Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக் - கோவை

ஸாப்பர் டிசைனர்!

நம்ம ஊரு மெக்கானிக் - கோவை

ஸாப்பர் டிசைனர்!

Published:Updated:
 ##~##

''சாலையையும், சட்டத்தையும் உறுத்தாத வகையில பண்றதுதானுங்ணா ரீ-டிசைனிங். என்ர பணம், என்ர இஷ்டம்னு சொல்லிப் போட்டு பைக்ல ரீ-டிசைனிங்ல கோக்கு மாக்குத்தனம் பண்றதையெல்லாம் வரவேற்க முடியாது!'' - அழுத்தமான கருத்துக்கள் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார் பைக் ரீ-டிசைனிங் மெக்கானிக் கண்ணன்.

 கோவை வடவள்ளி அருகே முல்லை நகர் பகுதியிலிருக்கிறது 'இண்டியன் பைக் ஸாப்பர்ஸ்’ டூவீலர் மெக்கானிக் ஷெட். இதன் உரிமையாளரான கண்ணன், கவனிக்கத்தக்க ரீ-டிசைனர். பழைய சந்தையில் ஒரு புல்லட்டை வாங்கி இவர் கையில் ஒப்படைத்தால், சில வாரங்களில் அதை ஹார்லி டேவிட்சனாக்கித் திருப்பித் தருகிறார்! புல்லட்டை ரீ-டிசைன் செய்ய விரும்புவோரின் ரைட் சாய்ஸாகி இருக்கும் கண்ணனை சமீபத்திய பிற்பகல் ஒன்றில் சந்தித்தேன்.

நம்ம ஊரு மெக்கானிக் - கோவை

கைகளில் ஒட்டியிருந்த கிரீஸைத் துடைத்தபடி பேச ஆரம்பித்தவர், ''பதினஞ்சு வருஷமா இந்த

நம்ம ஊரு மெக்கானிக் - கோவை

மெக்கானிக் ஃபீல்டுல இருக்கேனுங்ணா. எட்டாங்கிளாஸ் படிச்சுட்டு இதே கோயமுத்தூர் பட்டேல் ரோடுல உள்ள 'சீனிவாசா வெல்டிங் ஒர்க்ஸ்’ல வேலைக்குச் சேர்ந்தேன். எனக்குத் தொழில் கத்துக் கொடுத்த குரு நாராயணசாமி அய்யாதானுங்க. அடிப்படை வேலைகளைக் கத்துக்கிற பொடியனா வெல்டிங் ராடுகளை எடுத்துக் கொடுக்குறதுல ஆரம்பிச்சு, இன்ஜினைப் பிரிச்சுப் போட்டு வேலை பார்க்கிறது வரை 'புதுமையா ஏதாச்சும் பண்ணோணும்’ அப்படிங்கிற வெறி, என்ர மனசுக்குள்ளே அப்போவே ஊறிட்டே இருந்துச்சு.

எட்டு வருஷத்துக்கு முன்னாடி தனியா ஷெட் போட்டேனுங்க. ரெகுலரான பிரச்னைகளோட வண்டிங்க வர ஆரம்பிச்சப்பதான் 'நாம ஏன் ரீ-டிசைனிங்லேயே அதிகமா கவனம் வைக்கக் கூடாது?’ அப்படின்னு யோசிச்சேன். பரிசோதனை முயற்சியா முதல்ல ஒரு ராயல் என்ஃபீல்டை எடுத்து ஹார்லி டேவிட்சனாக்கிப் பார்த்தேன். நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமா அமைஞ்சதுங்க. என்னை நம்பி வண்டியைக் கொடுத்த அந்த கஸ்டமரும் அதிசயிச்சுப் போனாருங்க. அப்புறமா தொடர்ந்து புல்லட்டுங்க நம்ம கடையைப் பார்த்து படையெடுக்க ஆரம்பிச்சுதுங்ணா! புல்லட்டை ரீ-டிசைன் பண்றதுல எக்ஸ்பர்ட் ஆகிப்போனது இப்படித்தானுங்க!

ஒரே மாதிரியான ரீ-டிசைனிங் வேலைகளைப் பார்த்துட்டே இருக்கிறதுல எனக்கும் போரடிக்கும்... அதே மாதிரி கஸ்டமர்களும் புதுசு புதுசா டிசைன் பண்ண விரும்புறாங்க. அதனால, ஒவ்வொரு வண்டியிலேயும் ஒர்க் பண்றப்ப புது முயற்சிகளைப் பரிசோதனையா பண்ணிப் பார்ப்பேனுங்க. அது போக கஸ்டமர்களும் நெட்ல தேடி புது மாடல்களைக் கண்டுபிடிச்சு பிரின்ட் அவுட் எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. அதை வெச்சே டிசைனிங் வேலையைப் பண்ணுவேன். ராயல் என்ஃபீல்டு மட்டுமில்லாம பல்ஸர், அப்பாச்சி, அவென்ஜர்-னு ஆரம்பிச்சு ஸ்கூட்டி பெப், ஆக்டிவா வரைக்கும் உருமாற்றத்துக்காக இங்கே கொண்டு வந்து நிறுத்துறாங்க!

நம்ம ஊரு மெக்கானிக் - கோவை

தன்னோட விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான பார்ட்ஸ் இந்தியாவுல கிடைக்கலேன்னா வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி பண்ணக் கூட கோயமுத்தூர்காரங்க தயங்குறதில்லீங்க. டயர், ரிம் மாதிரியான விஷயங்களை அமெரிக்காவுல இருந்து இறக்குமதி பண்றாங்க. சைனா, ஜெர்மன் பக்கமிருந்தும்கூட சில பார்ட்ஸ்ங்களை ஃப்ளைட்ல தூக்கிட்டு வந்துடுறாங்க.

ரீ-டிசைனிங்ல பல வகைகள் இருக்குது. சிம்பிளா மட்கார்டு, பெட்ரோல் டேங்க், டயர் இந்த மாதிரியான விஷயங்களை மாத்திக்கலாம். அதே நேரத்துல ரெண்டரை லட்சம் வரைக்கும்கூட ரீ-டிசைனிங் பண்ணிக்க வாய்ப்பிருக்கு. நான் இந்த எல்லைக்கும் போயிருக்கேனுங்க, அந்த எல்லையையும் தொட்டிருக்கேனுங்க. இது போக, அப்பப்போ சூப்பர் பைக்குகளும் நம்ம ஷெட்டை தொட்டுப் பார்க்கும். எந்த வண்டியா இருந்தா என்னங்க, தொழிலை நேர்த்தியா பண்ணிக் கொடுத்தா, அதுதானுங்க பரம திருப்தி!'' என்று ஆத்மார்த்தமடைகிறார்.

அதெல்லாம் சரி, இந்த கட்டுரையோட லீடுல சொன்ன விஷயம் பற்றி கண்ணன் பேசவே இல்லையே?! யெஸ்... அதை கண்ணனிடமே கேட்டபோது, ''ஒரு பைக்கை ஓட்டுறவர் வாகனப் போக்குவரத்து சட்டத்துக்குட்பட்டு ஆர்.சி.புக், லைசென்ஸ் மாதிரியான விஷயங்களை எப்படி கண்டிப்பா வெச்சிருக்கணுமோ, அதே மாதிரி ரீ-டிசைனிங் விஷயத்துலேயும் சட்டம் சொல்றதை மதிச்சாகோணும். சிலர் வண்டி கலரை மாத்திட்டு அதை ஆர்.சி புக்ல திருத்தாம திரியுறாங்க. இது மகா தவறு! அதே மாதிரி சிலர் ரீ-டிசைண் பண்றேன் பேர்வழின்னு சொல்லிட்டு, வண்டியோட சைஸையும் பெருசாக்கச் சொல்லுவாங்க. அவங்களுக்கு கோடி கும்பிடு போட்டுத் திருப்பி அனுப்பிடுவேன். ஏன்னா! தனி மனுஷ சந்தோஷத்தைவிட சட்டம் முக்கியமுங்ணா.'' என்றார் படு பொறுப்பாக.

அசத்தல் பஞ்ச் இல்ல!

எஸ்.ஷக்தி, தி.விகய்