டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

மார்ச் முதல் எர்டிகா!

மினி எஸ்யூவி

 ##~##
மார்ச் முதல் எர்டிகா!

ணிவகுத்து நிற்கும் எம்பிவி கார்களில், முதலில் வெளிவந்து மார்க்கெட்டைப் பிடிக்க இருக்கிறது மாருதியின் எர்டிகா! 2010 ஆட்டோ எக்ஸ்போவில் 'ஆர்-3’ என்ற பெயரில் கான்செப்ட் காராக இதை காட்சிக்கு வைத்திருந்த மாருதி, இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்குத் தயாராக இருக்கும் 'எர்டிகா’வாக அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்ச் மாத கடைசியில் மாருதி ஷோ ரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். 

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது எர்டிகா. ஓவர் ஸ்டைலும் கிடையாது; அதேசமயம் ஒன்றுமே இல்லாமலும் இல்லை. எர்டிகாவின் முன் பக்க கிரில் மற்றும் பானெட் டிசைன் ரிட்ஸ் காரை நினைவுப்படுத்துகிறது. பெரிய ஹெட் லைட்ஸ், ஸ்விஃப்ட்டை நினைவுப்படுத்துகிறது.

மார்ச் முதல் எர்டிகா!

ரிட்ஸ் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டாலும், எர்டிகாவின் வீல் பேஸ் 2740 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காரின் டேஷ் போர்டு, கறுப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் மிளிர்கிறது. ஆனால் டயல்கள், ஸ்டீயரிங் உட்பட அத்தனையும் அப்படியே ஸ்விஃப்ட்டில் இருந்து எர்டிகாவுக்கு இடம் மாறியிருப்பதால், ஸ்விஃப்ட் காருக்குள் உட்கார்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏழு பேர் உட்கார்ந்து பயணிக்கக்கூடிய இந்த காரின் இறுதி வரிசை இருக்கைகளைப் பிரித்து மடக்க முடியாது. மேலும், நடுவரிசை இருக்கைகளில் தாராள இடவசதி இருப்பதால், கடைசி வரிசையில் சிறுவர்கள்தான் வசதியாக உட்கார முடியும். அதேபோல், மூன்றாவது வரிசை இருக்கைகளில் உட்காரவும், வெளிய வரவும் தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும்!

தற்போது எஸ்.எக்ஸ்-4 காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் எர்டிகாவில் பொருத்தியிருக்கிறது மாருதி. மைலேஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், பர்ஃபாமென்ஸில் மிரட்டும் காராக எர்டிகா இருக்காது. 'அராய்’ சான்றிதழ்படி லிட்டருக்குப் பொதுவாக 16.02 கி.மீ மைலேஜ் தருகிறது எர்டிகா.

மூன்று வேரியன்ட்டுகளுடன் வர இருக்கும் இந்த காரில், பின் வரிசை இருக்கைகளை 'கூல்’ செய்ய இரட்டை ஏ.ஸி வசதி இருக்கும். 7-9 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வருகிறது மாருதி!

மார்ச் முதல் எர்டிகா!

ர்டிகாவைத் தவிர, நான்கு மீட்டர் நீளத்துக்குள் உருவாக்கிய எஸ்யூவி கான்செப்ட் காரையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது மாருதி. 'XAA ஆல்ஃபா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருக்கிறது. எர்டிகாவைப் போலவே இதிலும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினைப் பொருத்த இருக்கிறது மாருதி. ஆனால், 'எர்டிகாவைப் போல் ஸ்விஃப்ட் அல்லது வேறு கார்களில் இருக்கும் எந்த விஷயமும் இந்த காருக்குள் இடம் பெறாது. இது முற்றிலும் புதிய காராக இருக்கும்’ என்கிறார்கள் மாருதியின் இன்ஜினீயர்கள். மாருதி சொல்வது உண்மையா என்பது விற்பனைக்கு வரும்போதுதான் தெரியும்!