Published:Updated:

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

 ##~##

ஹோண்டா, டுகாட்டி பைக்குகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் முந்துகின்றன கவாஸாகி, ஏப்ரில்லா பைக்குகள். அதிவேக பைக் ரேஸ் போட்டியான வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் சாம்பியனுக்கான போட்டியில், இப்போது ஏப்ரில்லா, கவாஸாகி அணிகள்தான் லீடிங்! 

நெதர்லாந்து

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெதர்லாந்து நாட்டின் அசென் ரேஸ் மைதானத்தில், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியின் மூன்றாவது சுற்று, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றுப் போட்டியில், கவாஸாகி அணியின் டாம் சைக்ஸ் வெற்றி பெற்று, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். ஹோண்டா அணியின் ஜோனத்தன் ரியா இரண்டாவது இடத்தில் இருந்தும், டுகாட்டி அணியின் ஜேக்கப் ஸ்மிர்ஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினர். முன்னாள் சாம்பியனும், ஏப்ரில்லா அணி வீரருமான மேக்ஸ் பியாஜி, 17-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

ரேஸ் - 1

மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே நடந்தது முதல் ரேஸ். ரேஸ் துவங்கியதுமே சீறிப் பறந்தது டாம் சைக்ஸின் கவாஸாகி பைக். ஆனால், சிறிது நேரத்தில் கவாஸாகியை, டுகாட்டி பைக்குகள் சூழ்ந்துவிட்டன. சில்வியோ குண்டோலி, டேவிட் கிக்லியானோ, கார்லோஸ் செக்கா ஆகிய மூவரின் டுகாட்டிகளும் சேர்ந்துகொண்டு கவாஸாகியைத் துரத்தின. ஆனால், அசராமல் ரேஸ் ஓட்டிய டாம் சைக்ஸ், மூன்று டுகாட்டி பைக்குகளின் சவால்களையும் சமாளித்து தொடர்ந்து முதல் இடத்தில் முந்திக்கொண்டு இருந்தார். இந்தப் போட்டா போட்டியின் இடையே, 17-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய முன்னாள் சாம்பியன் மேக்ஸ் பியாஜியின் ஏப்ரில்லா, விறுவிறுவென முன்னேறி டுகாட்டி பைக்குகளுக்கு சவால்விட ஆரம்பித்தது. மூன்றாவது இடத்துக்கு கார்லோஸ் செக்காவுடன் மோதிக்கொண்டு இருந்தார் மேக்ஸ் பியாஜி. எதிர்பாராதவிதமாக 12-வது லேப்பின்போது கவாஸாகியின் இன்ஜின் சொதப்பியது. இன்ஜின் திடீரென சீஸாகிவிட... முதல் இடத்தை இழந்து பரிதாபமாக ரேஸைவிட்டு வெளியேறினார் டாம் சைக்ஸ். கவாஸாகி இல்லாததால், டுகாட்டிகளுக்கு சவால்விட அங்கே யாரும் இல்லை. சில்வியோ குண்டோலி முதல் இடத்தையும், கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். மேக்ஸ் பியாஜி நான்காவது இடம் பிடித்தார். மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே நடந்த இந்த ரேஸில் ஜோனத்தன் ரியா, லியான் கேமியர், லியான் ஹஸ்லாம் உள்பட ஐந்து ரேஸ் வீரர்கள் விபத்தில் சிக்கி ரேஸில் இருந்து வெளியேறினர்.

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

ரேஸ் - 2

இரண்டாவது ரேஸ் செம த்ரில். வழக்கம் போல முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய டாம் சைக்ஸின் வேகம், லேப் போகப் போகக் குறைய... முதல் இடத்துக்கு முன்னேறியது ஜோனத்தன் ரியாவின் ஹோண்டா. முதல் ரேஸில் விபத்தில் சிக்கியதால், ஜோனத்தன் ரியாவுக்கு வலது கையில் பலத்த அடி. இருப்பினும், விடாமல் ரேஸ் ஓட்டிய ஜோனத்தன் ரியா, 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றார். சில்வியா குண்டோலி இரண்டாம் இடத்தையும், ஏப்ரில்லா அணியின் யூஜின் லாவெர்ட்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இத்தாலி

இத்தாலியின் மோன்ஸா நகரில் நான்காவது சுற்று மே 6-ம் தேதி நடைபெற்றது. மோன்ஸா நகரில் ரேஸ் போட்டிகள் நடக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவடைவதால், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் நடைபெற்ற மூன்று நாட்களும் திருவிழாதான். ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்டுவிட்டனர். நெதர்லாந்தில் பின்தங்கிய கவாஸாகியின் டாம் சைக்ஸ், இத்தாலியில் தன் வேகத்தைக் காட்டுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதை உண்மையாக்கும் விதத்தில், அதிகபட்ச வேகமாக மணிக்கு 339 கி.மீ வேகத்தில் பறந்து தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் டாம் சைக்ஸ்.

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

ரேஸ் - 1

டாம் சைக்ஸ் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தயாராக இருந்தார். ஆனால், மைதானம் தயாராக இல்லை. பேய் மழைக் கொட்ட... ரேஸ் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்பதற்கான சாத்தியமே இல்லை என்ற நிலையில், ரேஸ் துவங்குவதாக அறிவித்தனர் அமைப்பாளர்கள். ரேஸ் டிராக் முழுவதும் தண்ணீராக இருந்ததால், விபத்துகளுக்கான அறிகுறிகளுடனே போட்டி துவங்கியது. வேகமாக ஓட்டினால் நிச்சயம் விபத்தில் சிக்குவோம் என்று உஷாரான ரேஸ் வீரர்கள், யாரையும் முந்தாமலேயே மைதானத்தைச் சுற்றி வந்தனர். இரண்டாவது லேப்பின்போது, 'குளம் போல தண்ணீர் தேங்கிவிட்ட ரேஸ் டிராக்கில் இதற்கு மேல் ரேஸ் ஓட்ட முடியாது’ என வீரர்கள் அனைவரும் பிட் ஸ்டாப்புக்கு வந்ததால், ரேஸ் நிறுத்தப்பட்டது.

கவாஸாகியைத் துரத்தும் ஏப்ரில்லா!

ரேஸ் - 2

இரண்டாவது ரேஸ் நடைபெறுவதற்கு மழை கொஞ்சம் கருணை காட்டியது. முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய டாம் சைக்ஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற வீரர்கள் திணறினர். மிகவும் ஈரமான தரையில் வேகமாக பைக் ஓட்டினார் டாம் சைக்ஸ். இதற்கிடையே மழை மீண்டும் கொட்டத் துவங்கியது. மறு பக்கம் ரேஸும் தொடர்ந்தது. ஆனால், 8-வது லேப்புக்குப் பிறகு ரேஸைத் தொடர்வது ஆபத்து என நடுவர்கள் சொல்ல, சிவப்புக் கொடி காட்டப்பட்டு ரேஸ் நிறுத்தப்பட்டது. எட்டாவது லேப்பின் முடிவில் முதல் இடத்தில் இருந்த டாம் சைக்ஸ், இரண்டாவது இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூவின் லியான் ஹஸ்லாம், மூன்றாவது இடத்தில் ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டி ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து

மே 13-ம் தேதி இங்கிலாந்தின் டானிங்டன் பார்க் மைதானத்தில் ரேஸ் பந்தயத்தின் ஐந்தாவது சுற்று நடைபெற்றது. இங்கிலாந்திலும் டாம் சைக்ஸ்தான் ஹீரோ. தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து, முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் கவாஸாகியின் டாம் சைக்ஸ்.

ரேஸ் - 1

முதல் ரேஸ், ரோலர் கோஸ்டர் அனுபவம்போல இருந்தது. கவாஸாகியின் டாம் சைக்ஸ், பிஎம்டபிள்யூவின் மார்க்கோ மெலாண்ட்ரி, லியான் ஹஸ்லாம், ஹோண்டாவின் ஜோனத்தன் ரியா, ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி ஆகிய ஐந்து பேரும் மாறி மாறி முதல் இடத்துக்கு முன்னேற... செம த்ரில்.  இறுதியில் வென்றது பிஎம்டபிள்யூதான். கவாஸாகி, ஹோண்டா, ஏப்ரில்லா ஆகிய மூன்று பைக்குகளின் சவாலையும் சமாளித்த பிஎம்டபிள்யூ வீரர்கள் மார்க்கோ மெலாண்ட்ரி முதல் இடத்தையும், லியான் ஹஸ்லாம் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். டாம் சைக்ஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸில் வெறி பிடித்தது மாதிரி ரேஸ் ஓட்டினார் ஹோண்டாவின் ஜோனத்தன் ரியா. முதல் இடத்தில் சென்றுகொண்டு இருந்த இரண்டு பிஎம்டபிள்யூ பைக்குகளையும் இறுதி வரை விடாமல் துரத்திய ரியா, ரேஸின் கடைசி லேப்பில், கடைசி வளைவில் தனக்கு முன்னால் சென்றுகொண்டு இருந்த லியான் ஹஸ்லாமின் பைக்கைத் தட்டினார். இதில் தடுமாறிய ஹஸ்லாமின் பைக், முதல் இடத்தில் சென்றுகொண்டு இருந்த மார்க்கோ மெலாண்ட்ரியின் பைக் மீது மோதியது. இதில் இரண்டு பிஎம்டபிள்யூ பைக்குகளும் பறந்து போய் ரேஸ் டிராக்கின் வெளியே விழுந்தன. இதனால், ரேஸின் கடைசிக் கட்டத்தில் வெற்றி பெற்றார் ஜோனத்தன் ரியா. ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடத்தையும், டாம் சைக்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதுவரை ஐந்து சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி 128.5 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். டாம் சைக்ஸ் 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜோனத்தன் ரியா 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஏப்ரில்லா, கவாஸாகி, ஹோண்டா, டுகாட்டி, பிஎம்டபிள்யூ ஆகிய ஐந்து நிறுவனத்தின் பைக்குகளுமே முதல் இடத்துக்கு முட்டி மோதுவதால், இந்த ஆண்டு சூப்பர் பைக் ரேஸுக்கு இறுதி வரை த்ரில் குறையாது!