Published:Updated:

மோகினி கார்களும் மஸராட்டி பேய்களும்!

எக்ஸாட்டிக் கார் கிளப்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ட்டோமொபைல் ஆடுகளத்தில், எப்போதுமே அசராமல் நின்று விளையாடுவதில் சென்னைவாசிகள் கில்லாடிகள். வின்டேஜ் கார், ஸ்போர்டஸ் பைக், பர்ஃபாமென்ஸ் கார் என ஒவ்வொரு ரகத்துக்கும் இங்கு கிளப்புகள் உண்டு. ஆனால், கோடிகளில் விலை கொண்ட சூப்பர் கார்களுக்கான பிரத்தியேக கிளப் மட்டும் இல்லாமல் இருந்தது. அந்த நெருடலை வருடிக் கொடுக்க வந்துவிட்டது 'மெட்ராஸ் எக்ஸாட்டிக் கார் கிளப்’ (MECC - Madras Exotic Car Club) 

பால்சிங் ஜார்ஜ் மற்றும் மனோஜ் லுல்லா என்ற ஜோடிதான் இந்த கிளப் அமைவதற்கு முன் முயற்சிகளை எடுத்தது. இவர்களில் பால்சிங் ஜார்ஜ், தன் ரோல்ஸ் ராய்ஸ் கார் மூலம் ஏற்கெனவே 'மோட்டார் விகடன்’ வாசகர்களுக்குப் பரிச்சயமானவர்.

முதல் நாள் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் கார் ஷோ, மறுநாள் இருங்காட்டுக்கோட்டை டிராக்கில் ரேஸ் என எக்ஸாட்டிக் கார் கிளப்பின் தொடக்க விழாவே அமர்க்களம்! இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அனைத்தையும் ஒரு வலம் வந்தோம். கண்ணை மூடிக்கொண்டு, எனக்குப் பிடித்த ஒரு சூப்பர் காரை நினைத்துக் கொண்டு, அதைத் தேடினால் அந்த பிராண்டு காரை அங்கே பார்க்க முடிந்தது.

மோகினி கார்களும் மஸராட்டி பேய்களும்!

ஃபெராரி, லம்போகினி கலார்டோ, ஆஸ்டின் மார்ட்டின், ரோல்ஸ் ராய்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, நிஸான், போர்ஷே மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் மஸராட்டி என சூப்பர் கார்கள் அழகு மோகினிகள் போல காண்பவரைக் கலங்கடித்தன. கிட்டத்தட்ட கார்களுக்கான அழகிப் போட்டி போலத்தான் இருந்தது இந்த நிகழ்வு. அதன் பிறகு, சூப்பர் கார்களின் எஜமானர்கள் அத்தனை பேரும் தனி தனியாக நேரம் எடுத்துக்கொண்டு ரேஸ் மைதானத்தில் காரில் பறந்து பார்த்தார்கள்.

சூப்பர் கார் உரிமையாளர்கள் பலருக்கும், இந்த கிளப்பில் சேர்ந்தது செம த்ரில்லிங் அனுபவம் என்பது அவர்களிடம் பேசியபோது தெரிந்தது. ''தென் இந்தியாவில் சூப்பர் கார்களை, அதன் முழுத் திறனோடு ஓட்டிப் பார்க்க, அனைவருக்கும் இருக்கும் ஒரே சாய்ஸ் ஈசிஆர் சாலை மட்டுமே! அதிலும் ஓவர் ஸ்பீடு, டிராஃபிக் வயலேஷன் என சட்ட திட்டங்கள் இருப்பதால், சூப்பர் காரின் முழுத் திறமையை அனுபவிக்க முடியாது. அதனால்தான் ரேஸ் டிராக்குக்கு வந்திருக்கிறோம். இங்கே காரை ஓட்டிய பிறகுதான் காரின் நிஜ பர்ஃபாமென்ஸை உணர முடிந்தது!'' என்று அவர்கள் உற்சாகமானார்கள்.

டிராக்கில் எத்தனையோ கார்கள் இருந்தாலும் சிவப்பு ஃபெராரிக்கும், மஞ்சள் லம்போகினிக்கும்தான் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ். 'மன்னன்’ படத்தில் ரஜினியும், கவுண்டமணியும் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்குவார்களே... அதற்குச் சற்றும் குறைவில்லாமல் வியர்வை மழையில் நனைந்து கொண்டே, கார்களைப் பார்த்துப் பரவசமானது ரசிகர் பட்டாளம். 'ஹே... நான் இந்த ஆடி காரை சத்யம் தியேட்டர் பார்க்கிங்ல பாத்திருக்கேன்... 'ஈசிஆர்-ல ஒருநாள் 'பர்ன் - அவுட்’ செஞ்சதா சொன்னேன்ல... அது இந்த போர்ஷேதான்’ என அப்டேட்டுகளை அள்ளிவிட்டபடியே அந்த ஞாயிறுப் பொழுதைப் போக்கிய சென்னையின் சூப்பர் கார் ரசிகர் பட்டாளம், தங்களது பிறவிப் பயனையே அடைந்துவிட்ட மாதிரி திருப்திப் பட்டுக்கொண்டது!

சாலையில் பார்க்கும் சூப்பர் கார்களை ரசிக்க, இனிமேல் ரசிகர்கள் யாரும் பைக்கில் துரத்திக்கொண்டு போக வேண்டாம். ஆண்டுக்கு மூன்று முறை இது போன்ற நிகழ்ச்சிகளை எக்ஸாட்டிக் கார் கிளப் நடத்த முடிவு செய்திருப்பது, சூப்பர் கார் பிரியர்களுக்கான விர்ர்ர்ரூம் நியூஸ்!

மோ.அருண்ரூப பிரசாந்த்

வி.செந்தில்குமார், அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு