பைக் டாக்டர்!

##~## |
'இட்ஸ் நாட் ஏஜ், இட்ஸ் ஆட்டிட்யூட்!’ - கிருஷ்ணகிரியில் வசிக்கும் டாக்டர் நந்தகுமாரின் சுஸ¨கி பேண்டிட் பைக்கின் நம்பர் பிளேட்டில் இடம் பிடித்திருக்கும் வாசகம் இது. இந்த 1250 சிசி பைக்கை, அனாயாசமாக கிருஷ்ணகிரி சாலைகளில் ஓட்டித் திரியும் டாக்டரை, ஒரு காலை வேளையில் அவரது வீட்டில் சந்தித்தேன்.
''பொதுவா சந்தோஷம், சோகம் ரெண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்குற ஆள் நான். எதுக்குமே பெருசா எக்ஸைட் ஆக மாட்டேன். ஆனா, பேண்டிட் என் வீட்டுக்கு வந்தப்போ என்னையே அறியாம கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன். எப்பவோ பைக் மேகஸின்ல போட்டோ பார்த்துட்டு 'சூப்பர் பைக்’னு சொல்லிக்கிட்டு இருந்தேன். இருந்தாலும் அதோட விலை, உள்ளூர் பராமரிப்பு, பைக்கோட எடை இதையெல்லாம் மனசுல வெச்சு வாங்குற ஆசையைக் கைவிட்டுட்டேன். ஆனா, என் மகன் அதை நினவில் வெச்சு என் பர்த்டே கிஃப்டா பேண்டிட்டைக் கொண்டு வந்து நிறுத்திட்டான். வேன் மூலமா பார்சலில் என் வீட்டு வாசலில் வந்து நிற்கிற வரைக்கும் எனக்கு இந்த விஷயம் தெரியாது. அது எனக்கு ஷாக் கலந்த சந்தோஷம்... மை டியர் ஸ்வீட் பேண்டிட்!'' என்றார் கண்கள் மின்ன!

தன்னிடம் வரும் பைக், இன்னொரு கை மாறுவதற்குள் பலமுறை அதை ரீ-டிசைன் செய்து ஆசை தீர ஓட்டுவது இவரது வழக்கம். அதே நேரம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாகனத்தைப் புத்தம் புதிதாக வைத்திருப்பது இவருடைய ஸ்பெஷல். தூசுகளில் இருந்து பாதுகாக்க வீட்டுக்குள் வந்ததுமே வாகனங்களை கவர் செய்து விட்டுத்தான் வேறு வேலைக்குச் செல்கிறார் டாக்டர். சிம்பிளாகச் சொல்வதானால், இவர் வாகனங்களைத் சுத்தம் செய்ய வைத்திருக்கும் துணிகள்கூட சலவைத் துணிகளைப்போல சுத்தமாக இருக்கின்றன. ஒரு டாக்டரின் அறை முழுக்க மருத்துவம் சார்ந்த புத்தகங்கள்தான் அதிகம் இருக்கும். ஆனால், இவரின் அறையில் மருத்துவ நூல்களுக்கு நிகராக பைக், கார், பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன. அதேபோல், அவர் அறையில் திரும்பிய திசையெல்லாம் கார், பைக் போட்டோக்கள் பளிச்சிடுகின்றன. ஷோ கேஸ், டேபிள் மீதெல்லாம்கூட ஸ்கேல் மாடல் பைக்குகள்!
இதுவரை 12 புல்லட், 6 ஸ்கூட்டர், 2 இந்த்-சுஸ¨கி, 5 இம்போர்டட் பைக், ஹோண்டா, கரீஷ்மா, சிபிஸீ, யமஹா எஃப்.ஸீ, எலிமினேட்டர், ராஜ்தூத்-பாபி, டிவிஎஸ்-50 என இவர் பயன்படுத்திய பைக்குகளின் பட்டியல் நீளம். கார்களில் 1972 மாடல் பீட்டில், 1941 மாடல் மோரீஸ் மைனர், 1969 மாடல் ஹெரால்டு, 1959 மாடல் ஃபியட், மாருதி ஜென், மாருதி-800, ஃபியட் யூனோ, ஹூண்டாய் ஆக்ஸென்ட், டொயோட்டா இனோவா என கார்களின் பட்டியலும் பெரிது. தற்போது 1959 மாடல் ஃபியட், மாருதி-800, இனோவா ஆகிய கார்களை மட்டுமே வைத்திருக்கிறார். பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு, தண்டர்பேர்டு, யமஹா ஆர்.எக்ஸ்-100, ஹோண்டா டியோ ஆகியவற்றில் தலா ஒரு வாகனம் இவர் வீட்டு போர்டிகோவை அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன.
'கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் இரண்டுமுறை மட்டும் அதிக வேகத்தில் ஓட்டிப் பார்த்திருக்கிறேன். அது மணிக்கு 200 கி.மீ வேகம்தான்''’ என்று கூலாகச் சொல்கிறார்!