நிக்கோ ரோஸ்பெர்க்

திரடித் திருப்பங்களால் கார் ரேஸ் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது ஃபார்முலா-1. 2012-ம் ஆண்டு சீசனுக்கான ரேஸில் இதுவரை 3 ரேஸ் போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ரேஸிலும், வெவ்வேறு ரேஸ் அணி வீரர்கள் வெற்றி பெற்று போட்டிக்கான விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஃபார்முலா-1 ரேஸில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க். முகமது கஜினி 17 முறைதான் படை எடுத்தார். ஆனால் நிக்கோ ரோஸ்பெர்க் 7 ஆண்டுகள், 111 ஃபார்முலா-1 ரேஸ்களில் மோதி, முதல் முறையாக வெற்றிக் கோப்பையை ஜெயித்திருக்கிறார். நிக்கோ ரோஸ்பெர்க்கின் சாதனையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு மலேஷியாவில் நடைபெற்ற ரேஸின் சேஸிங் சீன்கள் இதோ....

ஃபார்முலா-1 - மலேஷியா
##~## |
மலேஷியாவின் செப்பாங் ரேஸ் ட்ராக்கில் 2012-ம் ஆண்டுக்கான இரண்டாவது ரேஸ் போட்டி மார்ச் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டனும், ஜென்சன் பட்டனும் இருவரும் சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கினார்கள். மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கி, மீண்டும் கவனம் ஈர்த்தார் ஃபார்முலா-1 ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர். நடப்பு சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல் ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ, எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.
ஞாயிற்றுக்கிழமை மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே ரேஸ் துவங்கியது. ரேஸ் துவங்கியதுமே லூயிஸ் ஹாமில்ட்டன், ஜென்சன் பட்டன் இருவரது மெக்லாரன் மெர்சிடீஸ் கார்களும் சீறிப் பறந்தன. ஆனால் மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மைக்கேல் ஷூமேக்கர் முக்கிக் கொண்டே இருந்தார். பின்னால் வருபவர்களுக்கு எல்லாம் வழிவிட்டுக் கொண்டு இருந்த மைக்கேல் ஷூமேக்கரின் கார், பின்னால் வந்த ரோமன் க்ரூஸின் மீது இடிக்க பதினோறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து மழை வேறு பெய்து கொண்டிருந்ததால், விபத்துக்கான அறிகுறிகளுடனேயே ரேஸ் தொடர்ந்து கொண்டிருந்தது. ரேஸ் ஓட்டிக் கொண்டு இருக்கும்போது ரேஸ் வீரர்கள் பேசும் டீம் ரேடியோவில் ''ஏரிக்குள் மிதந்து செல்வதுபோல் இருக்கிறது'' என்று ரேஸைப் பற்றி கமெண்ட் அடித்தார் ஜென்சன் பட்டன். பேய் மழை கொட்ட, ஒன்பதாவது லேப்பின்போது ரேஸ் நிறுத்தப்பட்டது.

50 நிமிட இடைவெளிக்குப் பிறகு ரேஸ் ஆரம்பமாக, களேபரமானது ரேஸ் ட்ராக். இரண்டாம் இடத்தில் இருந்த ஜென்சன் பட்டன், நிக்கோ ரோஸ்பெர்க் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட, சாபர் அணியின் செர்ஜியோ பெரஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். இந்த நேரத்தில் டயரில் சில பிரச்சனைகளை சரி செய்ய ஃபெர்னாண்டோ அலான்சோ, லூயிஸ் ஹாமில்ட்டன் இருவரும் ஒரே நேரத்துக்குள் பிட் ஸ்டாப்புக்குள் நுழைந்தனர். லூயிஸ் ஹாமில்ட்டன் காரைச் சரி செய்ய மெக்கானிக்குகள் சற்றே அதிக நேரம் நேரம் எடுத்துக் கொள்ள, முதலிடத்துக்கு முந்தினார் அலான்சோ! இதற்கிடையே ஜென்சன் பட்டனின் கார், நரேன் கார்த்திகேயனின் காரின் பின் பகுதியில் மோத, பட்டன் காரின் முன் பக்கம் உடைந்தது. இதனால் மீண்டும் காரைச் சரி செய்ய பிட் லேனுக்குள் நுழைந்ததால், பட்டன் 19வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அலான்சோ முதலிடத்திலும், ரோமன் க்ரூஸின் இரண்டாம் இடத்திலும் பறக்க, ஹாமில்ட்டன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே நான்காவது இடத்துக்கு செபாஸ்ட்டியன் வெட்டல், கிமி ராய்க்கோனன், நிக்கோ ரோஸ்பெர்க் மூவரும் மோதிக் கொண்டிருந்தனர். இந்த மோதலில் வெட்டல் வெற்றி பெற்று நான்காம் இடத்தைப் பிடித்தார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

ரேஸ் முடிய ஆறு லேப்புகளே இருந்த நிலையில், ஹாமில்ட்டனை வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தார் வெட்டல். இந்த நேரத்தில் ஒரு லேப் பின்னால் வந்துகொண்டிருந்த நரேன் கார்த்திகேயனின் கார், வெட்டலின் கார் மீது மோத, ரெட்புல் கார் டயர் பஞ்சரானது. மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நடப்பு சாம்பியன் வெட்டலுக்கு இச்சம்பவம் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. வெட்டலின் காருக்குக் குறுக்கே வந்ததால், நரேன் கார்த்திகேயனுக்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது. வெட்டல் பின்னுக்குத் தள்ளப்பட்டதால், நிம்மதியானார் ஹாமில்ட்டன்.
ஆனால், இறுதிவரை ஹாமில்ட்டனால் அலான்சோ மற்றும் ரோமன் க்ரூஸின் ஆகியோரை முந்த முடியவில்லை. இந்த ஆண்டுக்கான முதல் வெற்றியை ஃபெராரிக்குப் பெற்றுத் தந்தார் ஃபெர்னாண்டோ அலான்சோ. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டாம் இடம் பிடித்தார் சாபர் அணியின் செர்ஜியோ பெரஸ். ஹாமில்ட்டன் மூன்றாம் இடம் பிடித்தார்.

நரேன் கார்த்திகேயனால் மூன்றாவது இடத்தை நழுவவிட்ட செபாஸ்ட்டியன் வெட்டல், ''சாலைகளில் சில முட்டாள்கள் குறுக்கே வருவதுபோல் வந்துவிட்டார்'' எனத் திட்டித் தீர்த்தார். நரேன் கார்த்திகேயனும், ''ரேஸில் இதெல்லாம் சகஜம். வெட்டல் சின்னக் குழந்தைப்போல அழக்கூடாது!'' என்று பதிலடி கொடுத்தார்.
ஃபார்முலா-1-சீனா
சீனாவின் ஷாங்காய் நகரில் ஃபார்முலா-1 ரேஸின் மூன்றாவது சுற்று ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு மெக்லாரன், ரெட்புல் அணிகளுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும் மெர்சிடீஸ் அணி, சீனாவில் ஆதிக்கம் செலுத்தியது. முதல்நாள் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதலிடத்தில் இருந்தும், மைக்கேல் ஷூமேக்கர் இரண்டாவது இடத்தில் இருந்தும் துவக்கத் தகுதி பெற்றார்கள். சாபர் அணியின் கமாய் கொபயாஷ் மூன்றாவது இடத்தில் இருந்தும், லோட்டஸ் ரெனோ அணி வீரரும், முன்னாள் சாம்பியனுமான கிமி ராய்க்கோனன் நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஜென்சன் பட்டன் ஐந்து, லூயிஸ் ஹாமில்ட்டன் ஏழு, செபாஸ்ட்டியன் வெட்டல் 11 என முன்னாள் சாம்பியன்கள் அனைவரும் முன்னிலையில் இருந்ததால், சீன ரேஸுக்கு எக்ஸ்ட்ரா டென்ஷன் கூடியது.

சீன நேரப்படி சரியாக காலை எட்டு மணிக்கு ரேஸ் துவங்கியது. ரேஸ் துவங்கியதுமே நிக்கோ ரோஸ்பெர்க்கின் வேகம் அதிரடியாக இருந்தது. துப்பாக்கியில் இருந்து சீறும் தோட்டா போல சீறிப் பறந்தார் ரோஸ்பெர்க். முதல் வளைவிலேயே ஜென்சன் பட்டன் இரண்டாம் இடத்துக்கு முன்னேற, கிமி ராய்க்கோனன் மூன்றாம் இடம் பிடிக்க, கமாய் கொபயாஷ் ஏழாம் இடத்துக்கும், 11-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய வெட்டல் 15-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

நிக்கோ ரோஸ்பெர்க் 4 விநாடிகள் லீட் எடுத்து முதலிடத்தில் பறந்துவிட, பத்தாவது லேப்பின்போது ஜென்சன் பட்டனுக்கும், கிமி ராய்க்கோனனுக்கும் இடையே இரண்டாம் இடத்துக்கான யுத்தம் திவீரமானது. இரண்டு முன்னாள் சாம்பியன்களும் மோதிக் கொள்வதைப் பார்த்து ரசிகர்கள் த்ரில் ஆனார்கள். இதற்கிடையே இரண்டாம் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மைக்கேல் ஷூமேக்கர், 13வது லேப்பின் முடிவில் டயரை மாற்ற பிட்டுக்குள் நுழைந்தார். முன் பக்க டயர் சரியாகப் பொருத்துவதற்குள்ளாகவே காருக்கு முன்னால் இருந்த மெக்கானிக், மைக்கேல் ஷூமேக்கருக்கு 'புறப்படலாம்’ என சைகை காட்ட, பிட்டை விட்டு வெளியேறினார் ஷூமேக்கர். டயர் ஒழுங்காகப் பொருத்தப்படாததால், அப்போதே ஷூமேக்கரின் ரேஸ் முடிந்து விட்டது.

இந்த ஆண்டில் இருந்து அதிகாரப்பூர்வமாகவே வீரர்களுக்கு அணி நிர்வாகம் கட்டளைகள் பிறப்பிக்கலாம் என்பதால், 30-வது லேப்பின்போது முன்னால் சென்றுகொண்டிருந்த மாஸாவை அலான்சோவுக்காக வழிவிடச் சொன்னது ஃபெராரி நிர்வாகம். இதற்கிடையே 15-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட செபாஸ்ட்டியன் வெட்டல், விறுவிறுவென முன்னேறி மூன்றாம் இடத்துக்கு வந்தார். ரேஸ் முடிய ஆறு லேப்புகளே இருந்த நிலையில் இரண்டாம் இடத்துக்கான போட்டா போட்டி அதிகமானது. செபாஸ்ட்டியன் வெட்டல், ஜென்சன் பட்டன், லூயிஸ் ஹாமில்ட்டன் மூவருமே இரண்டாம் இடம் பிடிக்க மோதினார்கள். போட்டியில் பட்டன் வெற்றி பெற்றார்.
2006-ம் ஆண்டு முதல் ஃபார்முலா-1 ரேஸில் பங்கேற்று வரும் நிக்கோ ரோஸ்பெர்க்கின் 111-வது ரேஸ் இது. முதல்முறையாக இந்த ரேஸில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார். 20.6 விநாடிகள் பின்தங்கி இரண்டாம் இடம் பிடித்தார் மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன். மெக்லாரன் அணியின் மற்றொரு வீரர் லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாம் இடம் பிடித்தார்.
26 வயதான நிக்கோ ரோஸ்பெர்க் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். நிக்கோ ரோஸ்பெர்க்கின் தந்தை கிக்கி ரோஸ்பெர்க் 1982-ம் ஆண்டு ஃபார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் ஃபார்முலா-1 போட்டிகளின் நான்காவது சுற்று ஏப்ரல் 22-ஆம் தேதி பஹ்ரைனில் நடந்து முடிந்திருக்கும்!
-சார்லஸ்