டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக்" தஞ்சாவூர்

நம்ம ஊரு மெக்கானிக்" தஞ்சாவூர்
News
நம்ம ஊரு மெக்கானிக்" தஞ்சாவூர்

பண்ணையார்களின் சாரதி!

க.ராஜீவ்காந்தி,  ரெ.பாரத் காந்தி >> ந.வசந்தகுமார்

 ##~##

நெல் விளையும் பூமியான தஞ்சையில், பண்ணையார்களுக்குப் பஞ்சமே இல்லை! அதாவது, புல்லட் பைக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆம்! வயலில் வேலை செய்பவர்களுக்கு, புல்லட் பைக்கின் சத்தம்தான் முதலாளிகளின் வருகையை அறிவிக்கிறது. இந்த பைக்குகளின் 'லப் டப்’ சத்தத்தைப் பராமரிக்க நிச்சயம் எக்ஸ்பர்ட் இருக்க வேண்டுமல்லவா? 'புல்லட் சாரதி’ என்பவரைக் கைகாட்டுகிறார்கள் தஞ்சாவூர் புல்லட் பிரியர்கள். பெயருக்கு முன்னால் 'புல்லட்’ என்பது அடைமொழியாகக் காரணம், புல்லட் தவிர வேறு எந்த பைக்கையும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை என்பதுதானாம்!

 அவரைச் சந்தித்தபோது, ''புல்லட் பைக் மேல எனக்கு ரொம்ப பிரியம்னு சொல்றதைவிட, வெறின்னு சொல்லலாம். ஏன்னா, அந்த வெறிதான் என்னை 14 வயசுல மெக்கானிக் வேலைக்குப் போறதுக்குக் காரணமா இருந்துச்சு. அந்தக் காலக்கட்டத்துல தஞ்சாவூர்ல ஃபேமஸ் புல்லட் மெக்கானிக்காக இருந்த பாபுங்கறவர் கிட்டத்தான் தொழில் கத்துக்கிட்டேன். அப்புறம் 75-ல என்ஃபீல்டு புல்லட் சர்வீஸ் பாயின்டா இருந்த அமீர் மோட்டார்ஸ்ல சேர்ந்தேன். நான் பாபு அண்ணன்கிட்ட வாங்குன முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெறும் 10 பைசாதான். என்னோட அளவு கடந்த ஆர்வம், நான் விரும்புற பைக்கோட மெக்கானிக்கா ஆயிட்டா... இந்த உலகமே என்னை பெருமையாப் பாக்கும்னு அந்த வயசில அப்படி ஒரு நெனைப்பு! எதைப் பத்தியும் கவலைப்படாம பைக் பத்தி சதா நேரமும் சிந்திச்சுக்கிட்டு இருப்பேன். அப்படித்தான் இந்த வேலையைக் கத்துக்கிட்டேன்.

நம்ம ஊரு மெக்கானிக்" தஞ்சாவூர்

1980-ல சொந்தமா வொர்க் ஷாப் ஆரம்பிக்கற வரைக்கும் எல்லா பைக்கையும் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனா, எப்ப வொர்க் ஷாப் ஆரம்பிச்சேனோ, அப்பவே புல்லட் மட்டும்தான்னு முடிவு பண்ணிட்டேன். பதினஞ்சு வருஷம் போன வேகம் தெரியலை. அவ்வளவு பிஸியா இருப்பேன். எந்நேரமும் வொர்க் ஷாப்புல பத்து பைக்காவது நின்னுக்கிட்டே இருக்கும். 95 வரைக்கும் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. திடீர்னு புல்லட் மேல இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சு, புல்லட் பைக்கோட வரத்து குறைஞ்சிடுச்சு. வேற பைக்க சர்வீஸ் பண்ண மனசு வரலை. அதனால, பேசாம ஷெட்ட மூடிட்டு வீட்டுலேயே வேற வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 10 வருஷம் கழிச்சு 2005-ல மறுபடியும் புல்லட் பைக்குக்கு கிரேஸ் வர ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், எனக்கு திரும்பவும் வொர்க் ஷாப் திறக்க மனசு வரலை. ஆனா, என்னோட பழைய கஸ்டமர்ஸ் தேடி வர ஆரம்பிச்சாங்க. அவங்களோட வற்புறுத்தலாலதான் திரும்பவும் வொர்க் ஷாப் ஆரம்பிச்சேன்'' என்று நிறுத்தியவரிடம், அவர் கையாண்ட புல்லட்களைப் பற்றி கேட்டோம்.

''1947-ல் வெளியான 700 சிசி பைக், 1954 - 55-ல் வந்த 350 சிசி பைக் வரைக்கும் இன்னமும் பாதுகாத்து வெச்சிருக்கேன். இந்த பைக் எல்லாமே இங்கிலாந்துல தயாரிக்கப்பட்டது. பழைய மாடல் பைக்குகளை இப்பவும் சர்வீஸ் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். அந்த மாதிரி பைக்குகளுக்கு இன்னமும் டிமாண்ட் இருக்கு. ஆனா, அதிகம் கிடைக்கிறதில்லை. பழைய மாடல் பைக்குகளைப் பத்தி இப்ப உள்ள மெக்கானிக்களுக்கு அதிகம் தெரியாது. அதனால, வெளியூர்லேர்ந்துகூட என்னைத் தேடி வருவாங்க. என்னதான் புல்லட்ல எல்லா விஷயமும் தெரிஞ்சாலும், ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருந்தா என்னைத் தேடி வர்றவங்க அதிகம். அதுதான் இப்படி வெளியூர்லேர்ந்துகூட கஸ்டமர்ஸ் என்னைத் தேடி வர்ற ரகசியம். எனக்கு 1960 மாடல் புல்லட்னா ரொம்ப பிடிக்கும். அதேபோல, 700 சிசி புல்லட். இதை இப்ப யார்கிட்டயும் பார்க்க முடியாது. ஒரு மாருதி காருக்கு சமமான பவர் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு இன்னமும் 150 கி.மீ வேகம் போகும். இப்ப புது மாடல் பைக்குகளைத்தான் பசங்க அதிகம் யூஸ் பண்றாங்க. அதே நேரத்துல பைக் மேல உள்ள அக்கறையும் அதிகமாயிடுச்சு. டெக்னாலஜியோட உதவியால நிறைய தெரிஞ்சிக்கிறாங்க, கத்துக்கறாங்க.

முன்னாடி எல்லாம் இந்த தொழிலுக்கு ஹெல்பர்ஸ் கிடைப்பாங்க. இப்ப அந்த மாதிரி ஆர்வத்தோட யாரும் வர்றதில்லை. அது ஒண்ணு மட்டும்தான் இந்த தொழிலோட குறை. வெளியூர்லேர்ந்து வர்றவங்ககூட எவ்வளவு லேட்டானாலும் கோபப்படாம சந்தோஷமாதான் பைக்கை டெலிவரி எடுத்துட்டுப் போவாங்க. சாரதி மேல அவங்களுக்கு உள்ள இந்த நம்பிக்கையை கடைசி வரை காப்பாத்தணும். இந்த ஃபீல்டுல பெரிய ஆளுங்ககூட ஈசியா நண்பர்கள் ஆகிடுவாங்க. சம்பாதிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல பேரும் கிடைக்குது. அதுதான் முக்கியம்!'' என்று பெருமை கொள்ளும் சாரதி, மொத்தம் 18 புல்லட் பைக்குகள் வைத்துள்ளார். 1947 முதல் 1970 வரை வெளியான எல்லா புல்லட்களையும் சேகரித்து ஒரு கண்காட்சி வைக்கும் திட்டத்திலும் இருக்கிறார்!