மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க, மத்திய அரசு `Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles' (FAME) என்ற திட்டத்தின்கீழ் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குகிறது. முதல்கட்டமாக 850 கோடி ரூபாய் ஒதுக்கி ஏப்ரல் 1, 2015 முதல் மார்ச் 31, 2019 வரை இந்த மானியம் வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக தற்போது FAME II மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு மானியம் தருவதால் இந்த வாகனங்களின் விலை குறைவது மட்டுமல்ல, விற்பனையும் அதிகரிக்கும். ஆனால், CRISIL ஆய்வு நிறுவனம் `தற்போது விற்பனையில் இருக்கும் 95 சதவிகித மின்சார ஸ்கூட்டர்களை, FAME II மானியத்தில் வாங்க முடியாது' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய அரசின் கனரக தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மின்சார வாகனத்துக்கான மானியம் வழங்க அந்த வாகனத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச வேகம், ரேஞ்ச், ஆக்ஸிலரேஷன், சார்ஜிங் சைக்கிள் போன்றவை இருக்க வேண்டும். ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகொண்ட வாகனங்களுக்கு மட்டும்தான் மானியம் என்றும் உள்ளது.
CRISIL நடத்திய ஆய்வின்படி, தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 95 சதவிகித மின்சார ஸ்கூட்டர்கள் FAME II மானியத்துக்குத் தகுதியற்றவை. ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2019 வரை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்ட 15,62,090 மின்சார வாகனங்களில், 10,00,000 மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 90 சதவிகித வாகனங்கள் லெட் ஆசிட் பேட்டரி ஸ்கூட்டர்கள். இந்த ஸ்கூட்டர்கள் 50,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனையாகிறது. லித்தியம் அயன் பேட்டரி ஸ்கூட்டர்கள் எடுத்துக்கொண்டால், அதன் குறைந்தபட்ச விலை 70,000 ரூபாய். இந்த வாகனங்களுக்கு மானியமாக 9,000 வழங்கப்பட்டது.
பேட்டரியைத் தவிர ஸ்கூட்டரின் ரேஞ்சும் இங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 80 கி.மீ ரேஞ்ச், மணிக்கு 40 கி.மீ வேகம் போகும் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே மானியம் எனக் கூறியுள்ளார்கள். இதனால் லித்தியம் அயன் பேட்டரி ஸ்கூட்டர்களிலேயே 90 சதவிகித ஸ்கூட்டர்களுக்கு மானியம் கிடையாது என்கிறது CRISIL.
FAME II-ல் மானியம் பெறுவதற்கு ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டும். பேட்டரி அளவை உயர்த்த வேண்டும் அல்லது புதிய மாடல் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும்.
FAME I முறையில் 17,000 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரை அந்த ஸ்கூட்டரின் திறனைப் பொறுத்து மானியம் வழங்கப்பட்டது. FAME II-ல் பேட்டரி அளவைப் பொறுத்து வழங்கப்படவுள்ளது. 1kwh பேட்டரிக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்குகிறார்கள். 1.5kwh பேட்டரிகொண்ட ஸ்கூட்டர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் கிடைக்கும். இதனால், மானியம் முன்பைவிட 2,000 முதல் 7,000 ரூபாய் வரை குறைகிறது. FAME II மானியம் வழங்குவதைச் சீர்ப்படுத்துவதன் மூலம் மின்சார வாகனங்களின் விற்பனையை ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் மின்சார வாகனங்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படும்.