Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

கனகசுந்தரம், தஞ்சாவூர்.

மோட்டார் விகடனில், ஹோண்டா ஏவியேட்டர் பற்றிப் படித்த பிறகுதான் அந்த ஸ்கூட்டரை வாங்கினேன். மோ.வி-யில், 'ஏவியேட்டர் லிட்டருக்கு 43.9 கி.மீ மைலேஜ் தரும்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் ஏவியேட்டரை வாங்கி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதுவரை 1000 கி.மீ ஓட்டியிருக்கிறேன். ஆனால், என்னுடைய ஸ்கூட்டர் லிட்டருக்கு வெறும் 28 - 30 கி.மீ-தான் மைலேஜ் தருகிறது. மைலேஜ் என்பது ஸ்கூட்டருக்கு ஸ்கூட்டர் மாறுமா? அப்படி மாறினாலும் இந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குமா? மைலேஜ் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

மோட்டார் கிளினிக்

மோட்டார் விகடனில் ஒரு வாகனத்தின் மைலேஜைக் குறிப்பிடும் போது, அதை தரமான சாலை, கரடுமுரடான மோசமான சாலை என இருவிதமான சாலைகளிலும், அடிக்கடி பிரேக் பிடித்து, கிளட்சை அழுத்தி கடுமையாக சோதனை செய்த பிறகே, வாகனத்தின் மைலேஜைக் குறிப்பிடுகிறோம். வெறுமனே தரமான சாலையில், பிரேக்கையே பிடிக்காமல் ஓட்டி விட்டு மைலேஜைக் குறிப்பிடுவது இல்லை. அதனால்தான் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லும் மைலேஜைவிட மோட்டார் விகடனில் குறிப்பிடப்படும் மைலேஜ் எப்போதுமே குறைவாக இருக்கும். உங்கள் ஏவியேட்டரைப் பொறுத்தவரை லிட்டருக்கு 28-30 கி.மீ மைலேஜ் என்பது உண்மையிலேயே மிக மிகக் குறைவான மைலேஜ். ஒரு வாகனத்தை ஓட்டும் ஸ்டைலைப் பொருத்தும் மைலேஜ் மாறுபடும். ஆனால், இந்த அளவுக்கு வேறுபாடு இருக்காது. அதனால், ஹோண்டா சர்வீஸ் மேனஜரிடம் உங்கள் புகாரைச் சொல்லி இன்ஜினை முழுவதுமாக சோதிக்கச் சொல்லுங்கள். அதேபோல், நீங்களும் ஒரே பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்பி வந்தால், பெட்ரோல் பங்க்கை மாற்றிப் பாருங்கள். சில நேரங்களில் பெட்ரோல் பங்க்குகளில் மோசடி நடக்கலாம். உங்கள் வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடப்படுகிறதா என்பதையும் கவனியுங்கள். வெயிலில் பல மணிநேரம் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்தாலும் பெட்ரோல் குறையும். பிரேக்குகள் மிகவும் டைட்டாக இருக்கிறதா என்று பாருங்கள். வாரத்துக்கு ஒரு முறையாவது இரண்டு டயர்களிலும் சரியான அளவு காற்றை நிரப்புங்கள்!

ராஜேஷ்குமார், திருப்பூர்.

மோட்டார் கிளினிக்

நான் பஜாஜ் பல்ஸர் 180 பைக் வைத்திருக்கிறேன். சர்வீஸுக்கு விடும்போது, பஜாஜ் சர்வீஸ் சென்டரில் என்ன ஆயில் நிரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. பர்ஃபாமென்ஸ் சுமாராகத்தான் இருக்கிறது. எனக்கு, இன்ஜின் ஆயில் சரியாக இல்லாததால்தான் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை என்ற எண்ணம் தோன்றுகிறது. அதனால் கேஸ்ட்ரால், ஷெல் போன்ற சர்வதேச கம்பெனி ஆயில்களை நிரப்பலாமா? இந்த ஆயில்களை நிரப்புவதால் எதாவது பிரச்னை வருமா?

பல்ஸர் 180 பைக்கில் SAE 20W50 API SG with JASO MA  கிரேடு அல்லது சுப்பீரியர் அளவுகோல் கொண்ட ஆயிலை நிரப்புவது இன்ஜினுக்கு நல்லது என்கிறது பஜாஜ். இந்த அளவுகோலுடன் ஷெல், மொபில், கல்ஃப் ஆயில் என எந்த நிறுவனத்தின் ஆயிலையும் நீங்கள் உபயோகப் படுத்தலாம். வெவ்வேறு கம்பெனி இன்ஜின் ஆயில்களை மாற்றி மாற்றிப் போடுவதால் இன்ஜினுக்கு எதுவும் ஆகாது. ஆனால், குறிப்பிட்ட இன்ஜினுக்கு என்று குறிக்கப் பட்டுள்ள அளவுகோல் கொண்ட ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

ஜான்சன், ராஜபாளையம்.

புதிதாக பைக் வாங்கலாமெனத் திட்டமிட்டிருக்கிறேன். வாங்கும் பைக் 80,000 கி.மீ வரை அதாவது, குறைந்தது 5-6 ஆண்டுகளுக்காவது எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்க வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

நீடித்து உழைக்கக்கூடிய தரமான பைக் ஹோண்டா யூனிகார்ன். முறையாக சர்வீஸ் செய்து, பைக்கை ஒழுங்காகப் பராமரித்து வந்தால், எந்தப் பிரச்னையும் நெருங்காது!

முகமதுகான், திருச்சி.

மோட்டார் கிளினிக்

நான் துபாயில் இருக்கிறேன். சென்னையில் இருக்கும் என் மனைவிக்காக ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும். என்னுடைய பட்ஜெட் 6-7 லட்சம். என் மனைவிக்கு கார் ஓட்டத் தெரியாது. பின்னால் உட்கார்ந்துதான் பயணிப்பார். அதனால், பின் இருக்கைகள் தாராள இடவசதியுடன் இருக்க வேண்டும். ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஸ்கோடா ஃபேபியா ஆகியவற்றில் எந்த காரை வாங்கலாம்?

உங்கள் லிஸ்ட்டில் முக்கியமான காரை விட்டுவிட்டீர்களே! ஹேட்ச்பேக் கார்களிலேயே, பின் பக்க இருக்கைகளில் தாராள இடவசதி கொண்ட கார் ஹோண்டா ஜாஸ்தான். காருக்கு உள்ளே போவதும், வெளியே வருவதும் செம ஈஸி. காருக்குள் பொருட்கள் வைத்துக் கொள்ளவும் அதிக இடவசதி உண்டு. ஆனால் போலோ, ஃபேபியா போன்று பில்டு குவாலிட்டியில் சிறந்த காராக ஜாஸ் இருக்காது. அதிக மைலேஜ், பிரச்னை இல்லாத 'ட்ரபிள் ஃப்ரீ ஓனர்ஷிப்’புக்கு ஹோண்டா கியாரன்டி!

சுரேஷ், மதுரை

யூஸ்டு கார் மார்க்கெட்டில், 8-10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் டொயோட்டா இனோவா வாங்குவது என் திட்டம். ஆனால், மோட்டார் விகடனில் இந்த ஆண்டு ஏகப்பட்ட எம்யூவி கார்கள் விற்பனைக்கு வருவதாகப் படித்தேன். டொயோட்டா இனோவா வாங்கலாமா? அல்லது வரப் போகும் புதிய கார்களுக்காகக் காத்திருக்கலாமா? புதிதாக வரப் போகும் கார்கள் இனோவாவை விட சிறந்ததாக இருக்குமா?

டொயோட்டா இனோவா கொஞ்சம் பெரிய கார். சென்னை நகர நெருக்கடிக்குள் இந்த காரை எந்த இடிசல் - ஒடிசல் இல்லாமல் ஓட்ட, அதிக சிரத்தை எடுக்க வேண்டும். இனோவாவைப் புதிதாக வாங்கினால் ஓகே. ஆனால், பழைய கார் மார்க்கெட்டில்தான் வாங்கப் போகிறீர்கள் என்றால், ப்ளீஸ் வெயிட். புதிதாக அறிமுகமாகும் எம்பிவி கார்களில் சிறந்த காரைத் தேர்ந்தெடுத்து வாங்குவதே நல்லது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் மாருதி எர்டிகா காம்பேக்ட் எம்யூவி. அதாவது, நகருக்குள்ளும் இதை ஓட்ட முடியும். உங்கள் பட்ஜெட்டுக்குள் இதை வாங்க முடியும். அதேபோல் ரெனோ டஸ்ட்டர், செவர்லே என்ஜாய், நிஸான் எவாலியா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் என உலகத் தரமான சிறந்த கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது!

மோட்டார் கிளினிக்

கேசவன், மயிலாடுதுறை.

மிட் சைஸ் பவர்ஃபுல் டீசல் கார் வாங்க வேண்டும். ஆனால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்தான் வாங்க வேண்டும். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் எல்லா கார்களையும் ஓட்டிப் பார்த்து, அலசிப் பார்த்தெல்லாம் வாங்க எனக்கு நேரம் இல்லை. சிறந்த கார் எது என்று பட்டெனச் சொல்லுங்கள். எனக்கு மைலேஜ் அதிகமாகவும், குறைந்த பராமரிப்பு செலவுகள் கொண்ட காராகவும் இருக்க வேண்டும்.

பட்டென சொல்ல வேண்டும் என்றால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற சிறந்த கார் ஹூண்டாய் வெர்னா. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுக்கு ஏற்றபடியான நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்புச் செலவுகள் கொண்ட கார். ஆனால், அதிக வேகத்தில் செல்லும்போது ஓட்டுதல் தரம், ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்காது என்பது வெர்னாவின் குறை!

வாசகர்களே... ஆட்டோமொபைல் தொடர்பான உங்கள் அத்தனை சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே பதில் கிடைக்கும். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

மோட்டார் கிளினிக்

மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை-600 002.