பிரீமியம் ஸ்டோரி
 ##~##

''ஜீப் இல்லாத வாழ்க்கையை என்னால ஜீரணிக்கவே முடியாது தோழா! என் பயணங்கள் என்றென்றும் ஜீப்போடுதான்!'' - இரண்டே வாக்கியங்களில் ஜீப் மீதான தனது காதலைப் பளிச்செனப் பகிர்கிறார் அசோக். 

அசோக்கின் கலெக்ஷனில் 1942 மாடல் லோ - பானெட் வில்லீஸ், 1997 எம்எம்-540, 1998 ஜிப்ஸி கிங் மற்றும் 2012 பொலேரோ ஆகிய நான்கு ஜீப்புகள் உள்ளன.

நாகர்கோவில் சைமண்ட் நகரிலிருக்கும் அசோக்கைச் சந்தித்தபோது, தனது கலெக்ஷனை கம்பீரமாகச் சுற்றிக் காண்பித்தவர், ''கார்கள் மீதான காதல்ங்கிறது எங்க குடும்ப பாரம்பரியம்னே சொல்லலாம். எங்க தாத்தா மோரீஸ் மைனர் வெச்சிருந்தார். புல்லட் மேலேயும் அவருக்கு அலாதி பிரியம். அப்பாவும் அவருக்குத் தப்பாமதான் இருந்தார். அவரோட கலெக்ஷன்ல மாஸ்டர் பீஸா ஒரு ஃபியட் காரைச் சொல்லலாம். நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து வாங்குன கார் அது. ஸ்போர்ட்ஸ் டைப் இன்ஜின், அலாய் வீல்ஸ், டியூப்லெஸ் டயர்கள்னு அசத்தலா அதை ரெடி பண்ணி வெச்சிருந்தார் கமல். அப்போவே மூணு லட்சம் ரூபாய் கொடுத்து அப்பா அந்த காரை வாங்கினார். நானும் அப்பாவுக்குக் கொஞ்சமும் சளைக்காதவன். ஆனா, ஜீப்களுக்குப் பின்னாடி ஓட ஆரம்பிச்சதுதான் வித்தியாசம். 'ஜீப், ரஃப் அண்டு டஃப்பான... ஒரு மேன்லியான வாகனம்’ அப்படின்னு பொதுவா சொல்லுவாங்க. அது மட்டுமில்லைங்க, கார்கள்ல இல்லாத கிளாமர், ஜீப்புல இருக்குதுன்னுதான் நான் சொல்லுவேன்.

ஜீப் கலெக்ஷன்

என் கையில மொத்தம் பதினோறு ஜீப்புங்க இருந்துச்சு. அவற்றைப் பராமரிக்க முடியாமல் பல

ஜீப் கலெக்ஷன்

ஜீப்புகளை நண்பர்களிடம் கொடுத்து விட்டேன். இப்போதைக்கு கையில எஞ்சியிருக்கிறது நாலுதான். 1942 லோ-பானெட் வில்லீஸ்தான் நான் வாங்கின முதல் ஜீப். கோயம்புத்தூர்ல இருந்து ஒருத்தர்கிட்ட வாங்கினேன். கோடாரி, ஷாவல், மேப் ரீடர், புல்லட் பாக்ஸ், கன் ட்ரே அப்படின்னு மிரட்டலா இருக்கிற இந்த லோ - பானெட்டை, ஹை டென்ஷனான மனநிலையில பார்த்தாக்கூட செம கூல் ஆகிடுவோம். ஒரு த்ரீ ஃபோர்த், சிம்பிள் டி ஷர்ட்-ன்னு கேஷூவல் டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு, இந்த ஜீப்ல ஏறி உட்கார்ந்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம்னா வாழ்க்கை எவ்ளோ சந்தோஷமானதுங்கிறதை அனுபவப்பூர்வமா உணரலாம்.

1997 மஹிந்திராவை நாகர்கோவில்ல ஏலத்துல எடுத்தேன். பலூன் டயர்ஸ், பவர் ஸ்டீயரிங் அப்படின்னு ஹெல்தியா இருக்கும். 1998 ஜிப்ஸி என்னோட அடுத்த ஃபேவரைட். பக்கா ஒரிஜினலான இதுல ஒரு சின்ன ஸ்க்ராட்சைக் கண்டு பிடிச்சுச் சொல்லிடுங்க பார்ப்போம்? அழகுல மட்டுமில்லைங்க, பர்ஃபாமென்ஸிலும் இது செம பக்கா. லிட்டருக்கு 12 கிமீ கொடுத்து என்னோட பர்ஸுக்குப் பங்கம் வராமப் பார்த்துக்குது.

ஜீப் கலெக்ஷன்

ஜீப்பை எடுத்துட்டா எந்த வெயில், மழைன்னும் பார்க்காம டெரர்ரா திரியுற ஆள் நான். ஆனா, ஃபேமிலி ஆளுங்களைக் கூட்டிட்டு பக்குவமா போயிட்டு வர்றதுக்கு ஒரு வாகனம் வேணுமே?  அதுக்குத்தான் ஒரு பொலேரோவை வாங்கியிருக்கேன். ஆனா, இதுலேயும் சில வேலைகள் பார்த்துதான் வெச்சிருக்கேன். 4 வீல் டிரைவ்வான இதுல விஞ்ச் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். ஜாக்கி வசதி, அலாய் வீல்ஸ், பலூன் டயர்ஸ் அப்படின்னு சிங்கம் மாதிரி இருக்கிற வண்டி இது. கோத்தகிரி, கல்லட்டி அப்படின்னு அடிக்கடி மலைப் பாதையில சவாரி அடிக்கிகிற ஆள் நான். அதுக்கு இது செம கம்பெனி கொடுக்கும்.

ரீ-டிஸைன் பண்றப்பவும், ஒரிஜினல் பார்ட்ஸ் வாங்கி மாட்டவும் நான் பெருசும் நம்பி இருக்கிறது கோவையைத்தான். கோவையில கிடைக்காததை இணையத்துல தேடி மலேசியா, ஹாங்காங்-ல இருந்து வாங்கிக்குறேன்'' என்பவரிடம் ''உங்களோட ஹாட் கலெக்ஷன்ல சேர்க்க விருப்பப்படுற ட்ரீம் வாகனம் எது?'' என்று அவரது மொழியிலேயே கேட்டபோது, ''ராங்லர் ஜீப்தான் என் கனவு! அதை வாங்கி இங்கே வளைச்சு வளைச்சு ஓட்டணும்'' என்கிறார்.

ஓட்டுங்க ஓட்டுங்க!

 எஸ்.ஷக்தி  ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு