ஆ.அலெக்ஸ் பாண்டியன்   ஜெ.வேங்கடராஜ்

 ##~##

ரியல், ஜேம்ஸ், ரெட் இண்டியன், டிரையம்ப், நார்டன், பி.எஸ்.ஏ, போன்ற வின்டேஜ் பைக்குகள் தொடங்கி, இன்றைய நவீன பல்ஸர், அப்பாச்சி வரை எல்லாவிதமான பைக்குகளையும் ஒரு கை பார்க்கிறார் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த மெக்கானிக் ஜானகிராமன். 'நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு வந்த முதல் ஆட்டோ ரிக்ஷாவை சர்வீஸ் செய்தவர்; சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஹோண்டா பைக்குகளின் மெக்கானிக்’ என ஜானகிராமனின் பெயர் திருச்சி வட்டாரத்தில் பிரபலம்.

பாலக்கரையில் உள்ள ஜானகிராமனின் 'செல்வம் ஆட்டோ சர்வீஸ்’ ஷெட்டுக்குச் சென்றோம். ''பதினெட்டு வயசுலேயே தனியா வொர்க் ஷாப் ஆரம்பிச்சுட்டேன். முப்பது வருஷமா கடை 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும்'' என்று தன்னைப் பாறி சுய அறிமுகம் கொடுத்துக்கொண்ட ஜானகிராமன், பைக் ரேஸிலும் ஒரு காலத்தில் கில்லாடி.

நம்ம ஊரு மெக்கானிக்

''அப்போ வாலிப வயசு; பைக் ரேஸுன்னா உசுரு. சோழாவரம் டிராக்ல பைக் எடுத்தேன்னா... பேய் மாதிரி ஓட்டுவேன். பத்து வருஷமா தொடர்ந்து ரேஸ் போயிட்டு இருந்தேன்'' என தன் கிரீஸ் படர்ந்த பிளாஷ் பேக்கை கூறினார். மற்றவர்களால் சரி செய்ய முடியாத பிரச்னையாக இருந்தாலும், அதை ஜானகிராமனிடம் கொண்டு சென்றால், பிரச்னை தீர்ந்துவிடும் என்று கூறுகிறார்கள் இவரது வாடிக்கையாளர்கள். திருச்சி காவல்துறை வாகனங்களுக்கும், மாநகராட்சி வாகனங்களுக்கும் இவர்தான் மெக்கானிக்.

''பைக்கை ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தே, அதோட உடம்புக்கு என்னன்னு கண்டு பிடிச்சுடுவேன். அதேபோல, ஒரு பைக்கை ரிப்பேர் பண்ண, அதிகபட்சம் ஒரு நாள்தான். ஷெட்டுல இருந்து பைக் போயிடுச்சுன்னா... அது ஆறு மாசத்துக்கு ஷெட்டு பக்கமே வரக்கூடாது. இதுதான் என் பாலிஸி!'' என்றவர், பைக் வைத்திருப்பவர்களுக்கும் சில யோசனைகளை கூறினார்.

''பைக்குக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னைன்னா, இப்போதைக்கு இதைப் பார்த்துப்போம். பிறகு முழுசா பார்த்துக்கலாம்னு இருக்கவே கூடாது. அதுதான் பெரிய பிரச்னைல போய் விட்டு விடும். பேட்டரி, வீல் அலைன்மென்ட், பிரேக், கேபிள் ஒயர் - இது மாதிரியான பாகங்களை வாரம் ஒரு தடவையாச்சும் செக் பண்ணிக்கணும். பைக்கை எப்பவும் ஒரே மெக்கானிக்கிட்ட சர்வீஸுக்கு விட்டாதான், அந்த பைக்கோட அத்தனை விஷயங்களும் தெரிஞ்சு, புரிஞ்சு சர்வீஸ் செய்ய முடியும்.

பைக்குல பாதி பிரச்னைக்குக் காரணமே பெட்ரோல்ல கலந்து வர்ற 'டஸ்ட்’தான். மூணு மாசத்துக்கு ஒரு தடவை பைக்கை முழுசா செக்-அப் பண்ணி ஆயில் மாத்தணும். ஸ்பார்க் ப்ளக், கார்புரேட்டர், ஏர்ஃபில்டர், செயின் மாதிரியான விஷயங்களைச் சரியா பராமரிச்சாலே பைக்குல எந்தப் பிரச்னையும் வராது..'' என்று பைக் டிப்ஸுகளை அள்ளித் தெளித்தார் ஜானகிராமன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு