Published:Updated:

ஹோண்டாவுக்குப் போட்டியில்லை!

மோட்டோ ஜீபி

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

''இந்த ஆண்டு ஹோண்டாவை வீழ்த்துவது ரொம்ப சிரமம்'' என்று புலம்புகிறார்கள் முன்னணி ரேஸ் வீரர்கள். கேஸி ஸ்டோனரும், டேனி பெட்ரோஸாவும் ஹோண்டாவை புல் திராட்டிலில் முறுக்க... பார்ம் அவுட் ஆகிவிட்டார் 10 முறை பைக் ரேஸ் சாம்பியனான டுகாட்டியின் வாலன்டினோ ராஸி! 

ஸ்பெயின்

மோட்டோ ஜீபி ரேஸ் பந்தயத்தின் இரண்டாவது சுற்று, ஏப்ரல் 29-ம் தேதி ஸ்பெயினின் ஜெரஸ் நகரில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் ஸ்பெயின் நாட்டு வீரரான யமஹா அணியின் ஜார்ஜ் லாரன்சோ.

ரேஸின் ஆரம்பமே அதிரடியாக இருந்தது. கேஸி ஸ்டோனர், ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா, கால் க்ரட்ச்லோ, ஆன்ட்ரி டோவிஸியோஸோ ஆகிய ஐந்து ரேஸ் வீரர்களும் முதல் இடத்துக்கு மாறி மாறி போட்டி போட்டனர். ஆனால், லேப்புகள் போகப் போக ஜார்ஜ் லாரன்சோ, கேஸி ஸ்டோனர், டேனி பெட்ரோஸா ஆகிய மூவருக்கும் இடையேயான போட்டியாக ரேஸ் சுருங்கியது. சொந்த மண்ணில் ஸ்பெயின் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்தோடு ரேஸ் ஓட்டிய ஜார்ஜ் லாரன்சோவால், கேஸி ஸ்டோனரைப் பிடிக்க முடியவில்லை. யமஹாவை முந்தி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றது கேஸி ஸ்டோனரின் ஹோண்டா. ஹோண்டாவின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸா, மூன்றாவது இடம் பிடித்தார். டுகாட்டியின் வாலன்டினோ ராஸியால் 9-வது இடமே பிடிக்க முடிந்தது.

ஹோண்டாவுக்குப் போட்டியில்லை!
ஹோண்டாவுக்குப் போட்டியில்லை!

போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள எஸ்டோரில் ரேஸ் மைதானத்தில், மே 6-ம் தேதி மோட்டோ ஜீபி பந்தயத்தின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஹோண்டா அணியின் கேஸி ஸ்டோனர். டேனி பெட்ரோஸா இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹாவின் கால் க்ரட்ச்லோ மூன்றாவது இடத்தில் இருந்தும், ஜார்ஜ் லாரன்சோ நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே கேஸி ஸ்டோனரின் கையே ஓங்கி இருந்தது. ஆனால், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ, கேஸி ஸ்டோனருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இருவருக்கும் ஒரு விநாடி இடைவெளிதான் என்பதால், ஒரு கட்டத்தில் இரண்டு பைக்குகளும் மோதிக்கொள்ளும் அளவுக்கு ரேஸ் டிராக்கில் அனல் பறந்தது. ஆனால், கடைசி லேப்பான 28-வது லேப்பின் இறுதி வரை ஜார்ஜ் லாரன்சோவால், கேஸி ஸ்டோனரை முந்த முடியவே இல்லை. இந்த ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றார் கேஸி ஸ்டோனர். ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடத்தையும், டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஹோண்டாவுக்குப் போட்டியில்லை!
ஹோண்டாவுக்குப் போட்டியில்லை!

ரேஸுக்குப் பின் மீடியா முன் வந்தா கேஸி ஸ்டோனர், ''என் பைக்கில் அதிர்வுகள் அதிகமாக இருந்தது. இருந்தாலும் அதைச் சமாளித்து ஜெயித்தேன்'' என்றார். இரண்டாம் இடம் பிடித்த ஜார்ஜ் லாரன்சோ, ''இறுதி வரை என்னுடைய யமஹாவால் கேஸி ஸ்டோனரின் ஹோண்டாவை முந்த முடியவில்லை. இந்த ஆண்டு ஹோண்டா, மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது'' என்றார்.

மூன்று ரேஸ்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், கேஸி ஸ்டோனர் 66 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜார்ஜ் லாரன்சோ 65 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனி பெட்ரோஸா 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஜார்ஜ் லாரன்சோ ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், ஹோண்டாவின் வேகம் இந்த ஆண்டு யமஹாவைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால், ஹோண்டா இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை எளிதில் வென்றுவிடும் என்றே தெரிகிறது!

-சுரேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு