர், கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

''ஹார்லி 883 சிசி, 250 கிலோ எடை, அதிக நீளம் என்பதால் ஓட்டவே த்ரில்லா இருக்கும். தினமும் ஆபீஸுக்கு இதுலதான் போவேன். ரோட்ல இருக்கிற எல்லாருமே ஹார்லியையே பார்ப்பாங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஹார்லியைப் பொறுத்த வரைக்கும் சிட்டிக்குள்ள ஓட்டுறதைவிட லாங் ட்ரைவ்தான் ரொம்ப நல்லா இருக்கும். சமீபத்தில் கூட பெங்களூரு புல்லட் கிளப் கூட சேர்ந்து ஊட்டிக்குப் போயிட்டு வந்தேன். 100 பைக்குகள் கலந்து கொண்ட இந்த ட்ரிப்பில், நான் மட்டுமே பெண். 'எப்படி ஊட்டியில 32 கொண்டை ஊசி வளைவுகளில் சமாளிக்கப் போறே’னு முதலில் எல்லாரும் பயந்தாங்க. ஆனா, ஹார்லியோட பக்கா கண்டிஷனால சூப்பரா போயிட்டு வந்தேன். அடுத்து, தனியா கோவா போக ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்!'' என்றார்.

''ஹார்லி லிட்டருக்கு 19 கி.மீ வரைக்கும் மைலேஜ் தருது. ரெண்டு வருஷம் வாரன்ட்டி இருக்கிறதால, ஆயில் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் ஷோ ரூமில் பார்த்துக் கொள்ளலாம். ஹார்லியைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் ஹெட் லைட் ஆன் ஆகியே இருக்கும். இது தெரியாம, ரோட்டுல போகும்போது கையைக் காட்டி லைட் எரியுதுன்னு சொல்வாங்க. இன்னொரு பிரச்னை என்னன்னா... ஒருத்தர் மட்டுமே உட்கார முடியும். அதனால, ரெண்டு பேர் உட்காருமளவுக்கு சீட்டை சரி செய்யப் போகிறேன்!'' என்ற ஷீஜா மேத்யூ, கார் ரேஸிலும் படு கில்லாடியாம்!

பெங்களூரு நந்தி ஹில்ஸில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கும் பெண்களுக்கான கார் ரேஸில், உயிரைப் பணயம் வைத்துப் பறந்து... கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் பரிசைத் தட்டி வந்திருக்கிறாராம்! ''என்னதான் காரில் பறந்தாலும், ஹார்லியில் ஹாயாகப் பறப்பதுபோல் வராது'' என்கிறார் ஷீஜா மேத்யூ!