Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

ஜான், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் மாருதி ஆல்ட்டோ வைத்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் பெரிய சைஸ் டீசல் கார் வாங்கலாம் எனத் திட்டம். என் பட்ஜெட் 8 லட்சம். ஐந்து பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிக்க இட வசதி இருக்க வேண்டும். டீசல் கார் வாங்குவதே மைலேஜ் அதிகமாகக் கிடைக்கும் என்பதற்காகத்தான். எந்த கார் வாங்கலாம்?

உங்கள் பட்ஜெட்டுக்கும், உங்கள் தேவைகளுக்கும் சரியாகப் பொருந்தி வரும் கார், நிஸான் சன்னி டீசல். ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து, நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும். டிக்கியில் பொருட்கள் வைக்க, தாராள இடம் உண்டு. பட்டன் ஸ்டார்ட், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி என இந்த வரிசை கார்களில் இல்லாத வசதிகள் சன்னியில் உண்டு. மைலேஜிலும் குறைவில்லை. நகருக்குள் லிட்டருக்கு 13.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.7 கி.மீ மைலேஜ் தருகிறது நிஸான் சன்னி!

ராகுல், நாகர்கோவில்.

மோட்டார் கிளினிக்

150 சிசி பைக் வாங்க வேண்டும். ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் போல் இருக்க வேண்டும். மைலேஜ் பற்றிப் பிரச்னை இல்லை. என் பட்ஜெட் 1 லட்சம். எந்த பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக் வேண்டும் என்றால், உங்களுடைய பட்ஜெட்டை 1 லட்சத்துக்கு மேல் உயர்த்த வேண்டும். யமஹா ஆர்-15, ஹோண்டா சிபிஆர்-150 ஆர் பைக்குகள்தான் இப்போது மார்க்கெட்டில் ஹிட். பெர்ஃபாமென்ஸைப் பொறுத்த வரை, யமஹா ஆர்-15 பைக்கைவிட, ஹோண்டா சிபிஆர்-150 ஆர் சிறப்பாக இருக்கிறது. ஆனால், யமஹாவைவிட ஹோண்டாவின் விலை, கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் அதிகம்!

ராம், ஈரோடு.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் புதிதாக கார் வாங்கப்போகிறேன். இதற்காக மாருதி, ஹூண்டாய் ஷோ ரூம்களுக்கு சென்று கார்களைப் பார்த்தேன். அங்கே இருப்பவர்கள் காரை டெஸ்ட் செய்து பாருங்கள் என்கிறார்கள். டெஸ்ட் டிரைவ் செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

ஸ்டீயரிங் சரியாகப் பிடித்து ஓட்ட முடிகிறதா; ஸ்டீயரிங்கைத் திருப்பினால் கார் சரியாக நீங்கள் திருப்பும் திசை நோக்கித் திரும்புகிறதா என்று பாருங்கள். அதேபோல், கியர்களை எளிதாக மாற்ற முடிகிறதா என்று சோதியுங்கள். சில கார்களில் ரிவர்ஸ் கியர் முதல் கியருக்கு அருகில் இருக்கும். அதனால், ரிவர்ஸ் கியர் போடுவதற்கு சுலபமாக இருக்கிறதா என்று பாருங்கள். ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், கார் ஜெர்க்குடன் புறப்படுகிறதா அல்லது ஸ்மூத்தாகக் கிளம்புகிறதா என்பதைக் கவனியுங்கள். அதேபோல், பிரேக் சரியாகப் பிடிக்கிறதா என்று செக் செய்யுங்கள். இவை அனைத்தும் டெக்னிக்கல் விஷயங்கள். இவை தவிர, நீங்கள் வாங்கப்போகும் காரை உங்கள் வீட்டில் நிறுத்தும் அளவுக்கு இடம் இருக்கிறதா, இருக்கைகள் உட்கார்ந்து பயணிக்க வசதியாக இருக்கிறதா, டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால் வெளிச் சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்டும் அளவுக்கு சீட் உயரமாக இருக்கிறதா, கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் இருக்கிறதா, டிக்கியில் பொருட்கள்வைக்கப் போதுமான இடம் இருக்கிறதா, நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பு வசதிகள்... உதாரணத்துக்கு ஏபிஎஸ், காற்றுப் பை போன்ற வசதிகள் இருக்கிறதா என்றும் பார்ப்பது முக்கியம்!

செல்வராஜ், சென்னை.

மோட்டார் கிளினிக்

நான் 2002-ம் ஆண்டு மாடல் மாருதி ஜென் கார் வைத்திருக்கிறேன். கார் நல்ல கண்டிஷனில் இருக்கிறது. இன்ஜின், கியர் பாக்ஸில் இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மேனுவல் ஸ்டீயரிங் என்பதால், நகர டிராஃபிக்கில் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கை என்னுடைய காரில் பொருத்த முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும்?

உங்களுடைய மாருதி ஜென்னில் மேனுவல் ஸ்டீயரிங்குக்குப் பதில் பவர் ஸ்டீயரிங்கைப் பொருத்த முடியும். ஆனால், கார்புரேட்டர் இன்ஜின் என்பதால், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் பொருத்த முடியாது. ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங்தான் பொருத்த முடியும். கம்பெனிக்கு ஏற்ப, பவர் ஸ்டீயரிங் பொருத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்!

விவேக், கோவை.

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் புதிதாக பைக் வாங்க இருக்கிறேன். பைக் வாங்குவதற்கு முன்பு என் அப்பா லைசென்ஸ் எடுக்கச் சொல்கிறார். ஆன்-லைனில் லைசென்ஸ் எடுக்கும் வசதி இருப்பதாக என் நண்பன் சொல்கிறான். உண்மையா?

ஆன்-லைனில் லைசென்ஸ் எடுக்கும் வசதி இல்லை. ஆனால், பழகுனர் உரிமம் (லேர்னர்ஸ் லைசன்ஸ்) எடுத்துக்கொள்ள ஆர்டிஓ-வில் அப்பாயின்ட்மென்ட் வாங்க வசதி இருக்கிறது. இன்டர்நெட்டில் http://transport.tn.nic.in/transport/transportTamMain.do இந்த முகவரியை டைப் செய்தால், பழகுநர் உரிமம் வாங்குவதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் வரும். இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால், பழகுனர் உரிமம் வாங்க நீங்கள் எப்போது ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வர வேண்டும் என்ற விவரம் வரும். அதற்கு ஏற்றபடி நீங்கள் நேரில் சென்று பழகுநர் உரிமம் வாங்கலாம். பழகுநர் உரிமம் வாங்கி 30 நாட்கள் நிறைவடைந்த பிறகு, பைக்கை ஓட்டிக் காட்டி, டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும்!

சதீஷ், சென்னை.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் பஜாஜ் பல்ஸர் 135 பைக்கை, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கினேன். இதுவரை 15 ஆயிரம் கி.மீ ஓட்டியிருக்கிறேன். பைக் வாங்கிய ஆறு மாதத்திலேயே செயின் ஸ்ப்ராக்கெட் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது முதல் அதிர்ச்சி. அதற்கு அடுத்து, கடந்த மாதம் சென்னை போரூர் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென நடுவழியில் இன்ஜின் 'சீஸ்’ ஆகி நின்றுவிட்டது. நான் தொடர்ந்து சரியான இடைவெளியில் கம்பெனியின் பரிந்துரைப்படி சர்வீஸ் செய்து வந்திருக்கிறேன். ஆனாலும், பைக் வாங்கிய ஒன்றரை ஆண்டிலேயே இன்ஜின் சீஸாகிவிட்டது அதிர்ச்சியாக இருக்கிறது. 'வாரன்டி முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அதனால், இலவசமாக இன்ஜினைச் சரிசெய்து தர முடியாது’ என டீலர் சொல்கிறார். என்ன செய்யலாம்?

உலகின் முதல் நான்கு வால்வு இன்ஜின் கொண்டதாக, பல்ஸர்-135 பைக்கை கடந்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவந்தது பஜாஜ். புதிய இன்ஜின் என்பதால், விற்பனைக்கு வந்ததில் இருந்தே பல்ஸர் 135 பைக்கைப் பற்றி பல புகார்கள் எழுந்திருக்கின்றன. இருப்பினும், வாங்கிய ஒரு வருடத்திலேயே இன்ஜின் சீஸாவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்டதால், இன்ஜின் குறைபாடுகளை இலவசமாகச் சரிசெய்து தர முடியாது என்றும் சொல்ல முடியாது. எனவே, நீங்கள் உடனடியாக பஜாஜின் சென்னை தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, உங்கள் பிரச்னையைச் சரிசெய்து தரச் சொல்லுங்கள்.

அருண், ரீஜினல் ஹெட், பஜாஜ் ஆட்டோ, சென்னை, போன்: 044 4296 9104.

லோகநாதன், திருச்சி.

மோட்டார் கிளினிக்

எங்கள் வீட்டில் மொத்தம் எட்டு பேர். அடிக்கடி குடும்பத்தோடு வெளியூருக்குப் பயணம் செய்வோம். பெரிய கார் வேண்டும். ஆனால், அதிக மைலேஜ், பராமரிப்புச் செலவுகள் குறைவான, அதே சமயம் பாதுகாப்பான காராகவும் இருக்க வேண்டும். மஹிந்திரா XUV 500அல்லது டொயோட்டா இனோவா இரண்டில் எந்த கார் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

இரண்டு கார்களுமே நல்ல சாய்ஸ். ஆனால், குறைந்த பராமரிப்புச் செலவுகள், அதிக மைலேஜ் மற்றும் பாதுகாப்பு இவற்றோடு, குடும்பத்தோடு நீண்ட தூரம் சௌகரியமாகப் பயணம் செய்ய சிறந்த கார் டொயோட்டா இனோவா. மஹிந்திரா XUV 500 தோற்றத்தில் புதுமையாகவும், அதிக இட வசதி மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களோடு இருந்தாலும், இன்ஜின் தரத்தில் இனோவாவுக்கு இணையாக இல்லை. கார் வாங்கிய பிறகு எந்தத் தொல்லையும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்றால், அதற்குச் சிறந்த கார் டொயோட்டா இனோவாதான்!