Published:Updated:

5 ரேஸ் சாம்பியன்கள்!

டாப் கியரில் கார் ரேஸ்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ந்து ரேஸ்கள்... ஐந்து சாம்பியன்கள். 2012-ம் ஆண்டு ஃபார்முலா-1 ரேஸைப் போல, இதுவரை எந்தப் போட்டியும் நடந்தது இல்லை. இந்த ஆண்டு நடைபெற்றுவரும் போட்டிகளில் அடுத்தடுத்து வெவ்வேறு ரேஸ் வீரர்கள் வெற்றி பெற்று இருப்பதால், இந்த ஆண்டுக்கான சாம்பியன் யார் என்பதைக் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் புக்கிகள்! 

பஹ்ரைன்

உள்நாட்டுக் கலவரத்தால், ரேஸ் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பஹ்ரைனில் நடந்தது ஃபார்முலா-1 பந்தயத்தின் நான்காவது சுற்று. கடந்த ஆண்டு நடந்த கலவரத்தால், பஹ்ரைன் ரேஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், இறுதி வரை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகவே இல்லை. இருப்பினும், ஃபார்முலா-1 ரேஸ் பந்தயத்தை நடத்துவதால் கிடைக்கும் வருவாயைக் கைவிட, பஹ்ரைன் மன்னர் அலி காஃபியாவுக்கு மனம் இல்லை. அதனால் விடாப்பிடியாக ரேஸை நடத்தினார்.

5 ரேஸ் சாம்பியன்கள்!

தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனும், ரெட்புல் அணி வீரருமான செபாஸ்ட்டியன் வெட்டல் முதல் இடம் பிடித்தார். மெக்லாரன் - மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். முன்னாள் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர், 22-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். ஹிஸ்பானியா ரேஸிங் அணியின் நரேன் கார்த்திகேயன், கடைசி இடமான 24-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

5 ரேஸ் சாம்பியன்கள்!

ஆரம்பத்திலேயே லீட் பிடித்து முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார் செபாஸ்ட்டியன் வெட்டல். லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்துக்கு முன்னேற, மார்க் வெப்பர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இரண்டாவது லேப்பின் முடிவில் டி.ஆர்.எஸ் எனப்படும் 'டிராக் ரிடக்ஷன் சிஸ்டம்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின்படி, காரின் பின் பக்கத்தில் இறக்கைகள் போல இருக்கும் ஃப்ளாப்புகளை மடக்கிவிட முடியும். இப்படிச் செய்வதால், காற்று கீழ் நோக்கித் தள்ளப்பட்டு கார் வேகமாகப் பறக்கும். பொதுவாக, இந்தத் தொழில்நுட்பத்தை ஓவர்டேக் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, 11-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறினார் லோட்டஸ் ரெனோ அணியின் கிமி ராய்க்கோனன்.

அடுத்தடுத்த லேப்புகள் வீறுகொண்டு ரேஸ் ஓட்டிய கிமி ராய்க்கோனன், இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். அடுத்து வெட்டலைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் கிமி ராய்கோனன் தீவிரம் காட்ட, இவரது தந்திரங்களை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த ரெட்புல் அணியினர், வெட்டலுக்கு ரேடியோ மூலம் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருந்தனர். அதனால், வழிவிடாமல் ஆக்ரோஷமாக வெட்டல் கார் ஓட்ட, ராய்கோனனுக்கும் அவருக்கும் செம போட்டி.  ஆனால், இறுதி வரை ராய்க்கோனனை முந்தவிடாமல் கட்டுப்பாட்டுடன் ரேஸ் ஓட்டிய செபாஸ்ட்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

2010, 2011-ம் ஆண்டின் சாம்பியனான செபாஸ்ட்டியன் வெட்டலுக்கு, இந்த ஆண்டின் முதல் வெற்றி இது என்பதால் செம உற்சாகத்தில் இருந்தார். வெற்றி பெற்றதும் காரை ரேஸ் டிராக்கிலேயே நிறுத்திவிட்டு, வெற்றி மேடை வரை ஓடியே வந்தார் வெட்டல். இந்தியாவின் நரேன் கார்த்திகேயனுக்கு 21-வது இடம் கிடைத்தது!

5 ரேஸ் சாம்பியன்கள்!

ஸ்பெயின்

ஃபார்முலா-1 பந்தயத்தின் ஐந்தாவது சுற்று, ஸ்பெயினில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்றது.

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் மெக்லாரன் - மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், அவரது காரில் விதிமுறைகளை மீறி பெட்ரோல் குறைவாக இருந்ததால், கடைசி இடத்தில் இருந்து போட்டியைத் துவக்க வேண்டும் என்று அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதனால், இரண்டாம் இடத்தில் இருந்த வில்லியம்ஸ் ரெனோ வீரர் பாஸ்டர் மால்டொனால்டோ, முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ஃபெராரியின் அலான்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், லோட்டஸ் ரெனோ அணியின் ரோமெயின் கிராஸின் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

5 ரேஸ் சாம்பியன்கள்!

ரேஸின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் கவனமாகவும், அதே சமயம் வேகத்தைக் குறைக்காமலும் ரேஸ் ஒட்டினார் பாஸ்டர் மால்டொனால்டோ. ஆனால், சொந்த மண்ணில் நடைபெறும் ரேஸ் போட்டி என்பதால், ஃபெர்னாண்டோ அலான்சோ லாவகமாக ரேஸ் ஓட்டி முதல் இடத்துக்கு முன்னேறினார். இதற்கிடையே, கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய லூயிஸ் ஹாமில்ட்டன், 8-வது இடத்துக்கு முன்னேறினார். அதற்கு மேல் அவரால் முந்த முடியவில்லை. காரணம், முதல் 8 இடங்களுக்குள் கடுமையான போட்டி நடந்துகொண்டு இருந்தது. மொத்தம் 66 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டி முடிய, 10 லேப்புகளே இருந்த நிலையில் மால்டொனால்டோ, அலான்சோ, ராய்க்கோனன் ஆகிய மூவருக்கும் இடையே ஒரு விநாடி வித்தியாசத்தில் சேஸிங் உச்சக்கட்டத்தில் இருந்தது. இறுதியில் வெற்றி பெற்று உலகத்தின் கவனம் ஈர்த்தார் பாஸ்டர் மால்டொனால்டோ.

5 ரேஸ் சாம்பியன்கள்!

27 வயதான பாஸ்டர், வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர். ஃபார்முலா-1 ரேஸில் வெற்றி பெற்றிருக்கும் முதல் வெனிசுலா வீரர். ''திறமையே இல்லாதவருக்கு ஃபார்முலா-1 ரேஸ் ஓட்ட 250 கோடி ரூபாய் ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்திருக்கிறது'' என்று விமர்சிக்கப்பட்டவர் பாஸ்டர். ஆனால், இவர்தான் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம்ஸ் அணிக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டு வீரரான அலான்சோ இரண்டாம் இடத்தையும், கிமி ராய்க்கோனன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

5 ரேஸ் சாம்பியன்கள்!

பாஸ்டர் மால்டொனால்டோ வெற்றி பெற்று பதக்கம் வாங்க மேடை ஏறிய சில நிமிடங்களில், வில்லியம்ஸ் அணியின் பிட் ஸ்டாப்புக்குள் தீப்பிடித்தது. இதில் வில்லியம்ஸ் அணியின் மெக்கானிக்குகள் மற்றும் நிர்வாகிகள் 31 பேருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதால், வெற்றியைக் கொண்டாட வேண்டிய வில்லியம்ஸ் அணி துக்கத்தில் துவண்டது.

இதுவரை ஐந்து சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஜென்சன் பட்டன், ஃபெர்னாண்டோ அலான்சோ, நிக்கோ ரோஸ்பெர்க், செபாஸ்டியன் வெட்டல், பாஸ்டர் மால்டொனால்டோ என வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த ரேஸ் வீரர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனால், சாம்பியன்ஷிப் பட்டியலில் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. செபாஸ்ட்டியன் வெட்டல், ஃபெர்னாண்டோ அலான்சோ ஆகிய இருவரும் 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்கள். லூயிஸ் ஹாமில்ட்டன் 53 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

மெக்லாரன், ஃபெராரி, பென்ஸ், ரெனோ, ரெட்புல் எனக் கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே இந்த ஆண்டு சம பலத்துடன் இருப்பதால், யாரும் சாம்பியன் பட்டத்தை வெல்வது... இஸ் நாட் தட் ஈஸி!

-சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு