Published:Updated:

இதயம் கவர்ந்த சன் பீம்!

இதயம் கவர்ந்த சன் பீம்!

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

ரலாறு எனும் காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிப்பது, சுகமான அனுபவம். ஆட்டோமொபைல் துறையின் வரலாறும் அப்படியே. குதிரைகள் பூட்டும் சாரட் வண்டியாகத் தோன்றி, இன்று தரையில் பறக்கும் விமானம் போல வளர்ந்துள்ளது இந்தத் துறை. 

ஒவ்வொரு வின்டேஜ் காரும் அந்தந்தக் காலகட்டத்தின் தொழில் வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் காட்டும் கண்ணாடி போன்றவை. அதில் முக்கியமானது பிரிட்டனைச் சேர்ந்த சன்பீம் நிறுவனம். 1905-ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 1960-ம் ஆண்டு வரை புகழின் உச்சியில் இருந்தது. சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் என மக்கள் போக்குவரத்துக்கான பல்வகை வாகனங்களைத் தயாரித்த நிறுவனங்களில் ஒன்று இந்த சன்பீம்.

இதயம் கவர்ந்த சன் பீம்!

சன்பீம் நிறுவனத்தின் தயாரிப்புகள், உலகம் முழுதும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும், அதில் சிறப்பு மிக்க சில கார் வகைகள் மிகக் குறைவாகவே உள்ளன. காரணம், கால மாற்றத்தின் விளைவாக, பராமரிக்கவும் உதிரி பாகங்கள் இல்லாமலும் முடங்கிக் கொண்டு இருக்கின்றன. சன்பீம் தயாரிப்புகளில் 'டால்பாட்’ சீரிஸ் கார்கள் அதிவேகப் பாய்ச்சலுக்குப் பெயர் பெற்றவை. தற்போது ஓடும் நிலையில் உள்ள டால்பாட் மாடல் கார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று, சென்னை நகரின் மாலைப் பொழுதுகளில் மெரீனா கடற்கரையில் அவ்வப்போது வலம் வருகிறது.

இந்த காரின் சொந்தக்காரர் டாக்டர் சஞ்சய் எம்.செரியன். புகழ் பெற்ற இதய மாற்று சிகிச்சை நிபுணரான கே.எம்.செரியனின் மகன் இவர்.

''முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வந்தவைதான் வின்டேஜ். அறுபதுகளுக்குப் பின்பு வந்தவை எல்லாமே கிளாஸிக் என்று கார்களை வகை பிரித்துக்கொள்வது என்னைப் போன்ற கார் ஆர்வலர்களின் முதல் கொள்கை. அந்த வகையில், என்னிடம் உள்ள சன்பீம் டால்பாட் கார், 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கார் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், உலகின் மிக வேகமான கார் இதுதான். இங்கிலாந்தில் நடக்கும் கன்ட்ரி ரேஸில் முதல் இடம் பிடித்த டால்பாட் மாடல் இது. கார் தயாரித்து 60 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் மணிக்கு 50 கி.மீ வேகத்துக்கு மேல் செல்கிறது என்றால், சன்பீமின் தரம் எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இதயம் கவர்ந்த சன் பீம்!

20 ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத் நவாப் குடும்பத்திடம் இருந்து என் தந்தை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு இந்த காரை வாங்கினார். வாங்கியதில் இருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறார். எனக்கு சின்ன வயதில் இருந்தே பழங்காலத்துப் பொருட்கள் என்றால் ப்ரியம். இப்போது காரைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை வேளையில் கடற்கரைச் சாலையில் ஒரு சின்ன டிரைவ் போவேன். எல்லா கார்களும் என்னை முந்திக்கொண்டு போகும். ஆனால், ஊரே என் காரை வேடிக்கை பார்க்கும். எனக்கோ, அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இறக்குமதி செய்யப்பட்ட வின்டேஜ் கார்களுக்கு என்றே வெங்கு என்ற மெக்கானிக் மயிலாப்பூரில் இருந்தார். அவர் இறந்த பிறகு, வின்டேஜ் கார் பராமரிப்புக்கான சரியான மெக்கானிக் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது சன்பீம் தன்னைத்தானே பராமரித்துக்கொள்கிறது!'' என்றார் சஞ்சய்.

காரின் செயல்பாட்டைக் கேட்டபோது, ''பானெட்டைத் திறந்து பார்த்தால், சன்பீமின் இன்ஜின் ரொம்ப சிம்பிள். ஆனால், ஓட்டுவது அவ்வளவு சுலபம் அல்ல. கார் ஜன்னலைத் திறக்கக்கூட பட்டனை அழுத்தும் நம் தலைமுறைக்கு, டால்பாட்டை நியூட்ரலில் இருந்து முதல் கியருக்கு மாற்றுவதற்குள் மூச்சு வாங்கும்.

டால்பாட்டின் சஸ்பென்ஷன், இந்தியச் சாலைகளுக்கு ஏற்றது அல்ல. அதனால், ஸ்பீடு பிரேக்கர் இல்லாத சாலைகளாகத் தேடித் தேடி டிரைவிங் செல்கிறேன். இந்த கார் சென்ற மிகத் தொலைவான இடமே மகாபலிபுரம்தான். ஸ்போர்ட்ஸ் கார்களைப் போலவே  வின்டேஜ் கார்களுக்கும் ஈசிஆர்தான் இந்திரபுரி. என் இதயம் கவர்ந்த இந்த காரில்தான், என் திருமண ஊர்வலம் நடந்தது. எனவே, சென்ட்டிமென்ட்டும் இந்த கார் மீது எனக்கு இருக்கிறது!'' - நெகிழ்கிறார் டாக்டர் சஞ்சய்.

மோ.அருண்ரூப பிரசாந்த்  ஜெ.தான்யராஜூ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு