Published:Updated:

'வாக்கு டோக்கி!'

டொயோட்டா ரேஸிங் டெவலபென்ட்

'வாக்கு டோக்கி!'

டொயோட்டா ரேஸிங் டெவலபென்ட்

Published:Updated:
 ##~##

'கார்களின் இமேஜை உயர்த்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் ரேஸ் உதுவுமா?’ என்று கேட்டால், 'நிச்சயம் உதவும்’ என்று சொல்லும் ஃபோக்ஸ்வாகன். ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆனாலும், 'போலோ கப்’ மூலம் ஃபோக்ஸ்வாகனின் பிராண்ட் இமேஜ் நம் நாட்டில் வெகுவாக உயர்ந்திருக்கிறது என்பதற்கு, போலோ கார்களின் விற்பனையே சாட்சி. இப்போது ஃபோக்ஸ்வாகனைப் பின்பற்றி, 'எட்டியோஸ் மோட்டார் ரேஸிங்’கை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது டொயோட்டா. 

''ரேஸிங் உலகில் டொயோட்டாவுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. டொயோட்டா ரேஸிங் டெவலப்மென்ட் (TRD) வாயிலாக 23 நாடுகளில் நாங்கள் வெற்றிகரமாக இத்தகைய கார் பந்தயங்களை நடத்தி வருகிறோம். இன்னொருபுறம், இந்தியாவில் கார் பிரியர்களிடையே... ஏன் இன்னும் சொல்லப் போனால், அனைத்து தரப்பு மக்களுக்குமே மோட்டார் பந்தயங்கள் மீது ஈர்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதனால், கார் ரேஸிங் பற்றி எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை, இந்தியாவின் வளரும் கார் பந்தய வீரர்களுக்கும் அளிக்கலாம் என்ற முடிவில்தான் எட்டியோஸ் மோட்டார் ரேஸிங்கை இங்கே ஆரம்பித்திருக்கிறோம்'' என்று எடுத்த எடுப்பிலேயே இன்ட்ரோ கொடுத்துப் பேசினார் டொயோட்டாவின் துணை மேலாண் இயக்குனரான சந்தீப் சிங்.

'வாக்கு டோக்கி!'

''இந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் 25 ரேஸ் வீரர்களும் ஒரே மாதிரியான எட்டியோஸ் காரைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். இந்த ரேஸில் கலந்து கொள்ளத் தேர்வாகும் ஒவ்வொரு போட்டியாளரும் கட்டணமாக ஒன்றரை லட்ச ரூபாய் செலுத்திவிட்டால் போதும். ட்யூனிங், லாஜிஸ்டிக்ஸ் என்று அத்தனை விஷயங்களையும் நாங்களே பொறுப்பெடுத்து செய்துவிடுவோம். அதனால், ரேஸர்களுக்கு எந்தத் தலைவலியும் இல்லை'' என்ற சந்தீப் சிங்,  ரேஸுக்காக மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் எட்டியோஸ் ரேஸ் காரை, சென்னை கோயம்பேடில் இருக்கும் லான்ஸன் ஷோ ரூமுக்கு அழைத்துப் போய் காட்டினார்.

''ஷோ ரூம்களில் விற்பனையாகும் எட்டியோஸ் காருக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் இன்ஜின், சஸ்பென்ஷன், எக்ஸாஸ்ட் ஆகியவற்றில் மட்டும் தேவையான சில மாற்றங்களைச் செய்திருக்கிறோம். ரேஸுக்குப் பயன்படுத்தும் கார் என்பதால், டிரைவர் சீட் தவிர மற்ற இருக்கைகள் இருக்காது. அதற்குப் பதிலாக கார் உருண்டு புரண்டாலும் உருக்குலையாத வகையில் காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உண்டு'' என்று சொன்னவர், ''வாக்கு டோக்கி என்பதுதான் இந்த ரேஸின் தாரக மந்திரம்!'' என்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

''வாக்கு டோக்கி என்றால், ஜப்பான் மொழியில் மகிழ்ச்சி, ஜாலி என்று பொருள். எட்டியோஸ் மோட்டார் ரேஸிங்கில் பங்கு பெறுவது மட்டுமல்ல, பார்வையாளராக இருப்பதும்கூட மகிழ்ச்சியான மற்றும் ஜாலியான விஷயமாக இருக்கும்'' என்றார்.

'வாக்கு டோக்கி!'

''இந்த ரேஸில் கலந்துகொள்ள கோ- கார்ட்டிங்கில் அனுபவம் கொண்ட 15 வயதிலிரிந்து 24 வயது வரையிலான ஆண் - பெண் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்திருந்தோம். இதை அடுத்து 3,300 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். நல்ல ஆரோக்கியமான, திடகாத்திரமான உடல் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தேர்வில் வெற்றி பெற முதல் தகுதி. இது போன்ற தகுதிகளை வைத்து 3,300 போட்டியாளர்களை முதலில் 800 ஆகவும், அதற்கு அடுத்து எழுபதாகவும் வடிகட்டப் போகிறோம். இந்த எழுபது பேர்களுக்குமே பலவிதமான பயிற்சிகளைக் கொடுத்து, கடைசியில் இறுதிப் போட்டி வைத்து 25 ரேஸ் வீரர்களை தேர்ந்தெடுப்போம்.

இந்த 25 பேரில் குறைந்தபட்சம் ஒரே ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்'' என்றார் சந்தீப் சிங்.

''டொயோட்டா மோட்டார் ரேஸிங் கோவை, சென்னை மற்றும் டெல்லி அருகே இருக்கும் புத் இன்டர்நேஷனல் ரேஸ் சர்க்யூட் ஆகியவற்றில் நடைபெறும். ரேஸ் அடுத்த ஆண்டுதான் என்றாலும், இந்த ஆண்டு எக்ஸிபிஷன் ரேஸ் நடத்த இருக்கிறோம். இது தவிர, ரேஸிங் பற்றி குழந்தைகளுக்குப் போதுமான விழிப்பு உணர்வை ஏற்படுத்த, எங்களது ஷோ ரூம்களில் ரேஸ் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள சுவாரசியமான பல விளையாட்டுக்களும் உண்டு'' என்றார்.

விளையாடிப் பார்க்கலாம்!

 மேட் இன் இந்தியா!

டொயோட்டாவைப் பொறுத்தவரை இது 'எட்டியோஸ்’ சீஸன் போல இருக்கிறது. டொயோட்டாவின் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, 247 எட்டியோஸ் கார்களை தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து எட்டியோஸ் கார்கள் கப்பலில் ஏற்றபடுவதைக் காண, டொயோட்டாவின் சந்தீப் சிங் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார்.

'வாக்கு டோக்கி!'

''பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு நம் ஊர் சாலைகளிலும் ஓடும் அதே எட்டியோஸ்தான் இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. தென்னாப்பிரிக்க சாலைகளில் நம் ஊரைவிட வேகமாக காரை ஓட்ட முடியும் என்பதால், அதற்கு ஏற்ற வகையில் இந்த கார்களை ட்யூன் செய்திருக்கிறோம். இப்போதைக்கு பெட்ரோல் மாடல் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம்'' என்றார். இதே எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நிஸான் மற்றும் ஃபோர்டு கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. அதேபோல, சென்னை துறைமுகத்தில் இருந்து ஹூண்டாய் தனது கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது! 

வேல்ஸ்  வீ.நாகமணி