Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக் - தர்மபுரி

புல்லட் ஜானி!

 ##~##

டதடவென அதிரடிக்கும் புல்லட்டின் கம்பீரமே தனி! தலைமுறைகள் தாண்டியும் இந்த பைக்கின் இன்ஜின் சத்தத்துக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் இருக்க முடியாது. 

தான் ஒரு புல்லட் மெக்கானிக் என்பதிலேயே பெருமைகொள்ளும் மெக்கானிக்குகள் நம் நாடெங்கும் உண்டு. அதில், தர்மபுரி பகுதியில் 45 ஆண்டுகளாக பல புல்லட்களின் சுவாசக் காற்றாக இருப்பவர் 55 வயதான ஜானி என்கிற சான் பாட்ஷா. இன்ஜின் ரீ-கண்டிஷன் செய்வதில் வல்லவரான இவர், தேய்ந்து போன இன்ஜினை, புது ரத்தம் பாய்ச்சி புத்தொலி ஒலிக்கச் செய்பவர். அதனால், தர்மபுரி தாண்டி வெளி மாநிலங்களிலும் இவர் கை வைத்த புல்லட் பைக்குகள் ஒலி எழுப்பிக்கொண்டு இருக்கின்றன.

ஜானியின் ஆட்டோகிராஃப் சுவாரஸ்யமானது. ''பத்து வயசில் படிப்பை உதறிவிட்டு, அப்போது தர்மபுரியில் பிரபலமாக இருந்த நவாப் பைக் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அவர் பைக் பழுது பார்ப்பதைக் கூர்ந்து கவனிப்பேன். சுமார் 12 வருஷம் என் குருவிடம் வேலை செய்துவிட்டு, அதன் பிறகு தனியாக ஒர்க் ஷாப் வைத்தேன். இன்று வரை புல்லட் பைக்குகளின் ஓசையில்தான் என் வாழ்க்கை!'' என தத்துவார்த்தமாகப் பேசிய ஜானி, புல்லட் நினைவுகளில் மூழ்கினார்.  

நம்ம ஊரு மெக்கானிக் - தர்மபுரி

''மற்ற பைக்குகள் மக்கள் மத்தியில் மாறிக்கிட்டே இருந்தாலும், புல்லட்டுக்கு மட்டும் என்னைக்கும் மவுசு குறையாதுன்னு ஒரு கட்டத்துல எனக்குப் புரிய ஆரம்பிச்சது. அதனால, புல்லட் மட்டுமே முழு மூச்சா சர்வீஸ் செய்வோம்னு முடிவெடுத்தேன்.

எனக்குத் துணையா என் மூத்த மகன் உஸ்மான் 17 வருஷமாகவும், இளைய மகன் ரகுமான் 12 வருஷமாகவும் புல்லட் சர்வீஸ் ஃபீல்டுல இறங்கிட்டாங்க. அதனால், கூடுதல் வேகத்தோடு புல்லட்களை சர்வீஸ் பண்ணித் தர ஆரம்பிச்சோம். ரெகுலர் கஸ்டமர்கள் விரும்பினால் மட்டும், மற்ற பைக்குகளை சர்வீஸுக்கு எடுப்போம்.

பைக் வேலை செய்யும்போது, இன்ஜின் ஃபிட்டிங்கில் எனக்குத் திருப்தி வரலைன்னா... அப்படியே போட்டுட்டுத் தூங்கிடுவேன். தெம்பா எழுந்து வந்து வேலை செய்யும்போது, இன்ஜின் என் சொல் பேச்சை எல்லாம் கேட்கும். எனக்கு முழுத் திருப்தி ஏற்பட்டால் மட்டும்தான், கஸ்டமருக்கு பைக்கை டெலிவரி கொடுப்பேன். இல்லைன்னா, கூடுதலாக் கொஞ்ச நாளானாலும் துல்லியமா வேலை பார்த்துத்தான் அவங்க கையில் ஒப்படைப்பேன். புல்லட் ஓசையை ஒரு நாள் கேட்கலைனாலும், எனக்குப் பசி, தூக்கம் வராது!'' என்றார் ஜானி.

பல ஆண்டுகளுக்கு முன்பு, தர்மபுரியில் இருந்து கோவாவுக்குக் குடியேறிய நண்பர் ஒருவருக்கு, பழைய புல்லட் வாங்கி கண்டிஷன் செய்துதரும்படி ஜானியிடம் கொடுத்திருக்கிறார். ஓரிரு வாரத்தில் தயாரான பைக்கை கோவா வரை ஓட்டிச் சென்று டெலிவரி கொடுத்தாராம். கோவாவில்  பலர் அந்த பைக்கைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள். அதோடு நிற்காமல், தர்மபுரி வரை தேடி வந்து தங்களுக்கும் அதே மாதிரியே புல்லட் வேண்டும் என கேட்க... ஜானியின் கோவா வாடிக்கையாளர்கள் பட்டியல் பெரிதாகி விட்டதாம்.

புல்லட் ஜானி!

எஸ்.ராஜா செல்லம்

எம்.தமிழ்ச் செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு