டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

வருகிறது மஹிந்திரா XUV 700

வருகிறது மஹிந்திரா XUV 700

 ##~##
வருகிறது மஹிந்திரா XUV 700

வெரிட்டோ எலெக்ட்ரிக் காரை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு, 'ஸாங்யாங்’ மற்றும் 'எலெக்ட்ரிக் ரேவா’ கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது மஹிந்திரா. ரெனோவின் லோகனை ஒட்டுமொத்தமாக தன்னுடைய காராக மாற்றி, வெரிட்டோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. இப்போது இதில் 29 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டாரையும், லித்தியம் ஐயான் பேட்டரிகளையும் பொருத்தி, எலெக்ட்ரிக் காராகக் காட்சிக்கு வைத்தது மஹிந்திரா. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால், 100 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று சொல்லும் மஹிந்திரா, இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பதைச் சொல்லவில்லை!

 கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஸாங்யாங் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிவிட்ட மஹிந்திரா, ஸாங்யாங் கார்களையும் காட்சிக்கு வைத்திருந்தது. ஸாங்யாங் கார்களில் முதலில், விற்பனைக்கு வர இருக்கும் 'ரெக்ஸ்டன்’ கார்தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. முதலில் வெளிவந்த மெர்சிடீஸ் பென்ஸ் 'எம்’ கிளாஸ் காரைப் போலக் காட்சியளிக்கும் இந்த ரெக்ஸ்டன் காரின் டிசைனுக்கு, எந்தவித பொருத்தமும் இல்லாமல் இருக்கிறது இதன் ஹெட் லைட்ஸ். ஏழு பேர் உட்காரக்கூடிய இந்த காருக்குள் இடவசதி அதிகம். ஆனால், பின்பக்கக் கண்ணாடிகள் உயரமாக இருப்பதால், மூன்று வரிசை இருக்கைகளில் உட்காருபவர்கள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக இல்லை.

வருகிறது மஹிந்திரா XUV 700

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு விற்பனைக்கு வர இருக்கும் இதில் இருப்பது, 178 bhp சக்தியை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் டீசல் இன்ஜின்.  5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள ரெக்ஸ்டன், இந்தியாவில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சுமார் 17 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!

இந்தியாவில் ஸாங்யாங் ரெக்ஸ்டன் என்ற பெயரில் விற்பனை செய்யாமல், மஹிந்திரா XUV 700 எனும் பெயரில் விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது மஹிந்திரா.

வருகிறது மஹிந்திரா XUV 700

ரெக்ஸ்ட்டன் காரைத் தவிர ஸாங்யாங் XIV-1 எனும் கான்செப்ட் காரும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சிக்கென டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த காருக்குள் இருக்கும் அத்தனை சீட்டுகளையும் 360 டிகிரி வரை திருப்ப முடியும். இது தவிர, ஸாங்யாங் கொராண்டோ எலெக்ட்ரிக் காரையும் காட்சிக்கு வைத்தது மஹிந்திரா! இதில் 180 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டார் இல்லாத டீசல் இன்ஜின் கொண்ட கொராண்டோ எஸ்யூவி காரை, அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா!

வருகிறது மஹிந்திரா XUV 700

ஸ்பை போட்டோகிராபர்களின் இலக்காக இருந்த ரேவா என்.எக்ஸ்.ஆர் எலெக்ட்ரிக் காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. இதற்கு முன்பு, ரேவா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட 'கார்ட்டூன்’ கார்களைப் போல் இல்லாமல், ரேவா என்.எக்ஸ்.ஆர் பெட்ரோல் கார்களுடன் போட்டிப் போடும் வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

காரின் கிரில்லில் கம்பீரமாக இடம் பிடித்திருக்கிறது மஹிந்திராவின் லோகோ. லித்தியம் ஐயான் மற்றும் லெட் ஆசிட் பேட்டரி கொண்ட இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. லித்தியம் ஐயான் பேட்டரி மாடலின் விலை அதிகமாக இருக்கும். அதேசமயம், லித்தியம் ஐயான் பேட்டரி மாடலில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை பயணம் செய்ய முடியும்!