Published:Updated:

''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!''

வி.ஐ.பி. பேட்டி - டீட்டர் ஜேட்சேதலைவர், டெய்ம்லர் ஏஜி நிறுவனம்

பிரீமியம் ஸ்டோரி

மோட்டார் உலகத்தைப் பொறுத்தவரை 'டீட்டர் ஜேட்சே’ என்பது ஒரு மந்திர வார்த்தை. மெர்சிடீஸ் பென்ஸ், கார் மற்றும் டிரக் தயாரிக்கும் நிறுவனங்களில், பல நாடுகளில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் விற்பனையிலும், மக்களின் எண்ணத்திலும் டெய்ம்லர் நிறுவனம் தள்ளாடியபோது, அதை தனது அபாரத் திறமையினால் தூக்கி நிறுத்தியவர். தற்போது உலகம் தழுவிய டெய்ம்லர் ஏஜி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர்.

''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!''

சென்னை அருகே உள்ள ஒரகடத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் டெய்ம்லர் இந்தியாவின் கமர்ஷியல் வாகனத் தொழிற்சாலையின் துவக்க விழாவுக்காக சென்னை வந்திருந்தார். 'சிந்தனை உலகளாவியதாக இருந்தாலும், பணியாற்றும்போது பக்காவான உள்ளூர் ஆசாமி போல செயல்பட வேண்டும்’ என்ற அறிவார்ந்த வார்த்தைகளுக்கு உதாரணமாகத் திகழும் அவரைச் சந்தித்தபோது, ''இன்று இந்த தொழிற்சாலைப் பற்றியும் டிரக் பிசினஸ் பற்றி மட்டுமே பேசலாமா?'' என்று புன்னகையோடு கேட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!''

''உங்களின் தேசியக் கொடியில் சக்கரம் இடம் பெற்றிருப்பதற்கு இப்போது இன்னொரு புதிய அர்த்தம் கிடைத்திருக்கிறது. இந்தியா தொடர்ந்து எட்டு சதவிகித வளர்ச்சி கண்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்து மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க இருக்கிறது. கார் உற்பத்தியில் மட்டுமல்ல, டிரக் உற்பத்தியிலும்  வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஆம், இன்று உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டிரக்குகளைத் தயாரிப்பதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் மூன்று லட்சத்து முப்பதாயிரம் டிரக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. உங்கள் நாட்டில் தினமும் 3.3 கி.மீ நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி அத்தியாயத்தில் டெய்ம்லரும் இடம் பெற விரும்புகிறது. அதனால்தான் நாங்கள் இப்போது இந்தியா வந்திருக்கிறோம்.''

''உலகெங்கும் உள்ள டெய்ம்லரின் தொழிற்சாலைகளிலேயே லேட்டஸ்ட் இதுதான் என்பதால், ஒரகடம்தான் உலகிலேயே அதி நவீனமான டெய்ம்லர் தொழிற்சாலை என்று சொல்லலாமா?''

''ஜெர்மனிக்கு வெளியே அமைந்திருக்கும் டெய்ம்லர் தொழிற்சாலைகளில், மூன்றாவது பெரிய தொழிற்சாலை இதுதான். ஒரகடத்தில் உற்பத்தியாக இருக்கும் டிரக்குகளுக்கான உதிரி பாகங்களில் பெரும்பாலும், அதாவது 90 சதவிகிதம் இந்தியாவிலிருந்தே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 60 சதவிகிதம் தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட இருக்கிறது.

''டிரைவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்!''

4,400 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் இந்தப் புதிய தொழிற்சாலையில், ஆண்டுக்கு 36 ஆயிரம் டிரக்குகளை உற்பத்தி செய்ய முடியும். இதே தொழிற்சாலையை முழு வீச்சில் இயக்கினால், இதன் உற்பத்தித் திறனை 70 ஆயிரமாக உயர்த்த முடியும். தற்போது இதில் வெறும் 1,400 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்றாலும், கூடிய விரைவிலேயே இந்த எண்ணிக்கை மூவாயிரமாக உயரும். இந்த தொழிற்சாலையின் மூலம் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகிறவர்களையும் கணக்கில் எடுத்தால், அந்த எண்ணிக்கை வெகு சீக்கிரத்திலேயே 15 ஆயிரமாக உயரும்!''

''லாரி டிரைவர் வேலை பார்க்க முன் வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக இன்று இல்லையே?''

''டிரக் டிரைவர்கள் பற்றிய இமேஜ் மாற வேண்டும். அவர்கள் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும். இதைச் செய்ய எங்களது டிரக்குகள் நிச்சயம் உதவும். பவர் ஸ்டீயரிங், அருமையான கியர், அதி அற்புதமான இன்ஜின், ஏ.ஸி என்று அவர்களுக்கும் பல வசதிகளைக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படை வசதிகளை டிரைவர்களுக்குக் கொடுத்தால்தான் டிரைவர்கள் மட்டுமல்ல, சாலையில் போகும் மற்ற வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பும் மேம்படும். இப்படிப்பட்ட டிரக்குகளை பாரத தேசத்துக்கு உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'பாரத்பென்ஸ்’ என்ற புதிய ’பிராண்டை’ அறிமுகப்படுத்தி இருக்கிறோம்!''

''டீலர் ஷிப், ஆஃப்டர் சேல்ஸ், சர்வீஸ் போன்ற விஷயங்களில் டெய்ம்லர் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும்?''

''இந்த ஆண்டு இறுதிக்குள் 70 டீலர் ஷிப்புகள் துவங்கப்பட இருக்கின்றன. 2014-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை நூறை எட்டிவிடும். 'பாரத்பென்ஸ்’ டிரக்குகள் என்றால், எத்தகைய தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதை அனைவருக்கும் காட்ட, 'பாரத் யாத்ரா’ என்ற பெயரில் இந்தியா முழுதும் எங்கள் பாரத்பென்ஸ் டிராக்குகள் ஊர்வலம் சென்று கொண்டு இருக்கின்றன. பாரத்பென்ஸ் டிரக்குகளைப் பார்த்தாலே போதும். இதன் சிறப்புகளை மக்கள் புரிந்து கொள்வார்கள்!''

நட்போடு கை குலுக்கினார் டீட்டர் ஜேட்சே!

பி.ஆரோக்கியவேல்  என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு