பீஜிங் ஆட்டோ ஷோ

ஆட்டோ சைனா என்று அழைக்கப்படும் 'பீஜிங் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ,’ ஏப்ரல் 23-ம் தேதி துவங்கியது. ஃப்ராங்ஃபர்ட் மற்றும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஆட்டோமொபைல் ஷோ இது. சீனாதான் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் ஆட்டோமொபைல் மார்க்கெட் என்பதால், இந்த ஆட்டோ ஷோவில் மொத்தம் 120 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன!

லம்போகினி உருஸ்
ஸ்போர்ட்ஸ் செடான் கார்களை மட்டுமே தயாரித்து வரும் லம்போகினி நிறுவனம், முதன்முறையாக தனது எஸ்யூவி காரை பீஜிங் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தியது. உருஸ் என்பது ஒருவகை காளையின் பெயர். 'இரண்டு பேர் மட்டும் உட்கார்ந்து செல்லும் ஸ்போர்ட்ஸ் காரை மட்டும் அல்ல, ஏழு பேர் உட்கார்ந்து செல்லும் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவி காரையும் எங்களால் தயாரிக்க முடியும்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தியிருக்கிறது லம்போகினி. 600 bhp சக்தி கொண்ட இந்த பவர்ஃபுல் எஸ்யூவி காரில், 4-வீல் டிரைவ் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பிடித்துள்ளன. 12 கோடி ரூபாய்க்கு சீனா, பிரேசில், அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது லம்போகினி. உருஸ் விற்பனையாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாததற்குக் காரணம், உருஸ் வாங்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் இந்தியாவில் குறைவாம்!

ரேஞ்ச் ரோவர் இவோக்- விக்டோரியா பெக்காம் எடிஷன்
பிரபல ஃபேஷன் டிசைனரும், கால் பந்து வீரர் டேவிட் பெக்காமின் மனைவியுமான விக்டோரியா பெக்காம் வடிவமைத்த ரேஞ்ச் ரோவர் இவோக் ஸ்பெஷல் எடிஷன் கார், சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2 லிட்டர், 240 bhp சக்தி கொண்ட டர்போ சார்ஜ்டு இன்ஜினுடன் வெறும் 200 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட இருக்கும் இது, முதலில் சீனாவில்தான் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறது ஜாகுவார் - லேண்ட்ரோவர் நிறுவனம். இந்த காரின் வெளிப்பக்க டிசைனிலும், டேஷ் போர்டு, டயல்கள் உள்ளிட்ட உள்பக்க டிசைனிலும் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் விக்டோரியா பெக்காம். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த காரின் விலை சுமார் 67 லட்சம் ரூபாய்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சிக்ஸ் சென்சஸ்
பளீர் வெள்ளை வண்ண வெளித்தோற்றம், வால்நட் வண்ணத்தில் டேஷ் போர்டு, செம ராயல் அலாய் வீல்ஸ் என அசரடிக்கும் வகையில் டிசைன் செய்து 'சிக்ஸ் சென்சஸ்’ என்ற பெயரில் சீனாவில் அறிமுகப்படுத்தியது ரோல்ஸ்ராய்ஸ். 6.6 லிட்டர் 563 bhp சக்தி கொண்ட இந்த காருக்குள், ஏராளமான சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்!

ஹோண்டா கான்செப்ட் சி
சீன ஆட்டோ ஷோவின் மிக முக்கியமான அறிமுகம் ஹோண்டா 'சி கான்செப்ட்.’ அடுத்த ஆண்டு முதல் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கும் மிட் சைஸ் காரின் மாதிரித் தோற்றம்தான் இந்த கான்செப்ட் கார். 'சி' என்றால் சேலஞ்ச், கூல், சீனா என பலப் பெயர்க் காரணங்களைச் சொல்கிறது ஹோண்டா!
ஹோண்டா கான்செப்ட் எஸ்
இந்தியா உள்பட அடுத்த ஆண்டு இறுதியில், ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கும் சின்ன காரின் கான்செப்ட் இதுதான். இங்கேயும் 'எஸ்’ என்றால் ஸ்டைல், ஸ்மால், சர்ப்ரைஸ் என மூன்று பெயர்க் காரணங்களைச் சொல்கிறது ஹோண்டா!

ஃபியட் வியாஜியோ
அடுத்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வர இருக்கும் செடான் கார் இதுதான். ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாவுடன் போட்டி போட இருக்கும் இந்த காரை, ஃபியட் நிறுவனமும் அமெரிக்காவின் கிரைஸ்லர் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த காரின் அதிகபட்ச சக்தி 118 bhp. செடான் காரான வியாஜியோவின் பிளாட்ஃபார்மிலேயே ஹேட்ச்பேக் காரையும் தயாரிக்க இருக்கிறது ஃபியட்!
நிஸான் சென்ட்ரா
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 'சென்ட்ரா’ என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் காரை, சீனாவில் 'சில்ஃபி’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது நிஸான். 1.8 லிட்டர் 'எக்ஸ்ட்ரானிக் வேரியபிள்’ டிரான்ஸ்மிஷனுடன் கூடிய இன்ஜினை அறிமுகப்படுத்துகிறது நிஸான்!

நிஸான் வெனுசியா
சீனாவில் டாங்ஃபெங் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறது நிஸான். 'வெனுசியா’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பிராண்ட் பெயரில், விலை குறைவான கார்களை சீனாவில் விற்பனை செய்ய இருக்கிறது நிஸான். இதற்கென தனியாக 100 டீலர்ஷிப்புகளைத் துவங்க இருக்கும் நிஸான், முதல்கட்டமாக 1.6 லிட்டர் இன்ஜின் கொண்ட டி50 காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது!
சார்லஸ்