Published:Updated:

சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்

சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்

பிரீமியம் ஸ்டோரி

க்கோஸ்போர்ட் காரை நான்கு மீட்டர் நீளத்துக்குள் சுருக்கி விட்டது ஃபோர்டு. 'ஈக்கோ ஸ்போர்ட் நான்கு மீட்டர் நீளத்துக்கும் குறைவான சின்ன காராக இருக்காது’ என்று சொல்லிக்கொண்டு இருந்த ஃபோர்டு நிறுவனம், மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்து மனதை மாற்றிக் கொண்டது.

அதனால், ஈக்கோஸ்போர்ட் 24 சதவிகித வரியில் இருந்து தப்பித்து, 12 சதவிகித வரிக்குத் தாவி விட்டது. விலையைக் குறைக்க இன்ஜின் உள்பட பல முக்கிய பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கிறது ஃபோர்டு. எண்டேவர், ஃபியஸ்டா ஆகிய இரண்டு செடான் கார்களுக்கும் இடைப்பட்ட காராக, ஃபியஸ்டா பிளாட்ஃபார்மில் சென்னைத் தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்டு வருகிறது ஈக்கோ ஸ்போர்ட்.

சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்
சுருங்கிய ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட்

பட்டன் மூலம் காரை ஸ்டார்ட் செய்ய உதவும் கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் இதில் இருக்கும். மியூசிக் சிஸ்டத்தை குரல் மூலம் இயக்கும் வாய்ஸ் கமாண்ட், மலைப் பாதைகளில் சிரமம் இன்றி ஏற ஹில் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்ஸ், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என 20 லட்ச ரூபாய்க்கு மேலான எஸ்யூவிகளில் இருக்கும் அத்தனை வசதிகளையும் ஈக்கோஸ்போர்ட்டில் கொடுத்திருக்கிறது ஃபோர்டு. 5 பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய இந்த காரில் பொருட்கள் வைக்க 346 லிட்டர் டிக்கி உண்டு. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ என்பதால், எவ்வளவு பெரிய ஸ்பீடு பிரேக்கர் என்றாலும் பயப்படாமல் ஏறி இறங்கலாம்.

இந்தப் பெரிய காரில், 1 லிட்டர் ஈக்கோபூஸ்ட் இன்ஜினைப் பொருத்துகிறது ஃபோர்டு. பெட்ரோல் இன்ஜினான இந்த ஈக்கோபூஸ்ட் இன்ஜின், 1.6 லிட்டர் இன்ஜின்கொண்ட கார்களுடன் போட்டி போடுமாம். இது, லிட்டருக்கு 16 கி.மீ வரை மைலேஜ் தரும் என்கிறார்கள். இது தவிர, டீசல் இன்ஜின்கொண்ட மாடலும் வெளிவர இருக்கிறது. முதலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்கொண்ட மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

விலையைப் பொறுத்தவரை 10 லட்ச ரூபாய்க்குள் ஈக்கோஸ்போர்ட்டை விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது ஃபோர்டு!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு