டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

கீழே இறங்க மாட்டோம்!

கீழே இறங்க மாட்டோம்!

கீழே இறங்க மாட்டோம்!
கீழே இறங்க மாட்டோம்!

ரேஸுக்குத் தயாராகிவிட்டது ராயல் என்ஃபீல்டு! ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் என க்ரூஸர் பைக் தயாரிப்பாளர்கள் இந்தியாவுக்குள் களம் இறங்க... இப்போது 'அலர்ட்’ ஆகிவிட்டது ராயல் என்ஃபீல்டு. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி வெங்கி பத்மனாபனைச் சந்தித்தேன்...

''எப்படி இருக்கிறது தண்டர்பேர்டு 500 பைக்குக்கான ரெஸ்பான்ஸ்?''

''எங்கள் நிறுவனத்தின் பெயர் ராயல் என்ஃபீல்டு. ஆனால், புல்லட் பைக்குகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டதால், எங்கள் நிறுவனத்தின் பெயரே 'புல்லட் கம்பெனி’ என்றாகிவிட்டது. அதனால், சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு தண்டபேர்டு என்ற பைக்கை அறிமுகப்படுத்தினோம். க்ரூஸர் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். தண்டர்பேர்டு செம ஹிட். 'புல்லட் கம்பெனி’ என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது. தண்டர்பேர்டு ஹிட்-ஐ தக்க வைத்துக் கொள்ளத்தான் இப்போது 500 சிசி பைக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். புதிய ஹெட் லைட்ஸ், சாய்ந்து உட்கார ஃபுட் ரெஸ்ட் இடமாற்றம், ஸ்பிளிட் சீட், 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் என வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் கேட்டார்களோ... அதற்கு மேலும் புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது தவிர ரைடிங் ஜாக்கெட்ஸ், ஹெல்மெட், 'நீ-பேட்’ என ஆக்சஸரீஸ்களையும் அறிமுகம் செய்து இருக்கிறோம்.''

கீழே இறங்க மாட்டோம்!

''புதிய பைக் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் பைக்குகளுக்கே டெலிவரி பீரியட் நீண்டு கொண்டே போகிறதே?''

''இப்போது உற்பத்தியை 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறோம். 3 ஷிஃப்ட்டில் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. தயாரிப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் கடந்த ஆண்டு 72,000 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறோம். இது, 2010-ம் ஆண்டைக் காட்டிலும் 22 ஆயிரம் அதிகம். ஒரகடத்தில் நிஸான் தொழிற்சாலை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசு எங்களுக்கு நிலம் ஒதுக்கியிருக்கிறது. இங்கே தொழிற்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஒரகடம் தொழிற்சாலையில் 1.50 லட்சம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க இருக்கிறோம். மெள்ள மெள்ள வெயிட்டிங் பீரியட் குறையும்.''

''ராயல் என்ஃபீல்டு பைக்குகள், தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பதாக ஒரு குறை இருக்கிறதே?''

''தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை நாங்களும் அறிமுகப்படுத்தி வருகிறோம். ஆனால், அதை விளம்பரப்படுத்துவது கிடையாது. இனிமேல் விற்பனைக்கு வர இருக்கும் பைக்குகளிலும் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் இடம் பெறும்.''

''ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அனைத்தும் 1 லட்ச ரூபாய்க்கு மேல்தான் விற்பனை செய்யப்படுகின்றன. விலை குறைவான, சிசி குறைவான பைக்குகள் எதையும் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா?''

''ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குபவர்களில் கௌரவத்துக்காகவும், பெருமைக்காகவும் வாங்குபவர்களே அதிகம். எங்களது நிறுவனம் 350 சிசி-க்கு மேலான பவர்ஃபுல் பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனம். நாங்கள் 100 சிசி, 150 சிசி என இறங்கினால், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் கௌரவம் குறைந்துபோகும். அதனால், இப்போது அல்ல... எப்போதுமே 350 சிசி-ஐ விட்டுக் கீழே இறங்குவதாக எண்ணம் இல்லை!''

''ராயல் என்ஃபீல்டு ஷோ ரூம்களில் பைக்கை வாங்குபவர்களில், பெரும்பாலானோர் ராயல் என்ஃபீல்டு சர்வீஸ் சென்டர்களில் சர்வீஸ் செய்வதில்லை. இது உங்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பாதிக்காதா?''

''குறைந்தது 10 'சர்வீஸ் பே’ வைத்திருப்பவர்களுக்குத்தான் இப்போது டீலர் ஷிப் தருகிறோம். அதேபோல், மாதத்துக்குக் குறைந்தது இவ்வளவு வாகனங்களை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மேலும், என்ஃபீல்டு பைக்குகளில் புதிய தொழில்நுட்பங்கள் இடம் பெறுவதால், தனியார் மெக்கானிக்குகளைவிட அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் உள்ள மெக்கானிக்குகளாலேயே பைக்குகளை விரைந்து சர்வீஸ் செய்து முடிக்க முடியும்!''

''ஸ்பேர் பார்ட்ஸ் சரியாகக் கிடைப்பதில்லை. சர்வீஸ் கொடுத்தால் டெலிவரி கொடுக்க ஒரு வாரம் வரை இழுத்தடிக்கிறார்கள் என்று வரும் புகார்கள் பற்றி...''

ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளையர்கள் பல பேரை மாற்றி விட்டோம். இதனால், பழைய பாகங்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருந்தது. இந்தப் பிரச்னை இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் என போட்டி பலமாக இருக்கிறதே?

ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் நிறுவனங்கள் வந்திருப்பது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்குச் சாதகமே. வாடிக்கையாளர்கள் ஹார்லி, டிரையம்ப் பைக்குகளின் விலையைப் பார்த்துவிட்டு எங்களிடம்தான் வருகிறார்கள். சொல்லப் போனால், இந்த நிறுவனங்களின் வருகை எங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும். 55 ஆண்டுகளாக இந்தியாவில், இந்தியச் சாலைகளுக்கென ஸ்பெஷலாக பைக்குகளைத் தயாரித்து வருகிறோம். ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் எங்கேயும் போய்விட மாட்டர்கள்'' என்று சொல்லிவிட்டு, உற்சாகமாகக் கைகுலுக்குகிறார் வெங்கி பத்மநாபன்!

- சார்லஸ்