பிரேக்கிங் டெஸ்ட்
##~## |
விபத்து பற்றிய புள்ளி விவரங்களை அடுக்கவே தேவையில்லை. சந்தேகமே இல்லை; விபத்துகளில் நாம்தான் நம்பர் ஒன்!
அதனால், 'பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? எரிபொருளை வீணாக்காமல் கார் ஓட்டுவது எப்படி? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் கார் ஓட்டுவது எப்படி?’ என்று தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு நிபுணர்களை அழைத்து வந்து நம் ஊர்க்காரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்.
'டிரைவிங் ஸ்கில்ஸ் ஃபார் லைப்’ என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், கார் ஓட்டுபவரின் கவனம் ஒரே ஒரு விநாடி விலகினாலும், என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை, டெஸ்ட் டிராக்குக்கு அழைத்துச் சென்று பயிற்சியாளர்கள் செயல்முறை விளக்கமே கொடுத்தார்கள்.

பிரேக்கிங் டிஸ்டன்ஸ்

சாலையில் வேகமாக காரை ஓட்டும்போது, திடீரென்று சைக்கிள் குறுக்கே வந்துவிட்டால், பிரேக் அடிப்போம். ஆனால், என்னதான் ஏபிஎஸ், இஎஸ்பி பிரேக் உள்ள காராக இருந்தாலும், கார் பிரேக் அடித்த அதே இடத்தில் நிற்காது. சற்று தூரம் ஓடித்தான் நிற்கும். அந்த 'சற்று’ தூரம் என்பது எவ்வளவு தூரம்?
செயல்முறை விளக்கம் துவங்கியது.
60 கி.மீ வேகத்தில் ஃபோர்டு ஃபிகோவை ஓட்டி வந்த பயிற்சியாளர், சடர்ன் பிரேக் அடிக்க... ஓடிக்கொண்டிருந்த கார், பிரேக் அடித்த இடத்தில் இருந்து சுமார் ஐம்பது அடி கடந்து சென்ற பிறகே நின்றது.
''இதுவே நான் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து பிரேக் பிடித்தால், கார் எவ்வளவு தூரம் ஓடி நிற்கும்?'' என்று பயிற்சிக்கு வந்த டிரைவர்களைப் பார்த்து காரில் இருந்தபடியே பயிற்சியாளர் கேட்க... ஆளாளுக்கு, ''இரண்டு மடங்கு தூரம். மூன்று மடங்கு தூரம்'' என்று பதில் சொன்னார்கள். ''அப்படியா?'' என்று கேட்டுக் கொண்ட பயிற்சியாளர், 120 கி.மீ வேகத்தில் வந்து சடன் பிரேக் பிடிக்க.... கார் பிரேக் அடித்த இடத்தில் இருந்து சுமார் ஐநூறு மீட்டர் ஓடி, அதன் பிறகே நின்றதைப் பார்த்து அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். ''ஆகவே நண்பர்களே, காரின் வேகம் இரண்டு மடங்கு அதிகமானால், பிரேக்கிங் டிஸ்டன்ஸ் இரண்டு மடங்கு அல்ல; பல மடங்கு அதிகமாகும்!'' என்றார் அந்த வெள்ளைக்காரப் பயிற்சியாளர்.
அடுத்த செயல்முறை விளக்கத்துக்குத் தயாரானார்கள் பயிற்சியாளர்கள். இந்த முறை இரண்டு பேருமே ஆளுக்கு ஒரு காரை ஓட்ட... இரண்டு ஃபோர்டு ஃபிகோ காரை எடுத்து வந்து டிராக்கில் நிறுத்தினார்கள்.
''நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, முன்னால் செல்லும் காருக்கும், பின்னால் செல்லும் காருக்கும் என்ன இடைவெளி இருக்க வேண்டும் தெரியுமா... நீங்களே பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு அந்த இரண்டு பயிற்சியாளர்களும் ஆளுக்கு ஒரு காரில் ஏறினார்கள்.

''ஐய்யோ... நிஜமாகவே ஆக்ஸிடென்ட் செய்து காட்டப் போகிறீர்களா?'' என பயிற்சிக்கு வந்த ஒருவர் பதற... ''பயம் வேண்டாம். நாங்கள் இருவரும் ஒரே லேனில் பயணித்தால்தான் விபத்து நிகழும். அதனால், விபத்து எப்படி நடக்கும் என்பதை விளக்க, அடுத்தடுத்த லேனில்தான் ஓட்டப் போகிறோம்!'' என்று சொல்லிவிட்டு, பயிற்சியாளர்கள் இருவரும் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டினார்கள்.
அப்போது முன்னால் சென்ற காரை ஓட்டிய பயிற்சியாளர், சடர்ன் பிரேக் அடித்து காரை நிறுத்த... பின்னால் வந்த காரில் இருந்த அடுத்த பயிற்சியாளரும் உடனே பிரேக் அடித்தார். ஆனால், முதல் காரில் இருந்த பயிற்சியாளரைவிட பின்னால் சென்ற பயிற்சியாளர் மூன்றே மூன்று விநாடிகள்தான் தாமதமாக பிரேக் அடித்தார். என்றாலும், பின்னால் வந்த கார், முன்னால் சென்ற காரை எப்படி அடித்து நொறுக்கியிருக்கும் என்பதைப் பார்த்தபோது, வயிற்றில் புளியைக் கரைத்தது.
இதுவே, முதல் காரைவிட இரண்டாவது கார் இரண்டு விநாடிகள் தாமதமாக பிரேக் பிடித்திருந்தால்... அந்தச் செயல்முறை விளக்கத்தையும் பயிற்சியாளர்கள் செய்து காட்டினார்கள். முதல் காரின் பம்பரை இரண்டாவதாக வந்த கார் மோதும் அளவுக்கு அருகே வந்து நின்றது.
அடுத்து, முதல் காரில் இருந்த டிரைவரைவிட இரண்டாவது காரில் இருந்த டிரைவர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஒரே ஒரு விநாடியிலேயே பிரேக் அடித்தால்... அதையும் பயிற்சியாளர்கள் செய்து காட்டினார்கள். முன்னால் பிரேக் அடித்து நின்ற காருக்கு வெகு தொலைவில், பின்னால் வந்த கார் பிரேக் அடித்து பாதுகாப்பாக நின்றது.
இதனால் அறியப்படும் நீதி என்ன என்றால்... நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, முன்னால் செல்லும் வாகனத்தைவிட மூன்று விநாடிகள் தொலைவில்தான் செல்ல வேண்டும்.
வேகத்தின் ஆபத்தையும், விநாடிகளின் அருமையையும் அவர்கள் செயல்முறை விளக்கம் கொடுத்து நிரூபித்ததற்குக் காரணம்...
காரோட்டும்போது செல்போன் பேசினாலோ, தண்ணீர் குடித்தாலோ, சிடி மாற்றினாலோ... ஒரே ஒரு விநாடிதான் கவனம் சிதறும். அந்த ஒரு விநாடி, எந்த அளவுக்கு நம்முடைய தலையெழுத்தையே மாற்றக்கூடியது என்பதை விளக்கத்தான்!
வேல்ஸ் சொ.பாலசுப்ரமணியன்