டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

''என் இனிய இயந்திரா!''

ஃப்ரெஞ்ச் லேடியின் புல்லட் காதல்!

சார்லஸ்  

 ##~##

த்திரிகையாளர் என்ற அடையாளம் இருந்தாலும், ரெஜினா என்ற அந்த ஃப்ரெஞ்ச் நாட்டுப் பெண்ணுக்கு, எண்ணம் எல்லாம் நம் நாட்டின் ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் மீதுதான்! எப்போது இந்தியா வந்தாலும் புல்லட்டில் சவாரி செய்யாமல் பாரீஸ் திரும்ப மாட்டார். 'புல்லட்’ என்று உச்சரித்ததுமே பூரித்துப் போய், தனது புல்லட் மோகம் பேசுகிறார் ரெஜினா.

''என்னுடைய கணவர் ஒரு பைக் பிரியர். ஏன்... வெறியர் என்றுகூடச் சொல்லலாம். பைக் ஓட்டுவதை தனது தீராத காதலாகக் கொண்டிருக்கும் அவர், உலகை பலமுறை பைக்கிலேயே  சுற்றி வந்திருக்கிறார். பைக்கில் அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டு பல நாடுகளுக்கு சாகசங்கள் நிறைந்த உல்லாசப் பயணங்கள் போவது எனக்கு மிகவும் பிடிக்கும். சொந்த ஊரில்...அதாவது பாரீஸில் அவர் பயன்படுத்துவது சுஸ¨கி 600 பைக்காக இருந்தாலும், அவருடைய மனதுக்கு நெருக்கமான பைக் ராயல் என்ஃபீல்டுதான்!

''என் இனிய இயந்திரா!''

2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஒரு கட்டுரை சம்பந்தமாக வந்திருந்தபோது, ராயல் என்ஃபீல்டு நடத்தும் 'சதர்ன் ஒடிஸி’ பற்றித் தெரிந்து கொண்டோம். இதில் கலந்து கொள்ள நாங்கள் விருப்பம் தெரிவித்தபோது, ராயல் என்ஃபீல்டு நிர்வாகத்தினர் எங்களையும் அந்த சாகசப் பயணத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டார்கள். இந்தப் பயணத்துக்காக அவர்கள் எங்களுக்கு ஒரு பைக்கையும் கொடுத்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து கிளம்பிய முதல் நாளே பைக்கின் சைலன்ஸர் உடைந்து போனது. அடுத்த நாள் கேரளாவுக்குள் பயணித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம்.  

திசைகளையும் ஊர்களையும் காட்டும் பெயர்ப் பலகைகள்கூட மலையாளத்தில்  இருந்ததால், எந்தப் பக்கம் பயணிப்பது என்று தெரியாமல் திணறி திக்குமுக்காடி விட்டோம்.  கடைசியில் அங்கே - இங்கே விசாரித்து மீண்டும் குழுவின் மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது. ஒரே வாரத்தில் பரந்து விரிந்த இந்தியாவைச் சுற்றி வந்தது, நாங்கள் நெஞ்சோடு போற்றிப் பாதுகாக்கும் ஓர் அரிய அனுபவம். பில்லியன் ரைடராக மட்டுமே இருந்த எனக்கு, பைக் ரைடராக வேண்டும் என்ற ஆசை விதையாக மனதுக்குள் வீழ்ந்ததும் இந்தப் பயணத்தின் போதுதான்!

''என் இனிய இயந்திரா!''

அந்த ட்ரிப் முடிந்து,  பாரீஸ் திரும்பியதும் முதல் வேலையாக யமஹா YBR 125 பைக்கை வாங்கி பைக் ஓட்டப் பழகிக் கொண்டேன். அடுத்த ஆண்டே, அதாவது 2010-ம் ஆண்டு கோவாவில் நடந்த 'ரைடர் மேனியா’வுக்கு பெங்களூரில் இருந்து ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் பைக்கில் பறந்ததுதான் என்னுடைய முதல் நீண்ட பைக் ரைடிங் அனுபவம்!'' என்று சிலிர்ப்போடு சொன்ன ரெஜினா, சென்னையில் பைக் ஓட்டிய அனுபவம் பற்றித் தொடர்ந்து கூறினார்.

''என் இனிய இயந்திரா!''

''தமிழ் இளைஞர்கள் பற்றியும், தமிழ்நாடு பற்றியும் பல்வேறு கட்டுரைகள் எழுதுவதற்காக 2010-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் சென்னை வந்தேன். அப்போது முழுக்க முழுக்க புல்லட்டில் சென்றுதான் வேலை பார்த்தேன். சென்னையைச் சேர்ந்த V40 புல்லட் கிளப் நண்பர்கள் பலரும் எனக்கு சென்னையில் பைக் ஓட்டும் சூட்சுமங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது சென்னை சாலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி!

''என் இனிய இயந்திரா!''

ஆனால் ஒரு விஷயம், சென்னையில் நான் பைக் ஓட்டும்போது ஒரு ஹீரோயினைப் பார்ப்பது போல் எல்லோரும் என்னை வேடிக்கை பார்ப்பது எனக்கு முதலில் புரியாத புதிராக இருந்தது. ஆனால், அதுவே போகப் போக எனக்கு ஜாலியாக மாறிவிட்டது. சென்னையைப்போல் பாரீஸிலும் நான் பைக்குகள் ஓட்டினால் சாலையில் எல்லோருமே என்னை வேடிக்கை பார்ப்பார்கள். காரணம் - நான் என்பதைவிட, நான் ஓட்டும் ராயல் என்பீல்டு பைக் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.  பாரீஸ் நகரில் இப்போது ராயல் என்பீல்டுக்கு ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு நானும் ஒரு காரணம்!'' என்று கண் சிமிட்டுகிறார் ரெஜினா.

''பைக் ஓட்டப் பிடித்த இடம் பாரீஸா? சென்னையா?'' என்று கேட்டால், ''சென்னை பிடித்திருந்தாலும் இங்கே டிராஃபிக், புகை போன்ற பிரச்னைகள் உண்டு. பாரீஸ் சாலைகள் பைக் ஓட்டுவதற்குச் சிறந்த சாலைகள் என்பதோடு, ரசித்துக் கொண்டே பைக் ஓட்ட நகரைச் சுற்றிலும் அழகழகான சாலைகள் அங்கே அதிகம்!'' என்று நம்முடைய மனம் நோகாமல் நாசூக்காகப் பதில் கூறினார்.

''சரி; ரெஜினாவின் அடுத்த பைக்?''

''நிச்சயம் ராயல் என்ஃபீல்டு புல்லட்தான்! கறுப்பு நிற புல்லட் கிளாஸிக் அல்லது க்ரோம் கிளாஸிக்தான் என்னுடைய சாய்ஸ். அடுத்த மாதம் மீண்டும் சென்னை வருகிறேன். புல்லட்டில் சென்னையை ஒரு ரவுண்டு அடிப்போம். வர்றீங்களா?'' என்று உற்சாகமாகக் கேட்டார் ரெஜினா!