தொழில்நுட்பம்
Published:Updated:

டுகாட்டியுடன் மோதும் ராஸி!

டுகாட்டியுடன் மோதும் ராஸி!

டுகாட்டியுடன் மோதும் ராஸி!
 ##~##

புதிய 1000 சிசி இன்ஜின், அதிக சக்தி வாய்ந்த பைக்குகள், புதிய ரேஸர்கள் என ஆல் நியூ மோட்டோ ஜீபி ரேஸைக் காணக் காத்திருந்தது கத்தார். 2012-ம் ஆண்டின் முதல் ரேஸான கத்தார் மோட்டோ ஜீபி, ஏப்ரல் 8-ம் தேதி இரவு ரேஸாக நடைபெற்றது.

 கடந்த ஆண்டுவரை 800 சிசி இன்ஜினுடன் இருந்த மோட்டோ ஜீபி பைக்குகள், இந்த ஆண்டு 1000 சிசி திறன் கொண்ட பவர்ஃபுல் பைக்குகளாக மாறியிருக்கின்றன. இந்த ஆண்டு ரேஸ் துவங்குவதற்கு முன்பாக நடைபெற்ற 'ப்ரீ-சீஸன் டெஸ்ட் ரேஸ்’ போட்டிகளில் மிகவும் வேகமாக இருந்தது கேஸி ஸ்டோனரின் ஹோண்டா. ஆனால், இந்த வேகம், முதல் சில லேப்புகளுக்கு மட்டுமே நீடித்தது. மாறாக, யமஹாவின் வேகம் எந்தக் குறையும் இல்லாமல் பல லேப்புகளுக்கு நீடித்ததால், இந்த ஆண்டு யமஹாதான் முதலிடம் பிடிக்கும் என்கிற கணிப்புகள் முளைத்தன. ஆனால், கத்தார் ரேஸில் ஏற்கெனவே மூன்று முறை கேஸி ஸ்டோனர் வெற்றி பெற்றிருப்பதால், இந்த முறையும் அவர்தான் வெற்றிக் கொடி நாட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் கத்தாரில் குவிந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள்.

இந்த ஆண்டு ஹோண்டா, யமஹா, டுகாட்டி என ஃபேக்டரி அணிகள் சார்பில் 12 ரேஸ் வீரர்களும், தனியார் அணிகளின் சார்பில் 9 ரேஸ் வீரர்களும் கலந்து கொண்டனர். தனியார் அணிகள் என்பது டுகாட்டியின் இன்ஜின், யமஹாவின் சேஸி என கலந்து கட்டி ரேஸுக்கெனத் தயாரிக்கப்படும் பைக்குகள். அதனால், ஃபேக்டரி அணிகள் எப்போதுமே தனியார் அணிகளிடம் தோற்பதை மானக்கேடாக நினைக்கும். இந்த முறை அதிக அளவில் 9 தனியார் ரேஸ் வீரர்கள் ரேஸில் பங்கேற்பதால், அவர்களிடம் தோற்று விடக் கூடாது என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள் ஃபேக்டரி வீரர்கள்.

டுகாட்டியுடன் மோதும் ராஸி!

மோட்டோ ஜீபி கத்தார் (08-04-2012)

ரேஸ் வல்லுநர்கள் கணித்தது போலவே, அசத்தல் வேகம் காட்டி தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ. ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர் இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹாவின் கால் க்ரட்ச்லோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். தனியார் அணிகளுக்கு முன்பாக, கடைசி ஃபேக்டரி பைக்காக 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் டுகாட்டியின் வாலன்டினோ ராஸி. இவருக்கும் அவின்ட்டியா ப்ளூசன்ஸ் எனும் தனியார் அணி வீரர் யானி ஹெர்னாண்டஸுக்கும் இருந்த வேக இடைவெளி வெறும் 0.8 விநாடிதான்.

டுகாட்டியுடன் மோதும் ராஸி!

ரேஸ் துவங்கியதுமே லாரன்சோவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது ஹோண்டாவின் ஸ்டோனர், டேனி பெட்ரோஸா கூட்டணி. இதற்கிடையே 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினாலும் விறுவிறுவென ஆறாவது இடத்துக்கு முன்னேறினார் டுகாட்டியின் வாலன்டினோ ராஸி. ஆனால், சில லேப்புகளுக்குப் பிறகு ராஸியின் பைக் வேகம் குறைந்தது. பின்னால் வருபவர்களுக்கு எல்லாம் வழி விடுவதுபோல ரேஸ் ஓட்டினார் ராஸி.

டுகாட்டியுடன் மோதும் ராஸி!

இதற்கிடையே கேஸி ஸ்டோனர் மற்றும் பெட்ரோஸாவின் ஹோண்டா பைக்குகளைத் துரத்திக் கொண்டிருந்தார் யமஹாவின் லாரன்சோ. எதிர்பார்த்தது போலவே, ஆரம்பத்தில் வேகமாக இருந்த ஹோண்டா பைக்குகள் ரேஸின் இறுதிக் கட்டத்தில் சக்தியை இழந்தன.

ரேஸ் முடிய மூன்று லேப்புகளே இருந்த நிலையில் ஸ்டோனர் மற்றும் பெட்ரோஸாவை முந்தினார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ.

மொத்தம் 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸில், முதலிடம் பிடித்து வெற்றிக் கோட்டைத் தொட்டார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ. ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தையும், கேஸி ஸ்டோனர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ராஸியின் டுகாட்டி பைக், மூன்று தனியார் பைக்குகளுக்கு வழிவிட்டு 10-வது இடத்தில் ரேஸை முடித்தது.

ரேஸுக்குப் பின்னர் தனது டுகாட்டி பைக்கைத் திட்டித் தீர்த்துவிட்டார் வாலன்டினோ ராஸி. ''என்னால் இந்த பைக்கை ஓட்ட முடியவில்லை. பைக்கில் பவர் இல்லை. இறுதிவரை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இந்த டுகாட்டி வரவில்லை. எல்லா டுகாட்டி பைக்குகளிலுமே இந்தப் பிரச்னை இருக்கிறது'' என்று டுகாட்டியை வசைமாரிப் பொழிந்தார் ராஸி.

வாலன்டினோ ராஸியின் வெளிப்படையான பேட்டி டுகாட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. முதல் ரேஸிலேயே டுகாட்டிக்கும், ராஸிக்கும் இடையே பிரச்னை வெடித்திருப்பதால், ராஸி தொடர்ந்து டுகாட்டியில் இருப்பாரா என்பதும் சந்தேகத்துக்கு உள்ளாகி யிருக்கிறது.

இந்த ஆண்டும் ஹோண்டா - யமஹா பைக்குகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது முதல் ரேஸின் முடிவு!

-சுரேன்